புதன், 12 ஜூன், 2019

தந்தையர் தின விழா

தந்தையர் தின விழா
=============================================ருத்ரா

தந்தை சொல் போல‌
மன் திறம் மிக்க
சொல் வேறில்லை.
மன்னு என்னும் மன்
எனும் சொல்லுக்கு
நிலைத்து இருத்தல்
என்றே பொருள்.
நம் உள்ளம் அதன் ஊற்று
யாவும் என்றும் நிலைத்து
பொங்குவது ஆகும்.
மன் எனும் வினையாகுபெயர்
தான்
மனிதன் என்ற சொல்லை
உருவாக்கியது.
தந்தையின் சொல்
அந்த மன் திறமே அன்றி
வேறு மந்திரம்
ஏதுமில்லை.
தந்தை என்றால்
மகனே
நான் இறந்தால்
பிண்டம் படைத்து வைத்து
கும்பிடுவாயா?
என்று கேட்கும்
மக்கிப்போன கருத்துக்களின்
பிண்டம் அல்ல.
மகனே
இந்த உலகமே உன்னுடையது.
இந்த வானம் உன்னுடையது.
ஏன்
இந்த பிரபஞ்சம் கூட‌
உன் அறிவின் கூரிய விரல்களால்
பிசைந்து பிசைந்து
புதிது புதிதாய் வார்க்க‌
இயல்வது.
"ப்ரேன் காஸ்மாலஜி" என்று
ஒரு கணிதத்தில்
சவ்வு மிட்டாய் செய்து
இந்த பிரபஞ்சத்தை
தோலுரித்துக்கொண்டிருக்கிறார்களே
விஞ்ஞானிகள்
அவர்களின் அறிவுக்கண்
உன் கண்களில் பதியம் ஆகட்டும்!
முன்னோர்கள் சொன்னதன்
வெளிச்சத்தை
உள் வாங்கிக்கொள்.
அந்த வெளிச்சத்தை விட்டு
வெறும் தீவட்டித்தடியனாய்
அடிமைகளாய்
இந்த ஆதிக்கத்துக்கு
பல்லக்கு தூக்காதே.
தந்தையின் இக்குரல்களே
பிள்ளைகள் நடக்கும்
காலடித்தடங்கள்.
வேறு காலடி அல்ல.
மூடத்தனத்தையும்
அறியாமையையும்
காவடி தூக்கும் தோள்களா
உந்தன் தோள்கள்.
அந்த இமயத்தில்
உன் அடையாளத்தை
பொறித்துவிட்டு வந்தார்களே
அந்த தந்தையர்கள் மண் இது!
அந்த வீரத்தோள்களே
நீ ஏறி விளையாடுமிடங்கள்!
அங்கே
தவம் செய்ய
கூப்பிடுகிறார்கள் என்று
காவி உடுத்திக் கிளம்பிவிடாதே.
அவர்கள் பேசும்
ஆன்மீகத்தை
உன் "ஆண்மீகத்தால்"
மறுத்து நில்.
மீசை முறுக்கி நில்!
அந்த "தந்தையின்"
குரல் இது.
நிமிர்ந்து நில் தமிழா!
நிமிர்ந்து நில்.

========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக