செவ்வாய், 3 அக்டோபர், 2017

வலியும் வழியும்


வலியும் வழியும்
=====================================ருத்ரா
பக்தி.....
ஏதாவது ஒரு கருத்து அல்லது
நம்பிக்கையை
மூளையில் ஏற்றி
அப்புறம் மூண்டெரி யும்
நரம்பு முடிச்சுகளில்
அடுப்பு மூட்டி
அதற்கு எதிரான கருத்துகளை
சுட்டெரித்து சாம்பல் ஆக்குவது
அல்லது
தன்னையே அந்த‌
தீயில் சுட்டுச்சாம்பலாக்கி
ஆவியாய்ப்போவதே  பக்தி ஆகும்.

பின்னது
தியாகப்போராளிகள்.
முன்னது
எதிர்கருத்தாளர்களை
ஒழித்துவிடும்
வெறிப்போராளிகள்.

இதே போல்
ஒரு மண்ணிலிருந்து
ஒரு இனம் விடுவிக்கப்படவேண்டும்..
தனி மனிதன் பசிக்கொடுமையிலிருந்து
மீள வேண்டும்...
என்ற உயர்வான நோக்கங்கள்
இந்த தீப்பந்தங்களை
உயர்த்தி
நம் வரலாற்றுப்பக்கங்களை
வெளிச்சத்தின் தீவுகள்
ஆக்கியிருப்பதும்
அதே வரலாற்றுப்பக்கங்களில்
வலம் வருகின்றன.

தனி மனித சுதந்திரத்தை
தூக்கிபிடிப்பது போல்
இந்த காட்டுத்தீ
மூளத்தொடங்கியபோது
எல்லோருக்கும்
அதில் ஒரு ஈர்ப்பு ஏற்படுவதும்
இயல்பே.
ஆனால் அதே தனிமனிதத்துவம்
சமுதாயத்தின்
சுவர்களை  யெல்லாம்
இடித்துத் தள்ளி விட்டு
அதன் ஆணி வேர்களையும்
பிடுங்கியெறிந்து
மூர்க்கத்தனமாக முண்டியடித்து
முன்னேறுவதும்
"சர்வைவல் தி   ஃ பிட்டெஸ்ட்"
என்ற பரிணாமக்கோட்பாட்டின்
உந்துதல் தான்.
தனிமனிதன் என்பவனை
உருப்பெருக்கியால்
கோடிக்கணக்கான மடங்குகள்
பெரிதாக்கி
விஸ்வரூபமாய் அணுகுவதே
சோசியல் டைனமிக்ஸ்.

ஆனால் ஒன்றுமே இல்லாத
ஒரு மூளி  உருவத்தை
புராணங்கள் என்னும்
கற்பனைக்குழம்பியத்தின்
சதுப்புக்காடுகளில்
அறிவை புதைய விடுவது
பக்தி என்றும்
அதில் முளையடித்த
சாதி சமய
வெறித்தனங்களைக்கொண்டு
அரசாளும் தந்திரங்களை
நிறுவி வைப்பதுமே தான்
இன்றைய
போலி அரசியல் பகடைக்காய்களாய்
இந்த ஒட்டுப்புழுக்கள் மீது
தினம் தினம் உருட்டப்படுகின்றன.
இதற்கு துணையாக
சுரண்டல் பொருளாதார அமைப்புகளும்
கார்ப்பரேட் ஊடகங்களும்
ரத்தினக்கம்பளங்கள் விரிக்கின்றன.

ஜனநாயக சிற்பிகளே !
விழித்தெழுங்கள்.
சும்மா விடியல் விடியல் என்று
கொட்டு முழக்குவதற்காக
இதை எழுதவில்லை.
ஒவ்வொரு தேர்தலும்
தொங்கவிடும் தோரணங்கள் எல்லாம்
உங்கள் "ரணங்கள்" தான்
என்னும் வலி
எப்போது புரிகிறதோ
அப்போதே உங்கள் வழி
உங்களுக்கு தெரிந்து விடும்!

==============================================








2 கருத்துகள்:

ராஜி சொன்னது…

அருமை

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…


பாராட்டுக்கு மகிழ்ச்சி. நன்றி.

கருத்துரையிடுக