புதன், 22 டிசம்பர், 2021

சிந்துபூந்துறை

 சிந்துபூந்துறை

_________________________________

ருத்ரா



ஒரு திருநெல்வேலிக்காரனின்

நினைவுக்குள்

பளிங்குப்படித்துறையாய்

நீண்டுகிடப்பது

சிந்து பூந்துறை.

கரைத் திட்டில் அந்த‌

பனங்குட்டி நிழல்களில்

இன்னும் சொட்டு சொட்டாய்

உதிர்ந்து கொண்டிருப்பது

புதுமைப்பித்தனின்

"கயிற்றரவு"

சிந்தனைகளின் 

எழுத்துச்சிதிலங்கள் தான்.

அந்த சிறுகதை 

பிளந்த உதடுகளில் வழியும்

சொல் ஒலிப்புகளில்

நியாய வைசேஷிக தத்துவங்கள்

கடவுளை

பனைமரத்து சில்லாட்டைகளில்

வடிகட்டித்தரும்

அந்த அரைகுறைப் புளிப்பு இனிப்பு

பதனீரை ஊறிஞ்சுவது போல‌

எழுதிக்காட்டியிருக்கிறார்

புதுமைப்பித்தன்.

சிந்துபூந்துறைக்கும் 

வண்ணாரப்பேட்டைக்கும் 

நடுவே படுத்துக்கொண்டு

ஊர்ந்து கொண்டிருக்கும்

தாமிரபரணியைக்கூட‌

தன் எழுத்தின் தீக்குச்சி கொண்டு

உரசி உரசி 

நெருப்பு பற்றவைத்து அதில் அவர் 

சமுதாயத்தின்

இனிப்பையும் கசப்பையும்

பரிமாறியிருக்கும் நுட்பமே

சிந்துபூந்துறையின் கருப்பை கிழிந்த‌

பனிக்குட உடைப்புகள் தான்.

அவர் எழுத்துக்களின் பிரசவம் 

ஒரு ஏழைக்குமாஸ்தா வீட்டு

கிழிந்த பாயில் 

அரங்கேறும் வெப்பத்தில்

ஒரு உயர்வான இலக்கியம்

குவா குவா என்ற 

ஒலிப்புகளோடு ஒரு

புதிய யுகத்தின் முகத்தை

பதிவு செய்யும்.

ஒவ்வொரு தடவையும் அந்த‌

சிந்துபூந்துறை ஆற்றில்

நான் முக்குளி போடும்போதெல்லாம்

ஏதோ ஒரு புதிய‌

முலாம் பூசி எழும் ஓர்மையை

தைத்துக்கொண்டு வருவதையும் 

உணர்கின்றேன்.

அந்த ஆற்றுக்குள்ளும் ஒரு

ஆற்றுப்படை 

ஊர்வலம் போவதை

நான் படித்து படித்து

அந்த பனங்காட்டு சலசலப்புகளின்

பனைச்சுவடிகளில்

பதிந்து கிடப்பதை பிய்த்துக்கொண்டு

வெளியேற முடியவில்லை.


________________________________________________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக