என்... இ சி ஜி வரிகள்
__________________________________ருத்ரா
இதை விட்டு விட்டுப் போய்விட்டாய்.
சந்தர்ப்பம் கிடைத்தது என்று
தூக்கிக் கொண்டு வந்து விட்டேன்.
அந்த சிறிய நாய்க்குட்டி
வெல்வெட் உடம்பில்
சிலிர்த்துக்கொண்டே இருந்தது.
எத்தனை நாளாய் காத்திருந்தேன்.
திருட்டுப்பழி
ஏதோ ஒரு காக்காவின் எச்சம் போல்
என் மீது விழுந்த போதும்
பரவாயில்லை என்று முகத்தைத்
துடைத்துக்கொண்டேன்.
இருப்பு கொள்ளவில்லை.
தொலைபேசியில் அதைப்பற்றி
உன்னிடம் விசாரித்தேன்.
முகத்தோடு முகம் வைத்து
முத்த மழை பொழிவேனே!
என் இதயத்துள் எல்லாம்
இனி வெறும் சஹாரா பாலைவனம் தான்
அதை நீ பார்த்தாயா
என்று கேட்டாய்.
நான்
மனத்துள் சொல்லிக்கொண்டேன்.
இது தானே
என் இதயம் அருகே இருந்து
இன்னொலிப்பிஞ்சுகள் மூலம்
உன்னை
என் மீது யாழ் வாசித்துக்கொண்டிருக்கிறது.
அப்படியா?
தெரியாது என்றேன்.
ஒரு வாரம் போய் விட்டது.
அந்த வெல்வெட் குரல் இழைகளில்
அவள் தான்
வழ வழத்து தன் உள்ளம் வருடினாள்.
ஒரு நாள் எனக்கே
அவள் படும் துயரம்
பிசைந்து பிசைந்து உருட்டித்தள்ளியது.
அவளை வியப்பில் ஆழ்த்த
திடீரென்று
அதை அவளிடம் கொண்டுபோய்
கொடுத்து விட்டேன்.
அவள் முகத்தில்
ஆயிரம் மத்தாப்பூக்களின் நந்தவனம்!
ஒன்றுமே சொல்லத்தோன்றவில்லை
அதை படக்கென்று
தன் ரவிக்கைக்குள் செருகிக்கொண்டாள்.
எனக்குத்தான்
அது குலைப்பது
இந்த வானத்தை முழுவதுமே
கிடுகிடுப்பது போல் இருந்தது.
உனக்கு கேட்கிறதா?
என் செல்லப்பொமரேனியனே!
என் கைகளில் வைத்து
எப்போதும் கொஞ்சிவிளையாட
உன்னைத்தானே என் இதயக்கார்ட்டூன் போல்
இந்த கைக்குட்டையில்
பூத்தையல் போட்டு வைத்திருந்தேன்.
அவள் முகம் மகிழ்ச்சியில்
பூரித்துக்கொண்டே இருந்தது.
அவள் கைக்குட்டையை
எடுத்து வைத்துக்கொண்டால்
மலர் போன்ற
அவள் எண்ணத்துடிப்புகளை
விஸ்வரூபமாக்கி
மீண்டும் அப்படியே
அதில் என் துடிப்புகளை மடித்து வைத்து
அதை என் அருகே
அமர்த்தி வைத்த
"போன்ஸாய்" ஆக்கி
அதன் மின்னல் நிழல்களில்
ஆழ்ந்திருப்பேன் என்று தான்
நினைத்திருந்தேன்.
இப்போதும் கேட்கிறது
காது மடல்களை
உடுக்கையாக்கி
சன்னக்குரலில் குலைக்கும்
அதன் அமுத ஒலிகள்..
அந்த தையல் கோட்டு ஓவியத்தின்
வரிகளில்
என் இ சி ஜி வரிகள்...
__________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக