பாலகுமாரன்
=======================================ருத்ரா
மெர்க்குரிப் பூக்கள் எனும்
தொடர்கதை மூலம்
மற்ற எழுத்தாளர்கள் தொட முடியாத
ஒரு நெருடல் மூலையில்
தன் பிரகாசத்தை துவக்கினார்.
அவர் எழுத்துக்கள்
துண்டு துண்டாய் அக்கினி கங்குகள் போல்
சொல் கோர்த்து வந்து
பக்கங்கள் நிறையும் போது
சிந்தனையின் கூர்மை அங்கே
பொய்மான் கரடு போல்
ஒரு பிரமிப்பான உவமையை
வேர் பிடித்து நிற்கும்.
அற்புத எழுத்தாளர் சுஜாதாவை
அடுத்து நிற்கும் நிழலா இவர்
என்று சில சமயங்களில் தோன்றலாம்.
இரும்புக்குதிரை தாயுமானவன்
போன்ற நாவல்கள்
இவர் தனித்தமைக்கு உயர்வான சான்றுகள்.
நவீனத்துவம் பின் நவீனத்துவமாக
முரண்டு பிடித்துக்கொண்டு
பிரசவம் ஆகும் போது
அந்த இலக்கியத்தின் வடிவத்தை
கன்னிக்குடம் உடைத்து
ரத்தம் சொட்ட சொட்ட
தமிழ்ச் சொற்களில் பிழிந்து தந்தவர்.
மிஸ்டிக் தனமாய் முகம் மறைக்கும்
அவர் குங்குமப்பொட்டில்
ஏதோ அபிராமி வழிபாடு தென்பட்டபோதும்
ஜெயகாந்த யதார்த்தத்தை
நிறைய தூவித்தருவார்.
படிக்க ஆரம்பித்தால் கீழே வைக்கத்தோன்றாத
அருமையான நடை.
கரடு முரடாக நம்மை எங்கோ
தள்ளிக்கொண்டு போய்
ஒரு குகைக்குள் முட்ட வைப்பார்.
ஆம் ஆன்மீகத்தின் நெருக்கடிக்குள் தான்
நாத்திகம் நாற்று பாவுவதாக
காட்டுவார்.
வாழ்க்கையின் முற்றிப்போன
முரண்பாடுகள் தான்
தத்துவம் என்று உட்பொதிவாய்
நிறைய எழுதியுள்ளார்.
ஆம் ஒரு கோணத்தில் அந்த
வெண்தாடியில் சிவப்புப்பொட்டு
இனம் புரியாத ஒரு "மார்க்ஸ்"
போல தோன்றலாம்.
எழுத்தில்
அவருடைய அதிரடி நடைகள் தான்
சினிமாக்களுக்கு "வசனம்" எழுத
அழைத்துச்சென்றது.
கமல் ரஜனியோடு
இவர் வசனமும் அங்கே நடித்தது
என்றால் மிகையாகாது.
"நான் ஒரு தடவை சொன்னா
நூறு தடவை சொன்ன மாதிரி"
என்ற "ப்ஞ்ச்" நாளைக்கு
அவரது செங்கோல் ஆகலாம்.
ஆனாலும் அந்த செங்கோல்
இவரது பேனாவிலிருந்து தான்
கிளைக்கின்றது.
எழுத்தை ஒரு மவுன ஆயுதம்
ஆக்கியவர் பாலகுமாரன்.
நாத்திகத்தின் ஒரு காக்டெயில் வாடையுடன்
ஆத்திக தோற்றம்
பொய்மை எனும் விசுவரூபம்
எடுப்பதை நாம் இவர் கதைகளில்
பார்க்கலாம்.
சிந்தனைகளின்
சைக்கடெலிக் எனும்
காமாசோமா வண்ணக்கலவையில்
சைகோத் தனங்களின்
சவ்வூடு பரவல் தான்
மனித வாழ்க்கை என்றே
தன் கதைகளில் நிறுவி நிற்பார்.
உபனிஷதங்கள் எனும் வைக்கோற்படப்பில்
நாத்திக ஊசி கிடப்பதை
கையில் எடுத்து தன் கதையின்
கந்தல் யதார்த்தங்களை அழகாய்
தைத்துத் தந்து இலக்கியம் படைத்தவர்
இந்த எழுத்துச்சித்தர்.
இவர் இழப்பு ஈடு செய்ய முடியாதது.
================================================
15.05.2018 ல் எழுதியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக