மரம்
------------------------------------------------------------------ ருத்ரா
கலிஃபோர்னியாவில்
நான் நடைபயிற்சிக்கு செல்லும்போது
இது வரை வந்து
முட்டி விட்டுத்தான் திரும்புவேன்.
இது என்னத்தை
எனக்குச்சொன்னது?
இதனிடம் நான்
என்னத்தைச்சொன்னேன்?
அந்த அம்புக்கூடு போன்ற
இலைக்கூட்டத்தில்
எத்தனை குருட்சேத்திரங்களோ?
காற்றில் அவை
சிணுங்கும்போது
அந்த ரத்தம் சிந்திய போரை
சொட்டு சொட்டாக
என் மீது ஊற்றுகிறதோ?
மனிதனுக்கு
ஆசை ஆசை அத்தனை ஆசை!
அவன் மயிர்க்கண் தோறும்
அவனைக்
கழுவில் ஏற்றி
உயிர் உள்ளம் எல்லாவற்றையும்
கோத்துக்கொண்டு
அந்தப்பேய்
இன்னும் இன்னும் உச்சிக்குப்போகிறது.
எனக்கு அந்த
தாமிரபரணிக்கரை
மருத மரங்கள் நினைவுக்கு
வருகின்றன.
முண்டு முண்டாய் அடி மரம்.
கிளைகளும் இலைகளும்
குளிர் காற்றை என் மீது
சாமரம் போல் வீசுகிறது.
அதனுள்ளும் கொப்பளிக்குமா லாவா?
தெரியவில்லை.
இருந்தாலும் இலை இடுக்குகள் எல்லாம்
ஈடன் தோட்டத்து
இச்சை முத்தங்கள்
அந்த பச்சை இலைக்கொளுந்துகளில்!
=======================================================