நெஞ்சு பொறுக்குதில்லையே...
_____________________________________ருத்ரா
"அஞ்சி அஞ்சி சாவார்..இவர்
அஞ்சாத பொருள் இல்லை
அவனியிலே...."
அந்த எரிமலைக்கவிஞன் கூட
மனம் நொந்து அல்லவா
இவ்வரிகளைப் பாடியிருக்கிறான்.
அந்த வஞ்சனைப்பேய்கள்
சாதி மத வர்ணங்களைப்
பூசிக்கொண்டு தானே
நம்மிடையே குத்தாட்டம்
போட்டுக்கொண்டிருக்கின்றன.
கோடிக்கணக்கில்
பணம் கொட்டி
கோவில்கள்
புத்துருவம் பெறுகின்றன.
அங்கே
இறைவன்
எந்த தூண் மறைவில்
ஒளிந்திருக்கிறான்?
எந்த துரும்புக்குள்
அலையடிக்கும்
பாற்கடலை பாய்விரித்து
படுத்துக்கொண்டிருக்கிறான்?
வேலைப்பாடும் கலை நேர்த்தியுமாய்
மிடையப்பட்ட
அந்த சலவைக்கல்லின்
எந்த சதைத்திரட்சிக்குள்
புடைத்துக்கொண்டிருக்கிறான்?
எங்கோ கிராமங்களில்
புழுக்களாய் நசுக்கப்படும்
சூத்திர ஜந்துக்களில்...
அல்லது
அதற்கு அடியிலும்
ரத்தச்சேற்றில்
குற்றுயிர் குலைஉயிராய்
முனகிக்கொண்டிருக்கும்
உயிர்ச்சிதலங்களில்...
மற்றும்
பிற மதங்களில் ஒலிக்கும்
வழிபாடுகள்
பாதுகாப்பற்ற கூடங்களில்
அடித்து நொறுக்கப்படும்
அவலங்களிலிருந்தெல்லாம் மீள..
நம்
"ஜன கண மன"..
சுருதி சேர்த்துக்கொண்டிருப்பதை
இந்தப்பேய்கள்
ஏன் விழுங்கிவிட ஆட்டம் போடுகின்றன?
இவர்களின் பிரம்மத்தின் குரல்
எங்கோ பாஷ்யங்களில்
ஒலி பரப்பிக்கொண்டிருப்பதைக்
கூட
அதில் கசியும் மனிதத்தின் ஒரே
ஆத்மாவைக்
கூட
கேட்க மறுக்கின்ற
அரக்கத்தனமான செவிகளை உடைய
ஒரு மூர்க்கம் அல்லவா
இங்கே மூட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது.
ஓ! பாரதி எனும் செந்தமிழ்ப்பிழம்பே!
"தனி ஒரு மனிதனுக்கு
உணவு மட்டும் அல்ல
அதன் வாழ்வு உரிமையும்
மறுக்கப்படும் என்றால்
அதன் தடைகளை
தட்டி நொறுக்கத்தயங்காதே"
என்று
நீ கோடு காட்டிவிட்டுப்போயிருக்கிறாய்.
அந்த இமய உச்சியில் நின்று
முழங்குகிறோம்!
வாழ்க மக்கள் ஜனநாயகம்!
வெல்க மக்கள் ஜனநாயகம்!
__________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக