கீறல்கள்
_____________________________________
ருத்ரா
புலியின் பற்களும் நகமும்
கூட
மழுங்கிப்போகும்
உமிழப்பட்ட சில சொற்களின்
நச்சுக்கூர்மையில்.
அவை சிற்றுளிகள்
அன்பின் கோடுகளை
விரித்து
சிற்பமாக்கும் போது
அந்த சொற்கூட்டம்
உயர்ந்த நாகரிகத்தின் அடையாளம்.
சொற்களே!
நீங்களும் கூட கவனமாயிருங்கள்
உங்களை
பிரசவித்துக்கொள்ளும் போது.
காலப்பறவையின் எச்சங்களாய்
நீங்கள்
எழுத்துக்களில்
மிஞ்சி விட்ட போது
அதுவே
வரலாறாய் யுகங்களுக்குள்
உயிர் பாய்ச்சிப் பாய்கிறது.
"கல் பொரு சிறு நுரை"
என்று
சுவடிகளில் கீறினான்
ஒரு தமிழ்க்கவிஞன்.
கல்லும் ஒரு சிறு நுரையும்
அந்த கடற்கரையின்
தருணங்களில் மோதி மோதி
மௌனமாய் ரத்தம் வடித்தது
காதலை வெளிப்படுத்தி.
_______________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக