திங்கள், 2 அக்டோபர், 2017

நடக்கிறேன்

நடக்கிறேன்
===========================================ருத்ரா

மண்ணின் நீண்ட பாதையெல்லாம்
ரோஜாசருகுகள்.
அதன் மீது கால்வைத்து நடப்பதா?
தயங்கி தயங்கி நடக்கிறேன்.
சர்ரெக் என்ற அவற்றின்
ஒலிக்கூட்டங்களுக்குள்
தனியாயும் சில ஒலிகள்.
அது எங்கோ தொலைதூரகடலுக்குள்
நங்கூரமாய் விழுகிறது.
நான் நடக்கிறேன்.
பாதையில் பல்வேறு காலடிச்சுவடுகள்.
ரோஜாச்சருகுகள் மறைந்து போயின.
என் எண்ணம் எப்போதும்
உயர்ந்து கொண்டே போனதுண்டு.
யார் அந்த ராட்சத ரெக்கைகளை எனக்கு
ஒட்டவைத்தார்கள்?
என்று எனக்குத்தெரியாது.
அவற்றை சடசடத்த போது
அவற்றில் ஒட்டிக்கிடந்த‌
அந்த நட்சத்திரங்கள் தான்
தரையில் உதிர்ந்தன.கூடவே
அந்த ரோஜாசருகுகளும்!
வாழ்க்கையின் கசப்புகளுக்கு
நடுவில் தேன் துளிகளாக‌
அந்த ரோஜா சருகுகள்.
ஓரப்பார்வையாய் அவள் ஒரு நாள்
என்னைப்பார்த்தாள்.
அதன் பிறகு அவள் முழுமுகம் பார்த்து
அவள் மனம் நுழைய விரும்பி
நடையாய் நடந்திருக்கிறேன்.
இன்னும் தான் நடந்து கொண்டிருக்கிறேன்.
என் கூடு.என் குஞ்சுகள்.
என் இன்னுயிர்த்துணையாய்
அந்த பறவையையும்
தோள் மீது சுமந்து கொண்டு
நடக்கிறேன்.
நாட்கள்
இலைச்சருகுகள்..
இதயங்களின் சருகுகள்..
நடக்கின்றேன்.
அந்த ரோஜாசருகு களின்
உயிர் இரைச்சல்களை தாங்க முடியவில்லை.
பயணம் தொடர்கிறது.
நினைவும் இனிக்கிறது.
சுமையும் இனிக்கிறது.
கால் செருப்புகளில்
நினைவுத்தூசிகள் ஒட்டிக்கொள்ள‌
நடக்கிறேன்..ஆம்..நடக்கிறேன்.

===============================================


2 கருத்துகள்:

கருத்துரையிடுக