"இந்தக்கொரோனா என்பது...."
_____________________________________________
ருத்ரா
"இந்தக்கொரோனா என்பது...."
சடக்கென்று விஸ்வரூபத்தில்
முள்ளு முள்ளாய் முன் வந்தது
கொரோனா.
எழுதத்துவங்கிய என் பேனாவை
பிடுங்கிக்கொண்டது.
"ஓ! மனிதா
நான் ஏன் பிறந்தேன்?"
எம் ஜி ஆர் பாணியில்
கேட்டது.
அவர் போல்
"புஷ்குல்லா"வைத்திருக்கவில்லை
முள் கிரீடம் சூட்டிக்கொண்டு
அமர்த்தலாக கேட்டது.
"நீங்கள் இன்னும்
மனிதர்களாக நடித்துக்கொண்டிருக்கிறீர்கள்
மனிதர்களாக வாழ முற்படுவதில்லையே
என்னைவிடக்கொடிய நோய்
வறுமை..
கோடிக்கணக்கான மனிதர்களை
அது தின்று முழுங்கிக்கொண்டிருக்கிறது.
அது பற்றிய திடுக்கிடல்
கொஞ்சம்கூட உங்களிடம் இல்லை.
ஊரடங்கி
உள்ளடங்கி
அந்த மோட்டுவளையை
பார்த்துக்கொண்டிருக்கும்போதாவது
உங்கள் சித்தாந்தம் கூர் தீட்டிக்கொள்ளாதா?
வரலாற்றுக்கட்டாயத்தில்
கொஞ்சம் விழித்தெழுந்து
விறுவிறுப்படைந்தீர்களே.
தனிப்பட்ட சுதந்திரத் தினவுகளின்
குத்தாட்டங்களில்
சமுதாய நாடித்துடிப்புகளை
கோடரி கொண்டு துண்டித்து
விட்டீர்களே!
இந்த அநியாயம் அடுக்குமா?
இந்த அநீதிகள் தான் வெல்ல வேண்டுமா?
இப்போது
வாழ்வாதாரம் பற்றி
முனகுகின்றீர்களே.
அந்த பிரம்மாண்ட நூலகங்களை
கிண்டி கிளறி
ஒரு பேரொளியாக
மூலதனம் என்றொரு நூல் செய்தானே
அந்த சமுதாய குவாண்டம் மெக்கானிக்ஸை
சொன்ன மானிட விஞ்ஞானி மார்க்ஸ்.
அவன் சொற்களை மறந்து போனது ஏன்?
அந்த கொரோனா
சொற்பொழிவாற்றிக்கொண்டே இருந்தது.
இந்த மனிதர்கள்
முழுக்கவசங்களில்
மூச்சடங்கி மண்ணின் குழிக்குள்
விழுந்து கொண்டே இருந்தார்கள்
அல்லது
எரிந்து கொண்டே இருந்தார்கள்.
கோரோனாவின்
இந்த சிவப்பு சுப்ரபாதம்
மனிதர்களின் செவிகளுக்குள்
பாயுமா? பாயாதா?
இதற்கு இன்னும்
எத்தனை "வெர்ஷன்களில்"
இந்த கொரோனா
அவதாரங்கள் எடுக்கவேண்டுமோ?
கோவாக்ஸின்களும்
கோவிஷீல்டுகளும்
இந்த வைரஸ் பஜனைகளுக்கு
சப்ளாக்கட்டைகள்
தட்டிக்கொண்டே இருக்கின்றன!
___________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக