"மாநாடு"
_______________________________ருத்ரா
இப்படத்தின் கதாநாயகன்
சிம்புவா?
கதையா?
இயக்குநரா?
தயாரிப்பாளரா?
பட்டியலை நீட்டிக்கொண்டே
போகலாம்.
இதில் உள்ளே
நீறு பூத்த நெருப்பாய் இருந்து
உமிழ்ந்த
நம் சுதந்திர வரலாற்றுச்
சீற்றத்தின் லாவாவில்
இழையோடிய சிவப்புக்குள்
இருந்த பச்சையான உண்மையே
இப்படத்தின் கதாநாயகன்.
இந்திய தேசத்தின் எழுச்சி வடிவம்
பிளவு இல்லாதது.
பிசிறு இல்லாதது.
மதங்களின் அழுக்குகள் முகம் காட்டாத
காட்டாற்று வெள்ளம் அது.
சிந்திய ரத்தம்
இந்து இஸ்லாம்
என்ற வேறுப்பாட்டால்
ஆபாசம் அடைந்ததில்லை.
ஆனால்
நம் விடுதலை விடியலின்
விளிம்பில் எப்படி
அந்த கீறல்
மறுபடியும் ரத்தம் சிந்திய
விரிசல் ஆனது?
அந்த கோர விரல்களும் அதன்
கூரிய நகங்களும்
இன்னும்
இன்றும்
இந்த காவல் கோட்டங்களில்
ஏதோ ஒரு பசிக்காக
கூர் தீட்டிக்கொண்டிருக்கிறதே.
ஏன் அந்த மரண மூட்டம்
நம் ஜனநாயக உயிர்ப்பின் கழுத்தில்
காலை வைத்து மிதித்துக்கொண்டிருக்கிறது?
"ராம் அவுர் ரஹிம்" ஆக
இழைந்து வெள்ளைத்துப்பாக்கிகளை
அடித்து நொறுக்கிய
கரங்களிடையே
"ராம் யா ரஹிம்"
என்ற வேற்றுமை வெறி
எப்படி ஊடுருவியது?
இடிக்கப்பட்ட மசூதியின் சிதலங்களும்
புதிய கோவிலின் பளிங்குக்கற்களும்
அருகருகே
நம் சின்னங்களாக..
நம் வரலாற்று ஏடுகளின் மீதுள்ள
தூசிகளாக...
"மனிதம்" மொத்தமாய்
கல்லறைக்குள் அடங்கிப்போய்விடுகிற
ஒரு அதர்மத்தின் பிம்பமாக...
எச்சமாகிக்கிடக்கிறோம்.
இது தீயாய் நம்மை சுட்டுபொசுக்கும்
வெப்பமே
இந்த "மாநாடு".
________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக