சனி, 1 ஜூன், 2019

"ஹேப்பி பெர்த் டே டு..."


"ஹேப்பி பெர்த் டே டு..."
=================================================ருத்ரா

ஒரு ஒற்றை ரோஜாப்பூவை
அதன் இலைக்கொத்துகளோடு
அவள் தன் விரல்களில்
நளினமாய் பிடித்துக்கொண்டே
நடந்தாள்.
ஜாக்கிரதையாகத்தான்
எதனோடும் மோதிவிடாமல்
எதிரே வருபவர்களின்
ஆச்சரியப்பார்வைகளையும்
தாண்டி வருகிறாள்.
ஹேப்பி பெர்த் டே சொல்லிவிடவேண்டும்
அவனிடம்!
ஏதோ ஒரு அகல்விளக்கை
அணையாமல் கைக்குள் குவித்து
வருவது போல்
தன் இதயச்சிமிழுக்குள்
இன்னொரு இதயத்தை
அமர்த்திக்கொண்டு...

அவனும் ஒரு ஒற்றை ரோஜா நாற்றை
பூவோடு அந்த சின்ன‌
வண்ண வண்ண வேலைப்பாடுகள்
இழைக்கப்பட்ட தொட்டியோடு
கைகளில் ஏந்தி...
எதிரே ஏதோ ஒரு
விளக்குக்கம்பத்தோடு மோதிக்கொண்டு
எதிர்த்து கவனமின்றி வருவோர்
சிலர் மீதும் மோதிக்கொண்டு...
அவர்களின்
கிறுக்குப்பசங்கடா என்ற‌
சொல்விருதுகளையும்
பரிசாக தன் சட்டையில்
ஆனால் எதையும் சட்டைசெய்யாமல்
குத்திக்கொண்டு....
வந்து கொண்டிருந்தான்
ஹேப்பி பெர்த் டே சொல்ல‌
அவளிடம்.

அது எப்படி இருவருக்கும்
ஒரே தினத்தில் "பிறந்த நாள்?"
அந்த ஆவலின் வியப்பில்
இந்த வானமும் வாய்பிளந்து
வேடிக்கை பார்த்தது.
மேலே இரண்டு பெரிய மேகப்பிழம்புகள்
இரண்டு உதடுகள் பிரிந்தது போல்
காட்சி அளித்தது.
அவனும் அவளும்
நெருங்கிக்கொண்டிருந்தார்கள்.
இதோ ஒரு மோதல்.
அவர்கள் மோதிக்கொண்டார்கள்.
அப்புறம் ஆரத்தழுவிக்கொண்டார்கள்.
"ஹேப்பி பெர்த் டே டு..
ஹேப்பி பெர்த் டே டு.."

..டு அவர் லவ்"

ஆம்
இன்று தான்
இதே பார்க்கில் தான்
இதே நேரத்தில்
இதே தூங்கு மூஞ்சி மரத்தின் நிழலில்
விழித்துக்கொண்டது
ஒரு காதல்
இந்த இரண்டு உள்ளங்களில்.

====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக