ஞாயிறு, 30 ஜூன், 2019

இ.எம்.ஜோசஃப் எனும் இனிப்பான எரிமலையே.





இ.எம்.ஜோசஃப் எனும் இனிப்பான எரிமலையே.
=======================================================ருத்ரா.

அன்பான தோழரே!
எப்படி உங்கள் இதயத்தை
உங்களுக்கு எதிராக துடிக்கவைத்தீர்?
உங்கள் சொற்பொழிவுகளில்
இதயம் இல்லாத இரும்புகள் கூட‌
மனித நேயம் பற்றி சிந்தித்து
உருகத்தொடங்கிவிடுமே!
எப்படி நிகழ்ந்தது இது?
ஏன் நிகழ்ந்தது இது?
என்று நாங்கள் மனம் துடித்து
கேள்விகள் நீட்டினாலும்
சிரித்துக்கொண்டே விடையளிப்பவர்
அல்லவா நீங்கள்?
மார்க்ஸின் டயலக்டிகல் மெடீரியலிஸம்
எப்படி வேண்டுமானாலும் நிகழும்
என்பீர்களே.
பிறப்பு இறப்பு என்ற
முரண்பாடுகளின் விளைவுதானே இது
என்பீர்கள்.
ஆம்
பிறப்பு இறப்பு எனும் சமன்பாடுகளை
உடைத்து விட்டீர்கள்.
உங்கள் தொண்டும் உழைப்பும்
உழைக்கும் வர்க்கத்தின்
வேர்வைத்துளிகளில்...
அதிலிருந்து பிறக்கப்போகும்
ஒரு யுக சந்திப்பில்...
சுடர்ந்து கொண்டே இருக்கிறது.
கண்ணீரைக்கொண்டு
அந்த எரிமலையை
எப்படி அவித்துக்கொள்ள முடியும்?
புன்முறுவலுடன்
இனிக்கும் எரிமலையை
எப்போதும் எங்கள் முன்
நிழலாட விட்டு
வெறுமே ஓய்வு எடுக்கவா
நீங்கள் மறைந்திருக்கிறீர்கள்?
இல்லை..
உங்கள் பேச்சுகள் எல்லாம்
மூளி வானத்தில்
விடியல்களை செதுக்க வைக்கும்
வல்லமை பெற்றதல்லவா!
விடியல்களின்
விளிம்பு விழுதுகளை
எங்களோடு விட்டுச்சென்றிருக்கிறீர்கள்.
விடியட்டும்.
நாங்களும் உங்களோடு விழிப்போமாக!

========================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக