வியாழன், 29 ஏப்ரல், 2021

ஒரு தரிசனம்

 ஒரு தரிசனம்

________________________________ருத்ரா



கடவுளே

எனக்கு வார்த்தைகளில் 

சண்டை போட‌

நீயே தகுதியானவன்.

உன்னை நோக்கி வீசும்

எதிர்ச்சொற்கள்

எனக்கு 

மாலையாகி விழுகின்றன.

நடுநிசியில் ஒரு பயத்தின்

வர்ணம் 

என்னைப்பூசிக்கொள்ளும்போது

என் சொற்கள் உனக்கு

ஆனைத்தும்பிக்கை அளவுக்கு

மாலை தொடுத்து 

சூட்டும்போது

நான் உன்னிடம் வேண்டும்

அபயக்குரல்

என்னைக் கேலியின் கிண்டலின்

காக்காய் முள்ளாய் குத்துகிறது.

நாங்கள் உனக்கு

பிரம்ம சூத்திர பாஷ்யம் 

எழுதுவது போல்

அன்றைக்கு ஒரு நாள்

ஒலியற்ற ஒலியில்

இந்த மனிதனை

அவன் அறிவை

அவன் சமூக அக்கறையை

உன் பாணியில்

ஒரு சகஸ்ரநாமம் போல்

தொடுத்துக்கொண்டிருந்தாய்.

அதில் 

ஃபெர்மியானையும் 

போசானையும்

வித்யாசம் இல்லாமல் ஆக்கி

ஒரு சூப்பர் சிம்மெட்ரியை

"அதிர்விழை"எனும் 

நுண் நடுக்கத்தைக்

காட்டிய மனித அறிவின் முன்

வியந்து களித்து

நர்த்தனம் ஆடினாயே.

போதும் போதும்

கோவில்களுக்கு கனத்த பூட்டுகளை

மாட்டுங்கள் என்றும்

விண்ணொலி முரலச்செய்தாயே!

அது

உனக்கே

ஒரு பிரம்மை!

மனிதனுக்கு பிரம்மம்.

பிரம்மத்துக்கு மனிதன்.

மரப்பாச்சிகளின் 

அறிவு விளையாட்டா இது?

கடவுளே

நீயே ஒரு நாத்திகனாய்

நிற்கும் 

அந்த தரிசனம் இருக்கிறதே

அதற்கு

ஈடும் இல்லை

இணையும் இல்லை.

_______________________________________


புதன், 28 ஏப்ரல், 2021

கண்ணாடிக்குப்பி

கண்ணாடிக்குப்பி

________________________________ருத்ரா


மண்டியிட்டு வழிபடுகிறோம்

உன்னை.

ஓ! இறைவா!

எங்கள் மரண ஓலங்களை நிறுத்து.

இனிய இசையில்

எத்தனை பாடல்கள் நாங்கள்

உனக்கு தினம் தினம் 

பாடுகின்றோம்.

அதை விட்டு

இந்த மரண ஓலங்களா

உன் செவிகளில் இன்பம் பாய்ச்சுகிறது?

நாங்கள் உன் குழந்தைகள்.

அந்த ஆகாயத்திலிருந்து தான்

எங்கள் தொட்டில்களை ஆட்டுகிறாய்.

ஆனால்

எதற்கு இந்த 

வெண்டிலேட்டர்களைக்கொண்டு

எங்களை பயமுறுத்துகிறாய்?

பூதங்கள் போல் உடைதரித்து

மருத்துவர்களும் செவிலியர்களும்

எங்கள் உயிர்களை காப்பாற்றியே

தீருவோம் என்ற தீர்மானத்தில்

ஓ!இறைவா

நீயும் உடன் இருக்கிறாய் 

என்று தானே நம்புகிறோம்.

அப்படியிருந்தும்

பிணங்கள் எரியும் சுடுகாடுகளில்

நீ கோல்ஃப் விளையாடிக்காட்டியா

முறுக்கல் காட்டுகிறாய்.

அந்த நுண்ணுயிரிகள்

எவ்வளவு அற்புதமானவை! அழகானவை!

அந்த அறிவியல் நுட்பம் கொண்ட‌

வாயினாலா இந்த மரணங்களை

எங்கள் மீது நீ உமிழ்வது?

நீ எங்களுக்குத் தெரியாமல்

இந்த ரகசியங்களை எங்கள் மீது

சோப்புக்குமிழிகள் போல்

ஊதினாலும்

எங்கள் அறிவின் நுண்ணோக்கில்

உன் திருவிளையாடல்களையும்

தடுப்பூசிகள் ஆக்கி

உன்னோடு விளையாடுகிறோம்.

போட்டி பொறாமைகளுக்கு

அப்பாற்பட்டு விளையாட வேண்டிய நீ

எங்களோடு 

அழுகுணி ஆட்டம் அல்லவா ஆடுகிறாய்.

லட்சக்கணக்கிலா

பிணங்கள் வேண்டும்

உனக்கு நைவேத்தியம் கொடுக்க?

விலங்குகள் 

மனிதர்கள் 

அப்புறம்

கடவுள்கள் என்று

ஒரு ஏணி வைத்திருக்கிறாய்.

நாங்களும் எங்களுடைய‌

"நூலேணி"கொண்டு ஏறி

உன்னை மிஞ்சி விடுவோமோ

என்ற பயமா உனக்கு?

எங்களுக்கு பயமில்லை.

எங்கள் நம்ப்பிக்கையின் சிகரம்

உனக்கு எட்டுமா?

தெரியாது.

உன் சிகரத்தில் 

இப்படி ஒரு கோர தாண்டவம்

நீ ஆடிக்கொண்டிருக்கும்போது

உன் தலையில் ஒரு கண்ணாடிக்குப்பி

வந்து விழுகிறது.

அதனிடம் உன் நெற்றிக்கண்ணை

திறந்து கேட்கிறாய்.

யார் நீ? எங்கிருந்து வருகிறாய்?

அது சொல்கிறது.

அய்யனே தெரியவில்லை..

என்னவோ ஒளியாண்டுகள் என்று சொல்கிறார்கள்

அப்புறம் பில்லியன் பில்லியன்...பில்லியன்...

என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

அவ்வளவு உயரத்திலிருந்து வருகிறேன்.

அது என்ன?

கடவுள் கர்ஜிக்கிறார்.

அறிவு..அறிவியல்...அப்புறம் 

ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்..

அப்புறம் லாஜிக்கல் கோடிங்க்..

அப்புறம் இன்னும் என்னவெல்லாமோ

சொல்கிறார்கள்.

என்னை விடவா அது உயரம்..

ஆமாம் அய்யனே

அதை ஐ க்யூ என்கிறார்கள்.

அவர்கள் உட்கார்ந்திருக்கும் ஐ க்யூ

பில்லியன் கணக்கில்.

"உன்னை கடவுள் என்று கற்பிக்க"

ஒரு பத்து பன்னிரெண்டு ஐக்யூ

இருந்தாலே போதுமாம்?

நீ அநாவசியமாக‌

"பொம்மை கேம்ஸ்" ஆடுகிறாயாம்!

நீயும் மனிதனின்

அறிவுப்பிழம்பில் பிறந்தவன் 

என்பதால் தான்

இந்த கும்பாபிஷேகமும் கொட்டுமுழக்கும்

உனக்கு தருகிறோம்

என்கிறான் அற்பப்பயல் மனிதன்..

அது இன்னும்

ஐஸ் வைக்க என்னென்னவோ

சொல்லிக்கொண்டே இருந்தது..

"சரி சரி நிறுத்து..

இந்த மனிதக்குஞ்சுகளின்

விளையாட்டுப்பொம்மைகள் தாம் 

நாம்.

போறான்கள் பயல்கள்..விடு.

அந்த குப்பியைத்தா"

அந்த பொன்னார் மேனியன்

புலித்தோலை அரைக்கசைத்திருந்தான்.

மெதுவாக அந்த குப்பியை

புலிதோல் ஆடைக்குள் செருகிக்கொண்டான்.

தடுப்பூசிக்குப்பிகள்

சிரித்துக்கொண்டன 

அது அவனுக்கு

கேட்டிருக்குமா? இல்லையா?

தெரியவில்லை.


____________________________________________









திங்கள், 26 ஏப்ரல், 2021

அந்த தங்கக்குதிரையில்....


தசாவதார காட்சி

நன்றியுடன்

https://www.google.com/search?q=vaigaiyil+alagar...


____________________________

அந்த தங்கக்குதிரையில்
வருபவனா அழகன்?
அவனை மொய்த்த அந்த‌
கோடிக்கால்களின்
மனித பூதங்களே
அழகன் அழகன் பேரழகன்.
மற்றவனே இங்கு கள்ளழகன்.
மக்களில்
அந்த உழைப்பில்
அந்த மகிழ்ச்சியில்
அந்த கண்ணீரில்
அந்த கேள்வியில்
அந்த பாட்டுகளில்
அந்த‌ பசியில்
அந்த‌ உணவில்
அந்த‌ அறிவில்
ஒளிந்து ஒளிந்து
ஆடி அசைந்து
அந்த 
பொய்மெய்க்குதிரையில்
பவனி வருபவனே
கள்ளழகன்.
மக்கள் கடல்
மதுரைக்குள் வரும்
அழகிய திருநாளே
இத்திருநாள்.
"தூணிலும் துரும்பிலும்
இருப்பான்
என்று எத்தனை காலம்
பஜனை செய்தீர்?
நோயிலும் இருப்பான்
நொடியிலும் இருப்பான்.
தங்கக்குதிரையில்
கொரோனாவாக‌
கொள்ளை அழகில்
தரிசனம் தருவான்.
நுண்ணோக்கியில்
காலிங்கன் எனும்
நீண்ட பாம்பாய்
வைரஸ் உருவில்
காட்சி தந்தேன்.
மனிதனின் 
அறிவு நுட்பமே
எங்களுக்கெல்லாம்
வைகுண்டம்.
புரிவாய் இன்று
புதிதாய் இன்று"
வர்ணங்கள் பூசி
மறைக்க முடியா
மகத்தான ஒரு
மக்கள் வெள்ளமே
கண்ணுக்கினிய‌
கருத்தினில் ஒரு
கனவின் 
சூடு ஏற்றி சூடம் ஏற்றும்
அரிய காட்சி இது
அழகுக்காட்சி இது
லட்சக்கணக்காய்
பொற்காலடிகள்
பொருந்திய வைகை
பொழில் தனைச்சூடி
பொலியக்காட்டும்
பொற்கால‌
வரலாறு தன்னை!

இப்படிக்கு
ஒரு மதுரைக்காரன்.

__________________________ருத்ரா




ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

ருத்ராவின் கவிதைகள்.

 



ருத்ராவின் கவிதைகள்.





சூரியன் 

உறங்குவதும் 

விழிப்பதும்

பூமியின் விளிம்பு தான்.

இது வரை அந்த 

விளிம்பு கைக்கு மாட்டவே

இல்லை.

நானும்  சுத்தியல் ஆணி சகிதம்

ஒரு காலண்டரை

அந்த விளிம்பில் 

மாட்டிவிட முயலுகிறேன்.

சரி.

இது எத்தனையாவது வருடம்?

யாருத்குத் தெரியும்?


___________________________________


இலையோடு

தண்ணீர்த்துளி

ஒட்டவே இல்லை.


துறவு

______________________ருத்ரா


அந்த பாறாங்கல்லை

தூண்டிலில் மாட்டிக் கடலில் வீசி 

கரையில் காத்திருந்தது அந்த‌

மண்புழு.


நம்பிக்கை

___________________________ருத்ரா



சீனாக்காரன் கூட தருகிறானாம்

நம் "ப்ரணவ மந்திரத்தை"

சிலிண்டரில் அடைத்து.


ஆக்சிஜன்

____________________________ருத்ரா


தங்க நாணயங்கள் கீழே.

இலைகள் இடுக்குகள் வழியே

சூரியன் துப்பியது.


ஒளிக்கசிவு

______________________________ருத்ரா



முங்கிகுளித்ததில்

நுரையீரல் பேசியது

ஆறு


____________________ருத்ரா



மரணஇயல் பாடம்

நுரையீரல் 

பல்கலைக்கழகத்தில்.


கொரோனா


____________________ருத்ரா


விமானங்களே

இனி "அணிலாடு முன்றில்"


கொரோனா


_______________________ருத்ரா


சங்கிலி அவர் கழுத்தில்

அது அவரை இழுத்துச்சென்றது.


"வாக்"

_____________________ருத்ரா


இவர்கள் தேசம் முழுவதும்

பத்து எண்களில்.


கைபேசி

________________________ருத்ரா

சனி, 24 ஏப்ரல், 2021

நிழல்

 தங்கநாணயங்கள் கீழே.

இலைகள் இடுக்குகள் வழியே

சூரியன் துப்பியது.


நிழல்

______________________________ருத்ரா

கனவு

 மூளையின் கச்சா ஃபிலிம்

ஓடுவதற்கு

தூக்கமே திரை.


கனவு

______________________ருத்ரா



அந்நியன்

 சமஸ்கிருதம் மட்டுமே தெரிந்த‌

கடவுளுக்கு

இந்த உலகமே மிலேச்சமானது.


அந்நியன்

___________________________ருத்ரா

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

எதற்குள் எது?

 எதற்குள் எது?

______________________________

ருத்ரா



துப்பாக்கிகள்

கண்டு பிடித்த மனிதனே!

அவை

உன் மரணங்களுக்கு

விதை தூவின.

உன் அறிவை வியந்த இறைவன்

உன் அழிவில் இருந்தும் 

உன்னை உணர்ந்து கொண்டான்.

நீ முற்றுப்புள்ளியாய் விழுவதற்கு

வந்தவன் அல்ல என்று

உன்னை மீண்டும் நிமிர்த்தி வைக்க‌

உன் நிழலைத் தேடினான்.

அவனுக்கு உன் மீது பொறாமை.

அவன் தன் மீது பக்தி கொள்

என்று தான் 

வரம் கொடுக்கத்தெரிந்திருந்தது.

ஆனால் நீயோ

மானிடநேயம் என்றொரு மகத்தான‌

சக்தியை அலை பரப்பி வைத்திருந்தாய்.

அதன் மகரந்தங்கள் மீண்டும்

பூக்காடு ஆவதற்குள்

நடந்த விபத்து தான்

அந்த துப்பாக்கியும் அதன் பின் வந்த‌

அணுகுண்டுகளும்.

கடவுளின் விபத்துதான் சைத்தான்

என்று சொல்லிக்கொள்வோமாக.

இறைவன்

உன்னிடம் பெரும் ஈர்ப்பு கொண்டான்.

அந்த விபத்தில்

மரணமூட்டம் இந்த பூமி

முழுவதையும் சுடுகாடு

ஆக்கியிருந்தது.

மனிதா! உன் நிழல்

இறைவனிடமா?

இல்லை

அந்த இறைவனின் 

நிழல் உன்னிடமா?

இந்த கேள்விக்குள்

பதில் ஒரு விதை.

அந்த பதிலுக்குள்ளும்

அந்தக் கேள்வி ஒரு விதை.

பாழ்வெளியில்

பரிணாமம் மீண்டும் 

விரல் தீண்டியது.

ஒரு சப்பாத்திக்கள்ளி

நீட்டிய நிழலில்

ஒரு மண்புழு ஊர்ந்து

மீண்டும் மண்ணைத்திறந்தது.

பசுமை சன்னலில்

புதிய அகர முதல கேட்டது.

அங்கே

கடவுள்கள்

வரிசையாய் உட்கார்ந்து

மனிதன் வாழ்த்து 

பாடினார்கள்.

நாத்திகத்தின் விதை

ஆத்திகத்துக்குள்.

ஆத்திகத்தின் அழிவு 

மீண்டும் நாத்திகத்துக்குள்.


________________________________


மாதங்களில் அவள் மார்கழி

 மாதங்களில் அவள் மார்கழி

__________________________________ருத்ரா



பெண்கள் 

அவர்களின் திரைப்படத்துக்கு

விட்ட‌

இடைவேளை அல்ல அது.

கருவெளியின் இந்த‌

இடைவெளியில்

பிரபஞ்சமே இமைவிரித்து

வியக்கும்

படைப்பின் இடைவெளி இது.

பிரம்மத்தின்

கரு உயிர்ப்பே இது தான்.

இதை ஏன் பிரம்ம நாசம்

என்று

பிரம்ம பாஷ்யங்கள்

கூப்பாடு போடுகின்றன?

நம் ஞானம் 

ஒரு அஞ்ஞானம் என்று

அஞ்சப்படும் 

தொடக்கப்புள்ளி இங்கு தான்

விழுகிறது.

மாதங்களில் அவள் மார்கழி

என்பதெல்லாம் இருக்கட்டும்

மாதவிலக்கு 

என்ற கிரகணம் 

அவளை மறைத்துக்கொள்ளும்போது

அவள் உடன்படாத ஒரு 

கட்டையில் ஏற்றி

ஏன் எரிக்கப்பார்க்கிறீர்கள்?

____________________________________ருத்ரா




எத்தியோப்பியா

 எத்தியோப்பியா

________________________________ருத்ரா


பிறந்த குழந்தைகள்

எலும்புக்கூடுகளாகவே

பிறக்கும்

ஒரு புண்ணிய பூமியின்

மியூசியம் இது.

செத்துப்போன 

கடவுள்களின்

குடியிருப்பும் இங்கே தான்.

எல்லா மதங்களின்

வேதப்புத்தகங்களும்

மக்கி மண்ணான தேசம் இது.

அதனால்

முளைக்கும் மனித உயிர்களுக்கு

முகம் இல்லை.

முழி இல்லை

வறண்ட முலைத்தோலை

சப்பும் எலும்பு வாய்

மட்டுமே உண்டு.

________________________________


இதோ ஒரு சிலை

 இதோ ஒரு சிலை

____________________________ருத்ரா


நாலாயிரம் அடிக்கும் மேலாய்

ஒரு லிங்கம் சிலை

வைக்க மசோதா வரும் முன்

வந்து நின்றது விஸ்வரூபமாய்

இந்த 

"ஆக்சிஜன் சிலிண்டர் சிலை"

கொழுந்து விட்டு எரியும் பிரச்னையாய்

ஓம் நமசிவாய.

_______________________________




புதன், 21 ஏப்ரல், 2021

அழைப்பு

 அழைப்பு

_______________________________ருத்ரா


ஆலமரத்தடியும்

கிளி ஜோஸ்யமும் தான்

இந்தியாவின் 

சமூகப்பொருளாதாரம்.

அந்தக்கிளி

எப்போ எடுத்தாலும்

"ராமர் படமும்

அனுமார் படமும்"தான்

வந்து முகம் காட்டும்.

அறிவுஎன்ற வெளிச்சமே 

இல்லாத பூமியில்

இல்லாத கடவுள் எனும்

சொல்லின் கும்மிருட்டே

மண்டிக்கிடக்குது.

பயமும் பீதியும் தான்

இவர்களின் கடவுள்

நம்பிக்கையும் 

மன அடுக்குகளின்

ஆசைத்துடிப்புகளும்

ஏற்றப்பட்ட துடிப்புகளே

இவர்கள் வழிபாடுகள்.

சமுதாயமோ அல்லது

சமுதாய மானிடமோ

எங்கோ தூரத்து நிழலாகி

அதுவும் அரக்க உருவங்களாய்

இவர்களை 

நெறிப்படுத்துவதற்குப்பதில்

வெறிப்படுத்தும்.

அதன் பயங்களும் பயமுறுத்தல்களும்

தான்

இவர்களின் நான்கு வர்ண சித்தாந்தம்.

இதிலிருந்து மீண்டுவர‌

மானிட வளர்ச்சிப்பரிமாணத்தின்

வரலாறு அல்லவா வழி வகுக்கும்.

தேங்கிய மனதுகளின்

உழக்கினில்

கிழக்கு மேற்கு பார்க்கும்

இவர்கள் விடியல் கூட‌

அந்த கிழக்கின் 

சிந்தனை விளிம்புகளில்

இருப்பதன் ஓர்மையை

இழந்து விட்டவர்கள்.

எப்போது இவர்கள் இமையுரித்து

விழிக்கப்போகிறார்கள்.

அதோ கோவிலின்

காண்டாமணியின் நாக்கிலிருந்து

நசுங்கி நசுங்கி வரும்

ஓசைகள் 

அவர்களை கூப்பிடுகின்றன.


_____________________________________





திங்கள், 19 ஏப்ரல், 2021

கண்டா வரச்சொல்லுங்க..

 



கண்டா வரச்சொல்லுங்க..

______________________________

ருத்ரா


காட்டாறு போயிடுச்சு

கடுவெளியாய் ஆயிடுச்சு.

கனவ வெதையாக்கி

இறைச்சுப்புட்டோம்

வெதச்சுப்புட்டோம்

கதிர் மகன் எந்திரிப்பான்

கண்டா வரச்சொல்லுங்க.

கண்ணுல கண்ணுவச்சு

காணத்தான் தவிக்கின்றோம்

கண்டா வரச்சொல்லுங்க‌


பொட்டிகள அங்கே

குவிச்சு வச்சிட்டாக.

"பொறி" வெச்சு புடிக்க இது

காடையில்ல குருவியில்ல‌

பூபாளம் பாடுகிற‌

குயிலுகளின் கூட்டமெல்லாம்

கூடு வச்சு கெடக்குதங்கே.

பாடு பாடுன்னு நாங்க‌

எத்தன பாடு பட்டிருக்கோம்

செறகு மொளைச்சு  அவை

வானம் முட்ட முழிச்சுகிட்டு 

எந்திரிச்ச பேரொளியை

கண்டா வரச்சொல்லுங்க‌

எங்க இருட்டெல்லாம்

கரையுமுண்ணு 

கண் பூத்து கெடக்குறோமே

கண்டா வரச்சொல்லுங்க‌.


வல்லூறுக வட்டமிடுத‌

வகையால்லா தெரியுது.

வல பின்னி சதி பண்ணி

சாய்ச்சிருவாங்களோ

நம் சரித்திரத்த.

பீஹாரப் பாத்துபுட்டொம்

ஊரு சனம் உலக சனம்

உண்மையெல்லாம்  பாத்தாக.

கடேசி நேரத்துலே அவுக‌

கவுத்தினதையும் பாத்தாக

எரிமலைக ஊமையாச்சு.

கேள்வி கேக்க நாதியில்ல‌

அதனாலதான் பயப்புடுறோம்

பாரத மாதா தானே 

நமக்கெல்லாம் மாரியாத்தா!

அவள நீங்க‌ அன்புடனே 

கண்டா வரச்சொல்லுங்க‌

நீதி காக்க வேணும்முன்னு

பொங்க வைப்போம் கும்பிடுவோம்

கண்டா வரச்சொல்லுங்க!


தமிழு ரெத்தம் எல்லாம்

கொதிக்குதய்யா குமுறுதைய்யா

தமிழுச்சாதிச் சனங்களே இந்த‌

தமிழுச்சத்தம் கேக்கலையா

புதுப்பூமி மொளைக்குமுண்ணு

சொன்னாக..காத்திருக்கோம்

..அந்த‌

புதுமொகம் சொலிக்கிறத‌

கண்டாக்க தாக்கல் சொல்லி

கண்குளிரச் செஞ்சுடுங்க‌

கண்டா வரச்சொல்லுங்க  அந்த‌

பொன்னுலகை காட்டிடுங்க.


__________________________________

ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

ஒரு நினைவுப்பிழியல்

 ஒரு நினைவுப்பிழியல்

______________________________________________________

புதன், 28 பிப்ரவரி, 2018


மயிலு

======================================

ருத்ரா





பட்டிக்காட்டு புழுதி மண் துளி

ஒவ்வொன்றும்

வைரப்பொடியாய் ஆனது ஒரு நாள்.

அந்த "சப்பாணியும்" மயிலுவும்"

திரைப்பட இலக்கியத்தில்

ஒரு புதிய மைல்கல் நட்டுவைத்தனர்.

கிராமத்துக்கட்டப்பஞ்சாயத்து

நம் ஜனநாயகத்தின்

வெறும்

சமுக்காளம் சொம்பு நாட்டாமை

ஃபார்முலா மட்டும் அல்ல.

நம் நாடி நரம்புகளின்

ஆல விழுதுகள் ஊஞ்சல் ஆடும்

வடிவம்.

இந்தப்பின்னணியில்

காதலின் கிராமத்து மின்னலை

ஜூஸ் பிழிந்து கொடுத்தவர் அல்லவா

ஸ்ரீ தேவி!

அந்த அகன்ற விழிகளும்

சிற்ப உணர்வு துடிக்கும்...

அந்த மூக்குத்திகள் கூட‌

பேசும்..

அழகிய மூக்கும்

நடித்துக்கொடுத்த‌

காவியம் மறக்கவொண்ணாதன.

பம்பாய் மார்க்கெட்

அவரது மூக்கை மாற்றி

முகத்தையும் மாற்றிய போதும்

நடிப்பு சிலிர்க்கும் அவர் சாதனைகள்

மறக்க முடியாதவை.

இன்று குளியல் தொட்டியில்

அவரது முற்றுப்புள்ளி

விழுந்த பின்

தொடரும் புள்ளிகளில் கூட‌

கல கல வென்று

முத்துக்கள் உதிரும்

அவரது சிரிப்பொலி

இந்தியாவின் எல்லா மண் வாசனையிலும்

இதயம் வருடுகிறது.

மூன்று முடிச்சுகளில்

இரண்டு சூப்பர் ஸ்டார்களுக்கும்

இடையில் ஒரு

திடுக் கதையை

அற்புதமாய் காட்டி அசத்தினார்.

சிவப்பு ரோஜாவில்

அவர் திகில் குரலின் அலறலில்

தியேட்டருக்குள்

ஏழுக்கும் மேல்

ரிக்டர் ஸ்கேலில் பூகம்பம்.

மூன்றாம் பிறையில்

அந்த செல்ல பப்பியுடன்

இன்னொரு பொமரேனியன் போல்

மூசு மூசுவென்று கொஞ்சுவதும்

கடைசியில் அந்த ரயில் காட்சியில்

கமலின் குரங்கு சேட்டைகளைக்கண்டு

கல்லாய்ப்போன ஒரு உணர்ச்சியை

மரப்பாச்சி சிரிப்பாய்

மத்தாப்பு வெளிச்சம் காட்டுவதும்

நம் நெஞ்சை பிசைகிறது.

அவரது

தென்னிந்திய படங்கள்

"மருதாணி"ச்சித்திரங்கள் என்றால்

வட இந்தியப்படங்கள்

கலை மிளிரும்

மெகந்திப்பிழியல்கள்.

இறுதி ஊர்வலத்தில்

அந்த பெட்டகத்தில் இருந்தது

அவர் உடல் அல்ல!

அவை யாவும் நமக்கு

கலையின் அமரத்துவம் காட்டும்

"பிலிம் சுருள்"கள்.

அதில்

இன்னும்

அவர் இதயம்

சூடாய் துடிக்கிறது

அதில் நம்

பழங்கனவுகள்

உயிர்த்து உயிர்த்து

ஆனால்

நம் கண்ணீரை

உதிர்த்து உதிர்த்து

செல்கின்றன.


===========================================


மாத்தி யோசி

 மாத்தி யோசி

____________________________________ருத்ரா



ஹிட்லர் முசோலினியெல்லாம்

எதற்கு?

கொரோனாவைக்கூப்பிடுங்கள்

போதும்.

ஏ! இந்தியாவே வாயை மூடிக்கொள்.

வாலைச்சுருட்டி வாய்க்குள்

வைத்துக்கொள்.

பருவ மழை போல்

இந்த மரண மழை பெய்யும் போதெல்லாம்

ஊரடங்கு தான் எங்கும் 

உச்சரிக்கப்படும்.

மெரீனாவில் அலைகள் வந்து வருடலாம்.

நண்டுகள் உலா போகலாம்.

பூங்காக்களில்

மலர்கள் பூக்கலாம்.

மகரந்தங்கள் உதிர்க்கலாம்.

மகாபலிபுரத்துக்கோபுரங்களில்

வௌவ்வால்கள் வரலாம் போகல்லாம்.

மனிதர்களுக்கு மட்டுமே இங்கு ஊரடங்கு.

கண்ணுக்குத் தெரியாத‌

நுண்ணுயிரிகளின் சர்வாதிகார ஆட்சிக்கு

தலை வணங்குவதே

பெரிய ஜனநாயகத்தின்

முதல் கடமை.

கொஞ்சம் மாற்றி யோசிப்போமே.

அந்த வைரஸ் உருவத்திற்கு

மனிதனும்

மனிதன் உருவத்திற்கு இந்த வைரஸும்

மாறினால் எப்படியிருக்கும்?

இந்த மனித வைரஸுக்கு

அந்த வைரஸ் மனிதர்களால்

தடுப்பூசிகள்

கண்டுபிடிக்கவே முடியாது.

போட்டி பொறாமை பேராசை

இவற்றின் உள் வைரஸான 

"ஆட்சி அரசியல்"

எனும் 

ஆர் என் ஏ மற்றும் டி என் ஏக்களுக்கு முன்

எல்லா விஞ்ஞானங்களும் மெய்ஞானங்களும்

தோற்று ஓடியே போய்விடும்.

அந்த அரசியலின் வினோத 

பெருந்தொற்றின் ஊற்றுக்கண்ணே

தன்னலம் தன்னலம் தன்னலம் மட்டுமே.


_________________________________________________

விவேக் எனும் பஃறுளியாறு.

 விவேக் எனும் பஃறுளியாறு.

___________________________________ருத்ரா



நீ தானே வைத்தாய்

எல்லாவற்றையும் எடுத்துக்கொள்

ஆக்சிஜன் தருகிறோம்.

நீ எங்களுடன் வந்து

சிரிப்பு மழை பொழிந்திடு!

மரங்கள் கண்ணீர் விட்டன.


எத்தனை படங்கள்?

காக்காய்க்கு தெரியாது

விதைகளை எச்சமிடுகிறோம் என்று.

ஆம்.

இவரும் சிரிக்கவைக்கும்போதே

நம் விடியல்களுக்கு

எத்தனை எத்தனை விதைகள்

தூவியிருக்கிறார்.



இவருக்கு அவர் விசிறியா?

அவருக்கு இவர் விசிறியா?

தெரியாது.

அந்த உலக மேதை

சிறப்பு விஞ்ஞானி அப்துல்கலாமும்

இந்த சிரிப்பு விஞ்ஞானி விவேக்கும்

பூவுலக இதயத்துடிப்புகளுக்கு

அன்பாக சாமரம் வீசிக்கொண்டார்கள்.

மனிதர்கள் இடையே

மனிதர்கள் மட்டுமே இடைவெளி.

அதுவும் சமுதாய நேசத்தால்

மிடையப்பட்ட அன்பின் இடைவெளி.

அதை மரண பயம் பூசி

பெரிதாய் ஆக்க வந்த

கொரோனாவுக்கு ஒரு ரகசியம்

தெரிய வந்தது.

இந்த சாவு கூட மனிதனின் சிரிப்பின் முன்

செத்து விடுகிறதே என்று

பொறாமையால் செத்துப்பொகும்

நிலைக்கு ஒரு நாள் வந்தது

அந்த கொரோனா.

அதன் சீற்றமே

விவேக்கின்

சிந்தனை ஆர் என் ஏ க்கள் கொண்ட‌

புதிய சிரிப்பாணி வைரஸை

நோக்கி படையெடுத்தது.

தடுப்பூசி போட்டா என் முன் வியூகம்

வகுத்தாய் என்று

அது மாரடைப்பு வியூகம் வைத்து

பழி தீர்த்துக்கொண்டது.

இப்போது புலம்புகிறது உன்னை நோக்கி.

ஓ மனிதா!நீ வென்று விட்டாய்.

சிரிப்பு சங்கிலியின் அந்த ரகசிய‌

ஆர்.என்.ஏ வை உன்னிடமிருந்து

பிடுங்கி விடலாம் என்றல்லவா நினைத்தேன்.

உன் முடிவுக்கு நான் காரணம் அல்ல.

என்னையும் முந்திக்கொண்டது உன் மாரடைப்பு.

இருப்பினும் எனக்கு ஒரு அற்ப சந்தோஷம்

அந்த தடுப்பூசியை ஒரு சமுதாயக்கடமையாய்

ஆக்கி மனம் பூரிப்பு அடைந்தாயே

அதன் விளைவாய் கூட இந்த மாரடைப்பு

உனது சிரிப்பு விஞ்ஞானத்தின் பாஸ் வர்டை

பறித்துக்கொண்டிருக்கலாம்!

அது போதும்.

அந்த கொரோனா ராட்சசன் பயங்கரமாய்

கொக்கரித்தான்.

எங்கள் விவேக என்கிற நகைச்சுவை முரசே!

மானிட சமுதாயத்தின் அக்கினி விதை அல்லவா நீ.

உன் அதிர்வு அலைகள் எல்லைகளை

நொறுக்கித் தள்ளிவிடும்.

உன் நகைச்சுவை எனும் ஆயிரம் வாலாக்கள்

வெடிக்கும் சிரிப்புகளின்

காட்டாறுகளுக்கும்

பொங்குமாங்கடல்களுக்கும்

பஃறுளி ஆற்று மூலமே நீ தான்.

சாதாரண ஆறா நீ?

பெரியார் எனும் பெரியாறுகளின்

பகுத்தறிவுச் சங்கமம் நீ

நான் தோற்றுவிட்டேன்.


இனி அந்த கொரோனா

"திருவிளையடலில்" வரும்

டி எஸ் பாலையாவின்

சங்கீத கோஷ்டி போல்

தலை தெறிக்க விழுந்தடித்து

ஓடினாலும் ஓடிவிடும்.


____________________________________

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

விவேக் என்றொரு சிரிப்பு வேந்தன்.

விவேக் என்றொரு சிரிப்பு வேந்தன்.

_____________________________________________ருத்ரா


வெறும் மரங்களாக நின்ற‌

இவர் நட்ட அந்த‌

மரங்கள் எல்லாம்

இப்போது

உணர்வு பெற்று உருக்கத்துடன்

கேட்கின்றன.

"உங்கள் நகைச்சுவையே

எங்களிடம் கவிந்திருக்கும்

பசுமைக்குடை.

அதை மடக்கி வைத்து விடாதீர்கள்.

எங்கள் பூக்களின் மூச்சுகள்

எல்லாம் உங்களுக்கு

அரண்.

முரண் செய்யும் காலதேவன்

உங்கள் காமெடிகள் கிச்சு கிச்சு மூட்டுவதில்

கல கலத்துப்போவான்.

தன் கெடு கலைந்த அலாரமும்

வாய் பொத்திக்கொள்ளும்.

மீண்டும் 

சிரிக்க வைப்பீர்கள்.

ஆமாம் விவேக் அவர்களே

மீண்டும் சிரிக்க வைப்பீர்கள்.

"ஏண்டா!

மைல்கல்லில் துணி சுத்திக்கிடந்தாலும்

அதையும் மாரியம்மனாக்கி

கெடா வெட்டக்கிளம்பிடுறீங்களடா!

ஒரு பெரியார் இல்லை

நூறு பெரியார் பிறந்தாலும்

நீங்க திருந்த மாட்டீங்களாடா?..."

இந்த காமெடியை மறக்கவே முடியாது.

அப்புறம் ஒரு தடவை

"சன் டிவிக்கு ஏதுடா சன்டே?"

என்று நீங்கள் ஒரு போடு போட்டதில்

அந்த அரங்கத்துக்கே மொத்தமும்

பல் சுளுக்கிக்கொண்டது.


விவேக் அவர்களே!

நீங்கள் கோடிக்கணக்கான 

மரக்கன்றுகளை நட்டு வைத்திருக்கிறீர்கள்.

அத்தனையும் 

அந்த நீல வானத்தைநோக்கி

ஊசிக்கேள்விகளை வீசியெறிந்து

ஊசிப்போய்க்கொண்டிருக்கிற‌

நம் சமுதாயத்தை செம்மைப்படுத்தும்

பெரியார்கள் தான்.

உங்களை

சின்னக்கலைவாணர் என்கிறார்கள்.

பெரிய கலைவாணர்  அங்கிருந்து 

சிரித்து சிரித்துக் குதித்து

இங்கே வந்து விடுவார் 

உங்கள் காமெடியை

நேரில் ரசிக்க!

எழுந்து வாருங்கள் 

"நகை"ச்சூரியனே!


__________________________________________

(16.04.2021 நள்ளிரவு தாண்டி 17.04.2021

அதிகாலை 01 மணிக்கு எழுதப்பட்டது)



பின்குறிப்பு



17.04.2021 காலை டிவி செய்தி



எல்லாவற்றையும் போட்டு உடைத்து விட்டது.

அந்த அலாரக்கடிகாரம் உட்பட.

ஆம்.

அவன் சிரிப்புக் கலைக்கு

ஏது மரணம்?

வாய்விட்டு சிரிக்க வைத்த‌

அந்த சிரிப்பு வேந்தன்'

இப்பவும் இப்படித்தான் சொல்லியிருப்பான்.

உங்கள் அழுகையை நான் 

பார்க்க வேண்டாம் என்று

எனக்கு உதவிக்கு வந்த‌

அந்த "முக கவசத்தை"

நீங்கள் விட்டு விடாதீர்கள்.

பை..வரட்டுமா?

அது சரி!

எனக்கு வரப்போகிற அந்த‌

கொரோனாவிற்கு போட்ட‌

தடுப்பூசி வீண்தானா?

வேணும்னா அந்த எருமை வாகனன்கிட்ட‌

பெர்மிஷன் வாங்கிவிட்டு

மறுபடியும் கீழே வர்ரேன்.

பாருங்கள் அந்த தடுப்பூசி கூட‌

சிரிக்கிறது.

அரங்கம் தோறும் இனி என் எதிரொலி தான்.

வருகிறேன்.

நன்றி!


________________________________________

ருத்ரா

வியாழன், 15 ஏப்ரல், 2021

முகம்

 

முகம் 

__________________________________________________________________________________


இந்த 

வரலாற்றைக் கண்டு

முகம் சுழித்து 

நீ 

முகம் துடைக்க 

முனைந்த‌ போது தான்

கண்டுபிடித்திருப்பாய்

உன் முகமே 

களவு போனதென்று.

__________________________

ருத்ரா

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

கவரி

 







கவரி

______________________________ருத்ரா


என் இமைகள் மீது

எத்தனை ஆயிரம் டன்களை

பாரம் ஏற்றியிருப்பேன்?

அந்த தூக்கம் இல்லாத‌

கனவுகள் இல்லாத

அந்த மலட்டு இரவுகள்

நட்சத்திரப்புண்களால்

வதை படும்போது

அவன் எழுதிய வரிகள்

என் மீது அனிச்சப்பூ மழை பெய்யும்.

"அன்பே!

என்னைக்காதலி என்று

உன் மீது என்

ஏக்கத்தை இறக்கி வைக்கப்போவதில்லை.

இது ஒரு யுத்தக்களம்.

நம் ஏக்கங்கள் மட்டுமே

இங்கு ஆயுதங்கள்.

சத்தம் இல்லாத யுத்தம்.

எங்கிருந்தோ

எதன் ஆழ்ந்த காயத்திலிருந்தோ

ரத்தம் மட்டும்

கசிந்து கொண்டே இருக்கிறது."

அந்த இறுதி வரி..

என் சமாதி மீது

க"வரி" வீசிக்கொண்டே இருக்கிறது.


________________________________ருத்ரா




KANKAL (wonderful song)

 https://www.youtube.com/watch?v=ubOXCgbEUM8


https://www.youtube.com/watch?v=_5eXt3L0J2E


கண்கள் என்ற

திரைப்படத்தில்

ஜிக்கி அவர்கள் பாடிய‌

"பாடிப்பாடி தினம்..."

என்ற பாட்டு...

அது பாட்டே அல்ல.

அது ஊனை உருக்கியது.

உள்ளுக்குள்

கண்ணீரை பெருக்கியது.

சோகம் பிழியும் கண்ணீர் அல்ல.

குரலின் இனிமையே

உணர்ச்சியை பிழிந்து பிழிந்து

கண்ணீரைப் பொழிந்தது.

இசையமைப்பில்

ஆயிரம் இமயங்களின் உச்சியில்

போய் உட்கார்ந்து கொண்ட‌

இசையமைப்பாளர்

எஸ் வி வெங்கட்ராமன் அவர்கள்

வார்த்து வார்த்து தந்த‌

தேன் மெட்டுகள்!

உயிர் மொட்டுகள் நம்முள்

விரிந்து விரிந்து

வியந்து தவித்தன அந்த பாட்டில்.

அந்த ஒரே பாட்டு போதும்

துருப்பிடித்து இற்றுக் கிடக்கும்

முரட்டுக்காதுகளை

திறந்து 

உள்ளத்தின்

பாறாங்கல்லையும்

பதமான நுங்கு ஆக்கிவிட.


_____________________________________ருத்ரா

திங்கள், 12 ஏப்ரல், 2021

என்னருமைத் தமிழ்ப்புத்தாண்டே!

 


என்னருமைத் தமிழ்ப்புத்தாண்டே!

________________________________________ருத்ரா


உனக்கு என் வணக்கம்.

எங்கள் வாய்மொழிக்குள் நீ

வரவில்லை என்றாலும்

எங்கள் வாயிலுக்குள் 

வந்து விட்டாயே!

"விருந்து புறத்ததா தானுண்டல் சாவா 

மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று"

அமுதமாயினும் அது

விருந்தினருக்கே முதன்மையாய்

படைக்கப்படவேண்டும் என்றான் வள்ளுவன்.

அந்நிய மொழி எனும்

நஞ்சாக நீ இருந்த போதும்

"தமிழ்ப்புத்தாண்டு" எனும்

அமுதம் அல்லவா நீ ஏந்தி வந்திருக்கிறாய்.

புறத்தே வந்த விருந்தே

தமிழ்ப்புத்தாண்டு எனும் அமுதத்தோடு

வந்திருக்கிறது.

சேர்ந்தே உண்ணுவோம்.

அச்சம் தேவையில்லை.

தமிழ் அமுதம் மட்டும் அல்ல.

நஞ்சையும் முறிக்கும் மருந்தும் 

அது தான்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் 

எனினும் 

தமிழ் வாழும் வாழும்.

வாழ்ந்து வளர்ந்து வெல்லும் வெல்லும்.


அழையாத விருந்தாளியாய்

அறுபது அறுபது ஆண்டுகளாக‌

வருகிறாயே.

பெயக்கண்டும்  நஞ்சுண்டு அமையும் நயத்தக்க‌

நாகரிகத்தவர் நாங்கள்.

"பிலவ"த் தமிழ்ப்புத்தாண்டுக்கு

எங்கள் வணக்கம்!

_______________________________________________________

ஒற்றை மயிலிறகு

 


ஒற்றை மயிலிறகு

___________________________________ருத்ரா


மயிற் பீலி தான் என்றாலும்

ஒரு வண்டி நிறைய பாரமாய்

என்னால் இழுக்க முடியவில்லை.

மூச்சுத்திணறுகிறது.

அழகாய் கிச்சு கிச்சு மூட்டுகிறதே

அவள் அன்று உதிர்த்த சிரிப்பு

ஒரு மயிற்பீலியாய் 

என்று

விரல் இடுத்தில் வைத்து

விந்தை உலகம் ரசித்து நின்றேன்.

அப்புறம்.

அவள் முகம் காணவில்லை.

முகவரியும் இல்லை.

முகநூலும் இல்லை.

காத்திருக்கும் சுமையின் பாரம்

தாங்க முடியவில்லை.

என் இதயம் தைத்த அவள் சிரிப்பு

எனும் அந்த ஒற்றை மயிலிறகா

பாரம் தாங்காது

இப்படி என்னை ஒரு

பாதாளத்தில் அமுக்குகிறது?

ஓ! பெண்ணே!

எங்கிருந்தாவது

இன்னொரு கலீர் சிரிப்பை 

சிந்தி வையேன்!

இந்த மயிற்பீலிகளே

எனக்கு இந்த ஆகாசத்தில்

ஒரு கூடு கட்டித்தரட்டும்.


________________________________________

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

கவிதை எழுத‌....

 பெண்ணே!

உனக்குத்தான்

கவிதை எழுத‌

பேனாவை எடுத்தேன்.

அது

என்னை விட்டு விடு.

அந்த ரவிவர்மாவின்

தூரிகையை பிடுங்கிக்கொண்டு

வா

என்றது.


__________________________ருத்ரா


புதிய மூச்சு!

 புதிய மூச்சு!

_______________________________ருத்ரா


ஒரு அருகம் புல் கூட‌

பச்சையாய்

நிமிர்ந்து நிற்கிறது.

கவிதை சொல்கிறது

தன்னிடம் உட்காரும்

பட்டாம்பூச்சியுடன்.

மனிதனை

மண்புழு ஆக்குகிறதே

இந்த பொருளாதாரம்.

லட்சக்கணக்கான கோடிகள்

வைத்திருப்பவர்கள்

பசித்தால் "லஞ்ச்சுக்கு" அந்த 

மேற்கு தொடர்ச்சி மலையையே

சாப்பிட்டுக்கொள்கிறார்கள்.

விரும்பினால் அந்த 

இமயமலையையே 

கேக் துண்டுகளாய்

"தாராளமாய்"

வெட்டி எடுத்துக்கொள்ளலாம்

என்பது தான்

"புதுப்பொருளாதாரமா?"

புதிய மனிதனே!

வெறும் புல் அல்ல 

நீ நசுங்கிக் கூழாகிட!

கொஞ்சம் 

இழுத்து மூச்சு விடு

அது போதும்!


____________________________________________

தமிழ்வருடம்

 



தமிழ்வருடம் பிறக்கப்போகிறதே!

அந்த ஸ்ரீ இந்த ஸ்ரீ என்று

பெயர் சூட்டி அலுத்துவிட்டது.

இந்த வருடம் 

"கொரானாஸ்ரீ"என்று 

கொண்டாடலாமா?


____________________________ருத்ரா

புதன், 7 ஏப்ரல், 2021

ஓட்டு

 ஓட்டு

___________________________________ருத்ரா


உளியைத் தந்தார்கள். 

காலடியில் கிடக்கும் கல்லை

சிற்பமாக்கிக்கொள்ளுங்கள் 

என்று.

அது கல் இல்லை. 

ஒரு எரிமலையின் கனவு

என்று உணர்ந்த போது

"வெந்து தணிந்தது காடு"

என்ற பாரதியின் வரிகள் மட்டும்

இங்கே மிச்சம்.


________________________________________

விடுதலை

 விடுதலை

___________________________ருத்ரா



ஒரு புயல் வந்து

ஓய்ந்தது.

நம் தேர்தலை புயலுக்கு

ஒப்பிடுவது

முட்டாள் தனத்தின் சிகரம்.

புயலின் நோக்கம்

மாற்றம் மட்டுமே.

அழிவு என்பது அதன்

பாதையின் குறுக்கீடு.

ஆனால்

இந்த அற்ப மனிதர்களின்

தேர்தல் என்பது

சாக்கடையின் மழை.

வஞ்சகங்களின் புயல்.

நேர்மையாய் ஒரு 

அதர்மத்தை 

எதிர்ப்பதற்குப்பதில்

அதர்மங்களோடேயே

கைகோர்த்துக் கொள்வது

என்ன அறம்?

நேற்றைய தர்மங்கள் இன்றைய‌

அதர்மங்கள் என்று

பரிணாமம் பட்டயம் எழுதும்போது

இன்றைய அதர்மங்களுக்கு

கும்பாபிஷேகம் செய்யும்

குள்ளநரித்தந்திரங்களே

சாதி சமய சாஸ்திரங்களாய்

மனித சமுதாயத்தைக்கசாப்பு செய்ய‌

கத்தி ஏந்துகின்றன.

பத்திரிகைகள் எனும்

தராசுகளும் 

தறிகெட்டுப்போய்விடுகின்றன.

ஜனநாயக வெளிச்சத்தை

இருட்டடிப்பு செய்து 

தங்கள் கஜானக்களின்

கொலைகார வயிறுகளை

பணங்கள் கொண்டு 

ரொப்பிக்கொள்கின்றன.

மனித அறிவின் உச்சம் என்று

இந்த கணிப்பொறிகள் முன்னே

நம் ஜனநாயகக்கற்பை

விரல்களில் பச்சை குத்திக்கொண்டோம்.

அந்தோ!

இந்த விரல்களைக்கொண்டு

நம் கண்களைக்குத்தி

நம் விடியலை தரிசிக்கவிடாமல் 

செய்யும் இவர்களின்

சகுனித்தனமான வியூகங்களிலிருந்து

என்றைக்கு

நமக்கு விடுதலை?


___________________________________________


திங்கள், 5 ஏப்ரல், 2021

போதும் போதும்!


 போதும் போதும்!

_________________________________ருத்ரா


சும்மாகிடந்தேன் 

காகிதம் என்று.

என்ன எழுதுகிறாய் நீ

என் மீது?

மொழியின் அகராதியை

கரையான் போல்

சொல் சொல்லாய் 

அரித்து எடுக்கிறாய்.

நான் எதற்கு அந்த‌

துணிவிரிப்பில் ஒரு

பிரபஞ்சத்தின் துளியாய்

வந்து விழுந்தேன் 

என்று நீ

உன் பிரம்மத்தின் பொய்க்கடலுக்குள் 

முங்கிக்களித்ததைப்பற்றி

பொங்கிப் பொங்கி எழுதுகிறாய்.

உனக்கு சுகமான ஒரு முகமூடி

என்று

அந்த ஆத்மிகம் பற்றி

சொற்களை உணர்ச்சியே இல்லாமல்

சிரச்சேதம் செய்கிறாய்.

கடவுளை அவர் கருவறைக்குள்ளிருந்து

வரவே விடாமல்

நீ செய்யும் கருச்சிதைவை

பாஷ்யம் பாஷ்யமாக எழுதிக்குவிக்கிறாய்.

மானுட பரிமாணம் பற்றி

மனதோடு எதுவும் எழுதுவதில்லை.

அநீதிக் கட்டுமானங்களுக்கே

உன் பளிங்குக்கற்களாலும்

பகட்டுச்சொல்லாடல்களாலும்

தோரணங்கள் கட்டுகின்றாய்.

கோவில் என்பது உடம்பு.

அதில் பூசை என்பது 

மனிதப்பசையோடு ஒட்டியிருக்கும்

அன்பு மட்டுமே.

ஒரு கோவிலை இடித்து

இன்னொரு கோவில் கட்டும்

உன் வறட்டு வாஸ்து இஞ்சினீயரிங்கில்

மானுடத்தின் எலும்புக்குவியல்களா

மிஞ்சுவது?

என்னவோ எழுதுகிறாய்.

எதையோ பேசுகிறாய்.

வரலாறு மனித ஈரமற்ற‌

மரணங்களின் 

கற்படுகை கொண்டு அடுக்கிய‌

காடுகள் அல்ல.

நீ எழுதியது போதும்.

இந்த எழுத்துக்களை பிணங்களாய்

குவித்ததும் போதும்.

மனிதச்சுடர் அணைந்துபோன‌ பேனாவை

வெறும் "கில்லட்டின்" ஆக்கி

இந்த சுவடுகளை ரத்தச்சேற்றில்

அமிழ்த்தும் கொடுமைகள்

போதும் போதும்.


_____________________________________




ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

கூடுகள்


கூடுகள்
__________________________________ருத்ரா


குச்சிக்கால் நாரைகளே
வளை மூக்கிகளே
என்ன இங்கே தவம்?
இந்த மனிதர்கள் 
பிறவிகளை உதிர்த்துக்கொண்டு
பிரம்ம உணர்வு என்னும்
மோட்சத்திற்கு
ஏங்குகிறார்கள்.
இதோ அது
உங்களிடம் அல்லவா இருக்கிறது.
அவர்கள்
வர்ணங்களற்ற ஆசிரமத்தை
படைப்பதாய்
பசப்பிக்கொள்கிறார்கள்.
ஆனால்
மனிதம் எனும் ஒரு பிரம்மம்
அவர்கள் அறியாமல் அவர்கள் மேல்
கவிந்து இருப்பதை உணராமல்
மனிதர்களையே
நான்கு வர்ணத்தில் தோலுரித்து
நாராசமாய் நாலு வேதம் சொல்லி
இரைச்சல்களில் 
பிய்த்துக்கொள்கிறார்கள்.
நீள் கழுத்து கொக்குகளே
உங்களில் யார் 
பரத்வாஜர்? 
காஸ்யபர்?
அத்ரி?
வசிஷ்டர்?
அங்கிரஸர்?
ஆனால் 
கோத்ரங்கள் இல்லாமல்
இவர்கள் உச்சரிக்கப்படுவதே இல்லை.
உங்கள் இறக்கைகளுக்குள் 
ஊடுருவிப்பார்த்தாலும் 
கோத்ரங்கள் சாத்திரங்கள் என்னும்
உண்ணிகளும் பூச்சிகளும் 
உண்டா என்ன?
அப்புறம்
அஜாதம் அவர்ணம் அமதம் அவ்யக்தம்
என்று 
அர்த்தமற்ற ஒலிக்கூளங்களில்
பிரம்மத்தை கீறு கீறு என்று
பிறாண்டுகிறார்ககள் இவர்கள்.
இவர்கள் பிரம்மத்தேடலுக்கு
ஓ!கொக்குககளே
உங்களுக்குள் 
கூடு விட்டு கூடு பாய்ந்துகொள்ள‌
முயற்சிக்கலாம்.
அனுமதிக்கவேண்டாம்.
அப்புறம்
உங்கள் அலகு ஒரு சாதி.
கழுத்து ஒரு சாதி.
உடல் கூடு ஒரு சாதி.
அந்தக் குச்சிக்கால்கள்
சூத்திர சாதி.
இறக்கை மூலம் உயரப்பறப்பதில்
அப்போது நீங்கள் பிராமண சாதி
என்று
சாயம் பூசி
அந்த வானம் முழுவதையுமே
அசிங்கம் ஆக்கி விடுவார்கள்.
கவனம் கொள்ளுங்கள் 
"ஃப்ளெமிங்கோ"க்களே.
உங்களை சின்னாபின்னம் செய்து
சாம்பல் ஆக்க‌‌
யாகம் வளர்க்கத்தொடங்கி விடுவார்கள்.
கவனம்.கவனம்.
அதற்குள் எங்கோ
அறிவு வேட்கையின் ஒரு 
துப்பாக்கியின் வேட்டு சத்தம் கேட்டது.
நாரைகள்
சிறகை பரப்பி பரபரப்புடன்
பறந்து போயின.
____________________________________________