செவ்வாய், 30 நவம்பர், 2021

குரல்கள்

 குரல்கள்

____________________________ருத்ரா


ஆண்டவனே!

எங்கள் கூக்குரல்கள்

உனக்கு எட்டாத உயரத்தில்

நீ

ஊஞ்சல் ஆடுகிறாய்.

எங்கள் சிந்தனையில் 

நீ நிழலாடுவது மட்டுமே

மட்டுமே தெரிகிறது.

எங்களுக்கு விருப்பமான‌

புன்முறுவல்கள் பூத்த‌

ஒரு முகத்தை உன் மீது

மாட்டி வைத்து 

உன்னைத் தினம் தினம்

குளிப்பாட்டுகிறோம்

எங்கள் ஆராதனைகளால்.

எங்களுக்கு நீ புரிந்து கொள்ளும்

மொழியில் 

இல்லாவிட்டாலும்

உன்னை எங்கள் இதயத்துடிப்புகளில்

ஏந்தி

ஒலிகளை உன் மீது தூவுகிறோம்.

எவரோ 

ஏதோ 

சொன்னதை 

உன் மீது முழங்க வைக்கிறோம்.

"மனிதா....நிறுத்து.

உன் குப்பைகளை என் மீது

கொட்டுவதை நிறுத்து.

பன்றிகள் உறுமுவதும்

மாடுகள் கத்துவதும்

நாய்கள் குரைப்பதும்

ஏன்

இந்த சில்வண்டுகள்

ரீங்காரம் செய்வதும் கூட‌

எனக்கு புரிகிறது.

நீ ஒலிப்பது

எனக்கு புரியவில்லை.

உன் கூச்சல்களில்

சவுக்கடிகள் கேட்கின்றன.

ரத்த விளாறுகளில் தோல் உரிந்து

கிழிந்த இதயங்கள்

முனகுவதே கேட்கிறது.

மிதிக்கின்ற கால்களின் அடியில் 

குரல்வளைப் பிஞ்சுகளின்

நசுங்கிய குரல்கள் கேட்கின்றன.

நீ வீசியெறியும் சொற்கள் எல்லாம்

பாறாங்கற்களாய்

என்னையே 

கூழாக்கி

கூளமாக்கி..."

"ஐயோ...போதும் இறைவா!

புரிந்து கொண்டோம்

உன்னை நாங்கள் துன்புறுத்துவதை.

இந்தக்கல்லையும் மண்ணையும்

மதம்பிடிக்க வைத்து

நாங்கள் வெறியாட்டம் ஆடுவதை.

கடவுள் என்பது

அந்த அடிவானத்துக் கரை அல்ல.

அதற்கு நீந்த நினைக்கும்

சிந்தனை மட்டுமே."


____________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக