வெள்ளி, 14 ஜூன், 2019

ஒரு காதல் கடிதம்


ஒரு காதல் கடிதம்
==========================================ருத்ரா

அன்பே..
உன் பெயரை எழுதக்கூட கூச்சம் தான்.
உன் பெயர் சொல்லிக்கூப்பிடுவதைக்கூட‌
அஞ்சி அஞ்சி தான் கூப்பிடுவேன்..
அது உனக்குத்தெரியுமே.
அது என்ன அச்சம் நாணம் படம் பயிர்ப்பு
என்று
எல்லாவற்றையும் நீங்களே எடுத்துக்கொண்டீர்களே
என்றெல்லாம் செல்லமாய்
என்னை அணைத்துக்கொண்டாயே
அன்றொரு நாள்...
ஆம்
அன்பே அன்பே...என்று
வாய் இனித்து அது கைவழியே
பேனா தொட்டு
உன் இதயம் தொட்டு
என் இதயம் தொட்டு...
...........
..........
அதற்குப்பிறகு காகிதம் இல்லை.
கரையான் தின்று முடித்திருந்தது.
பழுப்பு அடைந்த காகிதம்.
வருடமோ
தொள்ளாயிரத்து ஐம்பது அல்லது ஐம்பத்தொன்று
என்று அரைகுறையாய்
தெரிந்த எழுத்துக்கள்.
என் கசிந்த கண்களின் ஈரம் தொட்டு
எண்கள் கசங்கிப்போயிருந்தன.
காகிதம் எட்டாய் மடித்து வைக்கப்பட்டிருக்கிறது.
இன்னும் மடித்தால்
பொடி பொடியாகிடும்.
நான் எழுதிய கடிதத்தை என்னிடம்
கொடுத்துவிட்டு
அவள் எழுதிய கடிதத்தை அவளே
வந்து வாங்கிக்கொண்டு  விட்டாள்
ஆனால் அதை சுக்குநூறாய்
கிழித்துப்போட்டு விட்டு போய்விட்டாள்.
அவை காகித கந்தல் அல்ல.
எங்கள் இதயங்கள்.
அவள் விருட்டென்று சென்றுவிட்டாள்.
நான் அந்த காகிதச்  சுக்கல்களையெல்லாம்
பொறுக்கி எடுத்து
பொட்டலம் கட்டி வைத்திருக்கிறேன்.
அவள் எழுதியது
நெஞ்சில் கல்வெட்டு ஆகிப்போனது.
இந்த பொட்டலத்தில்
என் காதல்  "தொ ல் இயல் துறை"யின்
அலுவலகம் இருக்கிறது.
நிறைவேறாததே தான் என்றாலும்
"வேலண்டைன் டே "க்கள் தோறும் வந்து
அது தளிர்த்து விட்டு அல்லவா போகிறது!


 என் குழிவிழுந்த கண்களிலிருந்து
தேனருவியும் ஐந்தருவியும்
கசிந்து விழுந்து கொண்டே இருந்தது.


"போதும் போதும்.
பொக்கிஷத்தை மூடி வையுங்கள்"
என் மனைவி
வழக்கம்போல கடு கடுத்தாள்.
இந்த "தேவதாஸை"ப்பத்தி
எல்லாம் அவளுக்கும் தெரியும்.
இருந்தாலும்
என் மீது அவளுக்கு பிரியம் அதிகம்.
அது குறைந்தே இல்லை.
என் காதலை இவள் மீது தான்
நிழல் வீசிக்கொண்டிருக்கிறேன்.
இந்த ஒளியும் நிழலும்
ஒளிந்து விளையாடும்  வாழ்க்கையை
நானும் இவளும்
அனுபவித்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

"எந்திரியுங்கோ"
என் கையைப்பிடித்து
இவள் தூக்கினாள்.
அவள் ஸ்பர்சித்தாள்.

===============================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக