சனி, 11 டிசம்பர், 2021

"எல்லோரும் நல்லவரே"

"எல்லோரும் நல்லவரே"

_________________________________ருத்ரா



அந்தக்காலத்தில்

"கிருஷ்ண பக்தி"யை

அந்த திரைப்படத்தில்

சொல்லடி பட்டு கல்லடி பட்டு

நைந்து நைந்து உருகிப்பாடிய‌

அந்த பெருங்கலைஞர்

பி யு சின்னப்பா அவர்களின்

குரல் வெள்ளத்தை

எவராலும் மறக்க முடியாது.

ஆனால் இன்றோ

ஒரு கிருஷ்ணனை 

இன்னொரு கோவிலுக்குள் நுழைத்துக்

குடம் குடமாய்

வெறித்தீயைக் கொண்டு குளிப்பாட்டி

இந்த கிருஷ்ணனை 

குளிர்விக்கப் போகிறார்களாமே!

அரசியல் சாசனத்தை

அந்த அரசியல் சாசனத்தின்

சந்து பொந்து ஷரத்துக்களைக்கொண்டே

சுக்கு நூறாய் கிழித்தெறிந்து விட்டு

இந்த மகாபாரதத்தை

கொலை பாதகம் எனும்

பளிங்கு கற்களாலும் 

சலவைக்கற்களாலும்

அடுக்கி அடுக்கி வெறும்

கோவில்களின் வறட்டுத்தூண்களில்

தூக்கி நிறுத்தப்போகிறார்களாமே!

உயிர்ப்பு நிறைந்த கோவில்களுக்குள்

மானிட நேயம் தானே

மயில் இறகுக்கிரீடமும் 

புல்லாங்குழலும் ஏந்தி

அமைதி கீதம் மூலம் 

கிருஷ்ண கானத்தை 

எதிரொலிக்க முடியும்?

கிருஷ்ணம் எனும் 

இந்த "கறுப்பு மனிதர்களின்"

உள்ளக்கிடக்கையை

அந்த வெள்ளை "எஜமானர்களா"

அடித்து நொறுக்க ஆவேசப்படுவது?

மனிதர்களை சாதி மத வர்ணம் பூசி

ஆதிக்க மிருகங்கள் தன் காலடியில்

போட்டு

மிதித்து நசுக்கிக்கூழாக்கவா

இந்த "சப்பளாக்கட்டைகள்"

இரைச்சல் போடுகின்றன?

"எல்லோரும் நல்லவரே"

என்ற அந்த மனிதத்தின் 

பூங்குரல் புகைந்து போகவோ

இத்தனை ஆர்ப்பாட்டங்கள்?

"ஹரே ராம! ஹரே கிருஷ்ண!

என்ற கீதங்களுக்குள்

இந்த கசாப்புக்கத்தியை 

செருகியவர்கள் 

யார்?யார்?யார்?.

கேள்விக்கணைகள்

சல்லடையாய்த் துளைக்க...

அந்த பாடல் வரி

நம் பாரதத்தின் குருத்தெலும்பிலும்

சிலிர்த்து நிற்கிறதே!

"எல்லோரும் நல்லவரே"


____________________________________________

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக