தெய்வங்களே
_________________________________
(04.00PM / 11.05.2021 Chennai 600044)
என் தம்பியின் மனைவியை
அந்த கொரோனாக் கொடூரப் பூனை
எலியைக் கவ்வுவது போல்
கவ்விக்கொண்டு ஓடிவிட்டது.
அந்தப்பாசக்காரத்தாயின்
பாசம்
தனக்கு வேண்டுமென்று அது
தன் பொந்துக்குள் கொண்டுபோனதோ?
இங்கே
அவள் மகன்கள் பேரன் பேத்தியர்
துன்பக்கடலில் மூழ்கித்தவிக்கின்றனர்.
என் தம்பியும் மருத்துவமனையில்
துயர் உழன்று கொண்டிருக்கிறான்.
அவன் மூச்சுகளை
அந்த அமுதவாசலின் ஆக்சிஜன் சிலிண்டர்தான்
இன்னும் குத்தகை எடுத்து வைத்திருக்கிறது.
அவன் கணீர்க்குரலும் பளீர் சிரிப்பும்
மீண்டும் நிச்சயம் எனக்கு
கிடைத்துவிடும் என்ற கனமான நம்பிக்கையை
என் துன்பக்கடலில்
நங்கூரம் பாய்ச்சி நின்று கொண்டிருக்கிறேன்.
பாசமும் நேசமும் கொண்டு
எங்களை
ஊன் உருக வைக்கும்
அவன் மனைவியின் இழப்பைச்சொல்லும்
வரிகள் எவையும்
அர்த்தம் இழந்தவை.
வெறும் மலட்டுத்தனமான சொல் விரிப்புகள்.
உள்ளுர்ணவுக்குள் அந்த சோகத்தீ
சொக்கப்பனை கொளுத்துகிறது.
உள்ளத்தின் ஆழத்தில்
துயரம் கொதிக்கும் அக்கினிக்குழம்பை
அள்ளி வீசுகிறது.
தெய்வங்களே!
உங்களுக்கு தீபங்கள் வேண்டுமென்றால்
அன்பின்
இந்த தெய்வத்தையா கொளுத்துவீர்கள்?
இப்படிக்கு
சோகம் தாங்காத
இ.பரமசிவன் மற்றும்
ப.கஸ்தூரி.
________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக