சனி, 7 அக்டோபர், 2017

மின்னலின் கூட்டுப்புழு


மின்னலின் கூட்டுப்புழு
========================================ருத்ரா

மனம் உடல் அல்ல.
அதை ரத்த சதையாக்காதே.
ஒன்றுமே இல்லாமல் இருக்கும்
ஒன்றுக்குள்
ஒரு மின்னலின் கூட்டுப்புழு மனம்.
அது வெடிக்கும் சிறகுகள்
உணர்ச்சிகள்.
இதை உடல் குடல் என்று
உன்னுள் சுருட்டிக்கொள்ளாதே.
உன் பசியும் தாகமும்
இதன்  மைல்கற்களுக்கு
அப்பாற்பட்டது.
ஏன் பில்லியன் பில்லியன்
ஒளியாண்டு தூரத்தையும்
இதற்குள்
நீ சுருட்டி வைத்துக்கொள்ள முடியும்.
மனம்
அறிவு செதில்களால்
மூடப்படுவதுண்டு.
கற்பனைப்பிழம்புகளால்
இழை பின்னப்படுவதுண்டு .
இப்போது
சிந்தனையே மனம் ஆகிறது.
மனம் அறிவின் அடர்மழையை
பொழிகிறது.
இதில் முளைக்கும்
மூளைப்புல்வெளியே மனிதன்.
இயற்பியல் நோபல் பரிசு பெற்ற‌
அம்மூவர்கள்
இந்த அறிவுப்பிழம்பிற்குள்
தொடமுடியாத சிந்தனைச்சிகரங்களில்
உலவி வருபவர்கள்.
என் இளைய தலைமுறையே!
உன் உச்சி வானம்
உன் பயணத்துக்கு உன்னை
அழைக்கிறது.
இந்த கனியிதழ்க்காதலின்
உன் பாக்கெட் உலகங்கள்
உன் பாக்கெட்டுக்குள்ளேயே இருக்கட்டும்.
விண் வெளியின் அடுக்குகள்
"ப்ரேன் காஸ்மாலஜி" யின்
மாணிக்க ரோஜாக்களின்
அடர் வனமாய்
"ஒரு விஞ்ஞான மின் முறுவலை"
உன் முகத்தில் படரவிடுகிறதே
அதை
உன் காதலிக்கு
எப்போது பரிசாகக்  கொடுக்கப்போகிறாய்?
இளைஞர்களின் அகநூறு
வெறும் சீட்டுக்களின்
"ஆட்டின்" குறிகள் அல்ல.
ஆகாசங்கள் தாண்டிய ஆகாசங்களில்
அந்த "கணித சமன்பாடுகள்"
உன் தீர்வுக்கு காத்திருக்கின்றன.
நூலகங்கள் நுழை.
அவளுக்காக.
இந்த பஸ் ஸ்டாப்புகளே தாடி முளைத்து
தவம் புரிந்து உன்னோடு
காத்துக்கிடந்தது போதும்.

=====================================















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக