ஞாயிறு, 9 ஜூன், 2019

நீ எங்கள் இதயம்.


நீ எங்கள் இதயம்.
==============================================ருத்ரா

பாராளுமன்றமே !
நீ எங்கள் இதயம்
நாங்கள் அறிவோம் .
நீ அறிந்துள்ளாயா?
உணர்ந்துள்ளாயா?
உனக்குள்
உறைந்து கிடக்கும்
அந்த எதிரொலிகள்
இந்தியாவின்
இதயத்துடிப்புகளாமே!
எங்களுக்கு எத்தனை மொழிகள்!
அத்தனையிலும்
நீ உயிர்த்து நிற்கிறாய்.
ஆங்கிலேயன்
தனக்கு வேண்டுமென்று
நம்மையெல்லாம்
ஒரு கயிற்றில் கட்டவேண்டும் என்று
அந்த ஆங்கிலத்தையும்
நமக்கு
ஓதிவிட்டுப்போனான்.
அவன் ஓதிய மொழியில் தான்
புரிந்து கொண்டோம்
இவர்கள்
ஓதிய வேதங்களில்
சாதி மட்டுமே
மானுடத்தை
தீண்டாமை சாட்டையால்
தோலுரிய ரத்தம் வடிய
அடித்து தீர்த்துக்கட்ட பார்த்தது என்று.
அரசியல் சட்டம் அமைத்து
அரண் செய்த போதும்
அந்தக்காகிதங்களை  எல்லாம்
கரையான்கள் தின்றுவிடுமோ
என்ற அச்சம் மட்டுமே
இன்னும் இந்த
மசோதா மண்டபங்களில்
நிழல் காட்டுகிறது.
இந்தி ஒரு இனிய மொழி.
ஆழமான உருதுக்கவிதைகளின்
விதைகள் இதில்
நந்தவனமாய் அடர்ந்து இருக்கிறது.
மொழிப்பற்றாளர்கள் கூட
காமம் செப்பாது
களிக்கும் மொழி தான் இது.
ஆனால் இதன் பின்னே
ஆதிக்கம் எனும் கொல் இருட்டு
எங்கள் உயிரான தமிழை
அவித்து தின்ன முனையும்
அநீதி ஒன்று
நச்சு முள்ளாய் நெருடிக் கொண்டிருக்கிறது.
நம்மை ஆட்சி செய்யத்தானே
ஆங்கிலம் கொண்டு வந்தான்.
அதையே வைத்து
நம்மை நாமே ஆண்டு கொண்டு
ஒற்றுமை எனும்
நம்பிக்கைக்கயிறு
நமக்குள்ளே கட்டிக்கொண்டால் என்ன?
முரண்டு பிடிக்கும்
மூடக்கருத்துகள் நீக்கி
உலக மானிடத்தின் சாளரம் திறந்து
கணியன் பூங்குன்றனின்
உலகம் உய்விக்கும் அந்த
உயிர்ப்பாடலை ஒலிக்க விடலாம்
வாருங்கள்.
"யாதும் ஊரே. யாவரும் கேளிர்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன.."
இவ்வரிகளின்
எல்லா மொழி பெயர்ப்புகளிலும்
எனக்கு கேட்பது
தமிழின் இனிமை இனிமை
இனிமை மட்டுமே.

===================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக