இரண்டாம் அலை
______________________________________________
ருத்ரா
அன்பான கொரோனாவே!
எங்கள் உயிரினும்
மேலான கொரோனாவே!
எங்கள் உயிரை தந்து விட்டு
சென்றால் தானே
எங்கள் உயிரினும் மேலான...என்று
உனக்கு வாழ்த்துமடல் நாங்கள்
எழுதமுடியும்.
எங்கள் நுரையீரல் கொத்துக்களை
கொத்துக்கறி போடும்
உன் மூர்க்கத்தனத்தை
மூடி வைத்துவிட்டு கொஞ்சம் யோசி!
வெறும் கல்லான "செல்லா"நீ.
உன் மண்டைக்குள்ளும்
கோடியிலும் கோடியாய்
கொஞ்சம் துளி மூளையிருக்குமே!
அதை வைத்து சிந்தி.
பரிணாமம் என்ற
அதிவிரைவு எக்ஸ்பிரஸ்ஸில்
நீயும் எங்களோடு தானே பயணிக்கிறாய்
நாம் இந்த
வளர்ச்சியில் ஒரு மலர்ச்சியை நோக்கித்தான்
விரைகிறோம்.
இந்த உயிர் மகரந்தங்களில் ஒரே ஒரு
ஒற்றை ரோஜாவைத்தானே
நாம் கையில் ஏந்தி செல்கிறோம்!
நம்மைப்படைத்ததாக சொல்லப்படும்
ஆண்டவனுக்கு
நம் மலர் முகத்தின் வெற்றியைத்தானே
தரப்போகிறோம்.
நீயே ஏன்
மானிட உயிர் எனும்
மாணிக்கசுடரை அணைத்து
உன்னையும் இதில்
அணைத்துக்கொள்ளபோகிறாயே!
இது சரியா?
இது முறையா?
விவாதத்தை தொடர்ந்து கொண்டே போகிறேன்.
"நிறுத்து"
அது கத்தியது!
பசுமை கவித்து
இந்த உலகை... உன்னை
தன் ஆக்சிஜன் சிறகு கொண்டு
அடைகாத்துக்கொண்டிருக்கிறதே
அந்த வனப்பறவையை
உன் பேராசைக்கோடரியால்
சிதைத்துக்கொண்டிருந்தாயே.
நீ
உன் பாசாங்கு பிராணாயாமத்தை
எல்லாம் இப்போது
நிறுத்திவிட்டு
ஆக்சிஜன் ஆக்சிஜன் என்று அல்லவா
ஜபித்துக்கொண்டிருக்கிறாய்.
நான் யோசிப்பது இருக்கட்டும்.
இப்போது
நீ அல்லவா யோசிக்கவேண்டும்.
சரி.நீ யோசி.
அதற்காகவாது
உன்னை விட்டு விலகுகிறேன்.
என்றது.
அந்த தினசரி
புள்ளிவிவர வளைகோடு
மட்டையானது..மடிந்து கொண்டது.
மனிதன் தப்பித்துக்கொண்டான்.
மகிழ்ச்சியோடு கூறினான்.
"உன்னை
வைரஸ் என்று
கொச்சைப்படுத்த மாட்டேன்.
நம்பிக்கை
அறிவு
எனும் இரண்டு இழைகளின்
டி என் ஏ மற்றும்
ஆர் என் ஏக்களின்
தங்கச்சங்கிலியாய் உன்னை
தாங்கிப்பிடிப்பேன்.."
_______________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக