செவ்வாய், 25 மே, 2021

தம்பி

 


1 நபர் இன் படமாக இருக்கக்கூடும்
செங்கோடி இசக்கி




தம்பி

____________________________________ருத்ரா



மெரீனா அலைத்திவலைகளா?

இல்லை

சென்னையின் தூசிப்படலங்களா?

தம்பி!

நீ

இப்போது எதில் இருக்கிறாய்?

எதில் இருந்தாலும் சரி!

வருவதற்கும் போவதற்கும் 

ஒரு காரணம் வேண்டும்.

வருவதற்கு அம்மா அப்பா.

போவதற்கு ஒரு கொரோனா.

கண்ணதாசன் வரிகளைக்கொண்டு

பிழிந்து பிழிந்து

இந்த வாழ்க்கை மிச்சத்தின்

சாறு பிழிந்து கொண்டிருக்கிறேன்.

எத்தனை எத்தனை நிகழ்வுகள்?

உன்னிடமிருந்து என் மீதும்

என்னிடமிருந்து உன் மீதும்

அந்த கல்லிடைக்குறிச்சி

தாமிரபரணி நீர்ப்பளிங்குத்திவலைகள்

வீசி வீசியெறிந்து விளையாடியிருக்கின்றன.

அம்பாசமுத்திரத்தின் வண்டிமரிச்சான்

சிலைகளாகட்டும்

அந்த ஊமை மருதங்களின்

ஊடே 

முண்டைக்கண்ணும் துருத்திய நாக்குமாய்

பயமுறுத்தும் 

சுடலைமாடன்களாகட்டும்

நமக்கு மைல்கற்கள் நட்டுவைத்து

நம் வாழ்க்கை சரித்திரத்திற்கு

அடையாளம் காட்டிக்கொண்டிருக்கின்றன.

சின்ன வயதுகளின் பிஞ்சு வெள்ளரிக்காய்களாக‌

அந்த பிரகாசத்தின்

மின்னல் பிஞ்சுகளை இன்னும்

தின்னுவதற்கு கொடுத்துக்கொண்டு தான்

இருக்கின்றன.

எத்தனை சண்டைகள்?

கல கல வென்று எத்தனை சிரிப்புகள்?

சிந்துபூந்துறை

ஆற்றின் விளையாட்டுகளில்

நம் ஒலிம்பிக் மைதானம் இன்னும்

நம் நினைவுகளின் சுடரேந்தி 

சென்று கொண்டிருக்கிறது.

பல்லாங்குழியின் ஒவ்வொருகுழியாக‌

அந்த ஞாபகச்சோழிகள்

நிறைந்து நிறைந்து செல்கின்றன.

நாம் அன்று அரங்கேற்றும் "கள்ளக்குழியல்கள்"

அதாவது வீட்டுக்குத்தெரியாமல் குளிப்பது..

நம் சாகசங்களாய் இன்றும் நம் முன் 

தோன்றுகின்ற‌ன.

நம்ம ஊர் கல்லிடைக்குறிச்சி வாய்க்காலில்

தளச்சேரிக்கு செல்லும் பாலத்திலிருந்து 

விழுந்து

கோட்டைதெருவைத்தொடும்

வாய்க்கால் வரை அந்த‌

நீரின் ஓட்டத்திலேயே சென்று களிப்பது.

வழியில் இடறும் பாசிகள் 

நீள் கூந்தல்சுருள்களாய்

நம்மை சுருட்டிய போதும்

கரையில் நிற்கும் பனங்குட்டிகள்

அதனோடு தழுவி வரும்

பச்சைப்புல் வரப்புகள்

திருவாடுதுறை மடத்தின் தோப்புகள்

அந்த படிக்கட்டுகள்

எல்லாம் நமக்கு கையசைத்து

உற்சாகமூட்டுமே.

இறுதியில் வெற்றியில் திளைத்த‌

நமது அந்த மகிழ்ச்சிகளுக்கு 

ஏது விலை?

ஏது விருதுகள்?

எதை மறப்பது?எதை நினைப்பது?

இப்போதும்

கண்ணீரின் வாய்க்காலில்

மிதந்து கொண்டுதான் இருக்கிறேன்.

"அம்பை கிருஷ்ணா டாக்கீஸ்"

தம்பி 

இந்த மூன்றெழுத்தில் 

நம் மூச்சுகள் 

பலீஞ்சடுகுடு ஆடியதை

மறக்க முடியுமா?

நம் பரீட்சை விடைத்தாள்கள் மற்றும்

பேப்பர்கள் எல்லாம்

எடைக்குபோட்டு

காசு சேர்த்து சினிமாவுக்கு 

செல்லும் நம் "சினிமா"

உன் ஆவிக்குள் படம் காட்டுவதை

நீ

போட்டுப்பார்க்கிறாயா?

அவசரம் அவசரமாய்

அந்த வாய்க்கால் கரையோரம் ஓடி

ஆற்றுப்பாலம் வழியே

அந்த சாலையில்

மருதமரங்களோடு மனம்விட்டு 

பேசிக்கொண்டு

மீண்டும் அவசரமாய்

இரண்டு கல் நட்டிய அந்த‌

தொண்டு வழியே வரப்புகள் ஓடி

சோலாப்புரம் ஊருக்குள்

புகுந்து

மூச்சிரைத்து மூச்சிரைத்து

கடைசியாய்

கிருஷ்ணா டாக்கீஸை

தரிசனம் செய்யும் போது..

ஆகா!

அருகில் இருக்கும் 

கிருஷ்ணன் கோவில் கூட‌

நமக்கு ஒரு பொருட்டே அல்ல.

அப்பாடா! நல்லவேளை

இன்னும் படம் போடவில்லை

என்று 

மூச்சைப்பிடித்துக்கொண்டு

நுழைவோமே!

அந்த மூச்சுப்பூக்களில்

தெரியும் நம் சரித்திரத்தின் வாசனையை

இறுதியாக அன்று பிடித்துக்கொண்டாயா?

அரக்கத்தனமான அந்த "ஆக்சிஜனுக்கு"

இரக்கம் என்பது தான் இம்மியும் இல்லையே!

தம்பி..தம்பி..

குமாரகோவில்  சுப்பிரமணியசாமி கோயிலில்

அந்த சப்பரவண்டியை

கால்களால் நகர்த்தி நகர்த்தி

எங்கோ கொண்டுபோய் விடுவோமே!

இன்னும் அந்த நினைவில் 

அந்த முருகனுக்கு

ஆண்டு தோறும் "சப்பர அலங்காரத்துடன்"

விழா நடத்துவாயே.

அந்த வேலவனுக்குள் பொங்கும் கருணையெல்லாம்

எங்கு போயிற்று?

நெஞ்சுக்குள் பூகம்பகம்

அந்த காங்கோ நாட்டு எரிமலைக்குழம்பாய்

வெடித்து வடிகின்றது.

தம்பி!

சட்டென்று எப்படி அந்த மேகங்கள்

கலைந்து போயின.

அந்த மூளிவானம்

மூர்க்கமாய் பிளிறுகின்றது.

சின்னஞ்சிறிய கடல் நண்டுகள்

அளையும் என் கால்விரல்களை

கவ்விக்கொள்கின்றன.

தம்பி!

உன் அமுத அலைகள்

பக்கம் பக்கமாய் எழுதி எழுதி அழிக்கும்

ஒரு  "ஆயிரம் பக்க"நாவல் போல‌

வந்து வந்து போகின்றன.

ஞானபீடங்களும் சாகித்ய அகாடெமிகளும்

வறட்டுக்கிளிஞ்சல்களாய்

கரையொதுங்கிக்கிடக்கின்றன!

_____________________________________________

அதி காலை 3.30 மணி.

26.05.2021.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக