வெள்ளி, 3 டிசம்பர், 2021

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி


____________________________ருத்ரா




மனிதா 


ஒரு நொடி போதும் உனக்கு


உன் சூழ்நிலைகளை


சுருட்டி


உன் பாக்கெட்டில் வைத்துக்கொள்ள.


உன் சிந்தனைப் பதிவில்


தடம் ஏற்படுத்திக்கொள்ள.


நீ 


என்றாவது எண்ணிப்பார்த்தது


உண்டா?


உன்னோடு 


உன் அருகே


இருப்பவர்கள்


மானிட நேசம் கொண்டவர்களா?


என்று.


இன்னும்


விலங்கியல் மிச்சங்களின்


விலங்கு மாட்டிக்கொண்டவர்களா?


என்று.


அப்படியென்றால்


நீயும் அந்த வட்டத்துள்


ஒடுங்கிக்கொண்டாயா?


என்று.


இந்த கேள்விகள் தான்


நம் திறவுகோல்கள்.


இவை நமக்கு இல்லாமல் இருப்பதே


வெளிச்சம் படாமல் நாம்


இருள் பூசி நிற்பதற்கு


காரணம்.


நாம் மழுங்கடிப்பட்டுக்கிடக்கிறோம்.


பலப்பல நூற்றாண்டுகள் 


கழிந்த பின்னும்


நாம் இன்னும் உணர்ந்துகொள்ளவில்லை


நம் காலத்தை தொலைத்து விட்டோம் 


என்பதை.


நம் மனிதமே நம்மை விட்டு


பிய்ந்து கிடப்பதை


நாம் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை.


நாம் விழித்துக்கொள்ள 


இமைகள் திறக்கும் போதெல்லாம்


போதை நனைக்கும் அருவிகளில்


சொர்க்கக் கனவுகளில்


துவண்டு போய் விடுகிறோம்.


என் கத்தி


இன்னொருவன் முதுகில்...


என் முதுகில்


இன்னொருவன் கத்தி...


இந்த நச்சுச்சங்கிலியை


பின்னிவைத்த சாதி ஏற்பாடுகளில்


மனிதம் தன் சவப்பெட்டியை


தானே சுமந்து செல்கிறது.


கடவுள் முகம் பார்க்கும்போது


அந்த கண்ணாடியில்


சைத்தான் தெரிகிறது.


சைத்தான் 


அந்தக்கண்ணாடியில்


கடவுளாய் 


ரூபம் காட்டுகிறார்.


உடன் பயணிக்கும்


என் இனிய நண்பனே!


அடித்தட்டில் நசுங்கிக்கிடக்கிறவர்களின்


பிதுங்கிய ஒலிக்கீற்றுகளில்


ரத்தம் பீறிடும் தருணங்களே


நம் காலச்சுவட்டின் கன பரிமாணங்கள்.


போதும்!


வில் அம்பு ஏந்திய அந்த ராமர்களை


அங்கே எங்கேயாவது ஒளித்து வையுங்கள்.


உங்கள் அழுக்குகள் அகற்றப்பட‌


"சலவைக்கல்" கட்டிடம் எழுப்புங்கள்.


வர்ணங்களை கொண்டு வதம் செய்யும்


சாஸ்திரங்களை அப்புறப்படுத்துங்கள்.


மனிதமுகம் யாவும் அன்பின் ரோஜா தானே.


சமூக ஒருமை சிந்தும் மகரந்தங்களில்


அந்த ரோஜா புன்முறுவல் செய்யட்டும்.


அந்த சமாதானபூச்செண்டு போதும் இனி.


எதற்கு இன்னும் அந்த ஆயுதக்கிடங்குகள்?


இனி எதற்கு


சாதிபடிமங்களில் வெறியைக்கொண்டு


குளிப்பாட்டும் கும்பமேளாக்கள்?


எல்லாம் தொலையுங்கள்!


பளிங்கு வானமாய் துடைத்து வையுங்கள்.


மானிடத்தின் விடியலுக்கு


அந்த கனத்த சன்னல்களை


திறந்து வையுங்கள்!


_________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக