"நான்"
________________________________ருத்ரா
என் இருப்பை உணர
"நான்"என்ற சொல்லை
உரித்து உரித்துப்பார்த்தேன்.
எக்சிஸ்டென்ஷியலிசம் என்று
அதை அழகாய்
சொல்லிப்பார்த்துக்கொண்டேன்.
பாம்பு போல்
அறிவின் என் நீள நாக்கை வைத்து
அந்த சொல்லை
நக்கி நக்கிப் பார்த்தேன்.
இலக்கணம் அடையாளம் செய்தது
"தன்மை" என்று.
அந்த "நானை"என் எதிரே
நிறுத்திய போது
"முன்னிலை" என்றது.
அதே "நானை" எங்கோ
தூரத்தில் வீசினேன்.
அது படர்ந்து பரந்து
படர்க்கை ஆகி
இந்த மண்ணை ருசித்தது.
மண்ணுக்குள்ளிருந்து
தலை நீட்டிய "நான்"களையெல்லாம்
வருடிக்கொண்டது.
மனிதன் நிற்கும் இடம்
இலக்கணக்குறிப்புக்குள்
அடைபட்ட போது
மனிதனின் உள்ளுக்குள்ளிருந்து
அடங்காத மனிதன்
ஆர்த்தெழுந்தான்.
சிந்தனை என்னும் அலைகளின்
பிழம்பில்
அவன் எங்கெங்கோ சென்றான்.
விண்வெளியின் அங்குலங்கள்
கோடி மோடி மைல்களின் கூட்டமாய்
ஒளியாண்டு என்னும் அலகுக்குள்
மிடையப்பட்ட போதும்
அவன் அறிவுச்செல்களின்
மின் துடிப்புகள்
தகவல் கடல்களின் திவலைகளில்
இழைந்து நின்றன.
கடவுள் என்ற சொல் அவன் மீது
எறியப்பட்ட போது
அவன் அறிவின் தேடல்
கொஞ்சம் காயம்பட்டது.
கொஞ்சம் மூளியாகிப்போனது.
விண்வெளிப்படலங்களில்
ஆற்றலின் அதிர்விழைகள்
ஆயிரம் ஆயிரம் முனையங்களாய்
முகம் காட்டின.
அதில் ஒரு முகமே எலக்ட்ரான்.
இப்போது
புரிந்து கொண்டான்
நான்
நீ
அவன்
எல்லாமே
இந்த துடிப்பில் தான்
எல்லாம் ஆகின.
ஒலிப்புகளை ஒலி பெருக்கி
அதிருத்ர யக்ஞம்
என்று
கூப்பாடு போட்டுக்கொண்டார்கள்.
பெரும் தீயைத்தான்
ருத்ரன் என்றும்
சமகம் நமகம் என்றும்
ஸ்லோகங்களால் உருப்பெருக்கினார்கள்.
அது
ஒரு பக்கம் அழிவு.
ஒரு பக்கம் ஆக்கம்.
இந்த விண்பிண்டத்தின்
மூன்று ஆற்றல்களை
விஞ்ஞானிகள் ஒருமை எனும்
சிம்மெட்ரிச் சிமிழுக்குள்
அடைத்தார்கள்.
நான்கு ஆற்றல்களையும்
அதாவது ஈர்ப்பு விசையையும்
அடைத்து வைக்க
சூப்பர் சிம்மெட்ரிக்குள்
விஞ்ஞானத்தின் விரல்களைக்கொண்டு
சூத்திரம் எழுதினார்கள்.
அது அண்டவெளிகளையும்
தாண்டிச்சென்றது.
மொத்தமும்
அதிலிருந்து பிதுங்கும் சவ்வுமே தான்
இந்த அண்டங்களின்
அலகுகள்.
பல்க் அன்ட் ப்ரேன் என்று
சமன்பாடுகள் காட்டினார்கள்.
ஸ்ட்ரிங்க் தியரி எனும்
அதிர்வெளி இழையங்களே
இங்கு கோடி கோடி
ஆற்றல் துகள்களாய்
விரிகின்றன.
தமிழில் உருவகமாய்
"பொன்னார் மேனியன் புலித்தோலை
அரைக்கு அசைத்தவன்"
என்றார்கள்.
ஹிக்ஸ் போசான்
எனும் விரிசடைத்தாண்டவன்
வீறு கொண்டு நிற்பதை
"அச்சங்களாக்கி"
அர்ச்சித்துக்கொண்டனர்.
நான் எனும் செதில்கள்
உதிரத்தொடங்கின.
அதிரத் தொடங்கின.
பக்தி உடுக்கையாகி ஒலித்தது.
அறிவு தூண்டில் விசியதில்
அகப்பட மறுத்ததும்
அகப்பட்டு அடங்கி வந்தது.
மனிதன் ஆண்டவன் ஆனான்.
ஆண்டவன் மனிதன் ஆனான்.
பொய்மை வர்ணங்கள்
மறைந்தே போயின.
மறைகள் எல்லாமும்
மறைந்தே பொயின.
________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக