ஞாயிறு, 16 ஜூன், 2019

பண்பு மிகு பா.ரஞ்சித் அவர்களே

பண்பு மிகு பா.ரஞ்சித் அவர்களே
===============================================ருத்ரா

ராஜராஜ சோழன் பற்றி
ஒரு திரைக்கதை
எழுதத்துவங்கியிருக்கிறீர்கள்.
ராஜ ராஜ சோழன் என்று இல்லை
எல்லா அரசர்களின் வரலாற்றுப்பாதையிலும்
எளிய மக்கள் பூச்சி புழுக்களாய்
நசுங்கியிருக்கும் சில
மூலைப்பக்கங்களும் உண்டு.
அதை தூசு தட்ட தாங்கள் கிளம்பியிருப்பது
ஒரு சமூகநீதியை நிலைநாட்ட‌
நீங்கள் அடிக்கும் ஆராய்ச்சி மணியா?
அந்த மணியொலியில்
நியாயத்தின் தாகம் இருக்கலாம்.
ஆனால்
நீங்கள் இந்த
"செட்டிங்க்" ஒன்றை உருவாக்கி
ஒரு ரஜனி படத்தை
ரஜனி இல்லாமலேயே
படம் காட்ட கிளம்பிவிட்டீர்களோ
என்ற ஐயம் தலை தூக்குகிறது.
திரை இல்லாமலேயே ஒரு "ஹொலோகிராஃபிக்"
சினிமா காட்ட முற்பட்டு விட்டீர்களா?
இன்றைக்கு அயோத்தியில் ராமர் கோயில்
கட்டப்போகிறார்கள்.
அதில் உள்ள அடி நெருப்பை
நீர்த்துப்போக தமிழ் நாட்டில்
இப்படி ஒரு படம் பிடித்து
ஒரு இயக்குநர் சிகரங்களின் சிகரம்
ஆகப்போகிறீர்களோ?
சாதி நெருப்பின் தீப்பொறி
அந்த ராமராஜ்யத்திலேயே இருக்கிறதே.
நான்கு வர்ணங்களில்
மூன்று வர்ணங்கள்
அந்த உயர்ந்த அறிவான "வேதத்தை"
கேட்கலாம் கற்கலாம்.
நான்காவதான உழவு வர்க்கமும்
மற்ற ஊழிய வர்க்கமுமான‌
சூத்திரர்கள் வேதத்தைக்கேட்டாலே
காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று
என்ற நியதி இருந்ததே!
அப்படியென்றால்
நீங்கள் எதிர்க்கவேண்டியது
ராஜ ராஜ சோழனை அல்ல‌.
ராமச்சந்திர பிரபுவை எதிர்த்து அல்லவா
அந்த முதல் ஆராய்ச்சி மணியை
அடித்திருக்கவேண்டும்?
அதே ராமனைத்தான்
இந்த சோழர்களும் பாராயணம் பண்ணினார்கள்
என்பதும் வரலாறு தான்.
ராமன் காலத்திலேயே எய்யப்பட்ட‌
அம்பு
நம் மார்பில் இன்னும்
துளைத்துக்கொண்டிருக்கிறது.
ஆனால் அது சாதி சடங்குகளின்
மராமரங்கள் வழியே
நம் மீது பாய்ந்திருக்கிறது
என்பதையும் நீங்கள் அறிவீர்களே!
ஆனாலும் ராஜ ராஜ சோழன் என்பவன் மீது
ஒட்டியிருக்கும்
ஆரியன் அல்லாத
திராவிடன் என்னும்
ஏதோ ஒரு வெளிச்சம் பாய்ந்திருக்குமோ?
அதை முதலில் இருட்டடித்தால்
திராவிடம் இல்லாத தமிழகம்
உருவாக்கும் இந்த வேள்வியை நடத்தலாமா
என்று
நீங்கள் ஏவப்பட்டிருக்கிறீர்களோ
என்ற ஒரு நியாயமான‌
அச்சமும் இங்கு படர்ந்திருக்கிறது.

======================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக