வாழ்ந்தே தீருவோம்.
__________________________________ருத்ரா.
காசிக்குப் போ!
கர்மம் தொலைக்க
அல்லது
கர்மம் தேட.
இயங்குவது தானே
கர்மம்.
வாழ்க்கை எனும் இயக்கம்
என்பதே
சமுதாய ஓட்டத்தில்
இயைந்தது தான்.
சமுதாயத்தை பிய்த்து எடுத்துவிட்ட
மனிதம்
அல்லது மனிதம் தொலைத்த
சமுதாயம்
இரண்டும்
அந்த கங்கையில் எறியப்படும்
பிணம் தானோ?
நம் ஜனநாயகம் கூட
ஒரு கங்கைக்கரையில் தான்
நின்று கொண்டிருக்கிறது.
ஆறாக தெளிந்த சிந்தனையாக
ஓட வேண்டியதில்
ஏன் இத்தனை அறியாமைக்குப்பைகள்?
நாளை கணினி எனும்
எலிப்பொறிக்குள் நுழையும் முன்
வெறும் மசால் வடையை
கொறிக்க ஓடும் எலிகளாகவா
நாம் இன்னும் இருப்பது?
மானிட நீதியும் உரிமையுமே
நம் வெளிச்சங்கள்.
பட்டன் தட்டும் நம் கைவிரலில் தான்
நம் வாழ்க்கை மதம்
பொதிந்து கிடக்கிறது.
இருட்டை மட்டுமே
பூசித்துக்கொண்டிருந்தால்
நம் கிழக்குகள்
ஒளியை இழந்த உழக்குகள்
எனும் பொய்மை வரலாற்றில்
புதையுண்டு போகும்.
நம் வாழ்க்கையை நாம்
உரிமையோடு
வாழ்ந்தே தீரவேண்டும்
என்னும்
இந்த மதத்தைத் தவிர
எந்த மதமும்
நமக்கு சம்மதம் இல்லை.
_____________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக