சொன்னார்கள்.
____________________________ருத்ரா
சொன்னார்கள்
அவர் அவதரித்த பின்
அதர்மங்கள் அழியும் என்று.
சொன்னார்கள்
அவர் தன்
அன்பினால் இந்த
ரத்தக்கறைகளைக்
கழுவினார் என்று.
சொன்னார்கள்
அவரின்
ஒரே வெளிச்சத்தால்
இருட்டுகள் யாவும்
கரையும் என்று.
சொன்னார்கள்
அவர் போதனைகளால்
மக்களின்
மயக்கங்களெல்லாம்
மாயும் என்று.
சொன்னார்கள்
ஆகாயத்தைப்பார்த்து
அவர்கள் சொன்னதே
வேதம் என்று.
விசுவாசம் காட்டுங்கள்
விசுவரூபம் காட்டுகிறேன் என்று.
என்னவெல்லாமோ
சொன்னார்கள்.
இன்னமும் இங்கு
ஒலிக்கின்றன
அழுகுரல்கள்.
இன்னமும் இங்கு
துடிக்கின்றன
கொலைப்பட்டு
மனித உயிர்கள்.
ஒளிந்து கொண்டிருக்கும்
கடவுளே
இது கண்ணாமூச்சி
விளையாட்டு உனக்கு.
நாங்கள் கழுமரங்களில்
வதை பட்டுக்கொண்டா
உனக்கு இத்தனை
வழிபாடுகளை செய்வது?
நம்பிக்கை தேடி
ஒரு ஊசிமுனையில்
இந்த கனமான உலகத்தை
நிறுத்திக்கொண்டா
எங்கள் கீதங்களைப்
பாடிக்கொண்டே
இருக்கவேண்டும்?
ஆதிக்க மிருகங்களின்
கோரைப்பற்களில்
இரையாகிக்கொண்டே
எங்கள் அவலங்களை
ஆரோகணம் அவரோகணம்
ஆக்கி
முழங்கிக்கொண்டிருக்கிறோமே!
பாழ் மண்டபத்து
வௌவ்வால்களாய்த்
தொங்கிக்கொண்டிருக்கிறோமே!
என்ன செய்வது?
எதைத்தேடுவது?
........
ஆம்!
அதைத்தான்
நானும் கேட்கிறேன்.
என்ன செய்வது?
எதைத் தேடுவது?
எதை அறிவது?
நம்மோடு தொங்கிக்கொண்டிருக்கிற
அந்த கடவுள் தான்
கேட்கிறார்.
காத்திருங்கள்
அவர் தேடித்தெளியும் வரை
அவர் அறிந்து முடிக்கும் வரை
வெறும்
தலை கீழ் வேதாளங்களாய்!
_______________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக