ஞாயிறு, 2 ஜூன், 2019

பட்டாம்பூச்சிகள்

பட்டாம்பூச்சிகள்
================================================ருத்ரா

பட்டாம்பூச்சிகள்
இரண்டு
கலந்து உறவாடியதை
கவிதை ஆக்கினேன்.
மரகதப் புல்விரிப்பை
மனத்துள் போர்த்திக்கொண்டேன்.
தர்பூசணி பழத்துண்டுகள்
விதைகளின் கண்களால்
தாகமெடுத்த மக்களை
உறுத்து விழித்தன.
வெயில் வெள்ளமெடுத்துப்
பெருகியதில்
மனிதர்களின் உடல்
அணைக்கட்டுகளில்
வியர்வையின் நீர்த்தேக்கம்
உயரம் மீறின.
தாகம் தீர்க்க வழியில்லை.
ஏரிகளின் வறண்ட படுகைகளில்
கானல் நீர் ஆடி அசைந்தன.
அந்த நீருக்குள்ளும்
அரசியலின் டி.எம்.சி
இத்தனை கன அடிகள் என்று
டிவிக்களின் அந்த‌
நான்குபேர்கள் பேசித்தீர்த்தனர்.
அடேய் கவிஞா!
சொற்களில் பிரியாணி தின்றது போதும்.
கொட்டிக்கவிழ்த்தாயிற்று ஓட்டுகளை.
கவிழ்ந்து கிடப்பது
வானத்தோடு சேர்ந்த விடியல்கள்.
அதைப்பார்த்தாயா?
இருட்டு வர்ணத்தில்
தேசக்கொடி பறந்ததில்
இமயங்கள் கூட‌
இடறி வீழ்ந்து
தலைகுப்புறக் கிடக்கின்றன.
கனவுகளே! லட்சியங்களே!
நீங்களும்
இடறி வீழ்ந்திடாதீர்.
வெள்ளைக்காரர்கள் போயினர்.
வெள்ளைக்காரர்கள் வந்தனர்.
அதென்ன சமூக நீதி?
அதெல்லாம்
புருஷ சூக்தம் பார்த்துக்கொள்ளும்.
சாதிகளின் வெள்ளை வர்க்கம்
திரை போட்டு விட்டது.
கவிஞன்
பேனா தேடினான்.
காகிதம் தேடினான்.
பயனில்லை.
மயானங்களின் ஆந்தைகள்
"மோக்ஷ கானம் " பாடின.

=====================================================



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக