திங்கள், 27 ஜூலை, 2020

சித்ரகுப்தனின் கருப்புக்கணக்கு

சித்ரகுப்தனின் கருப்புக்கணக்கு
========================================ருத்ரா


"நாரதா பூலோகத்தில்
என்ன விசேஷம்?"

"நாராயண..நாராயண..
அதை ஏன் கேட்கிறீர்கள்?
நம் சித்ரகுப்தர் மரணக்கணக்கில்
எல்லாம்
கருப்புக்கணக்கு இருக்கிறதாம்.
அவரும் ஏட்டை
புரட்டி புரட்டிப்பார்த்து விட்டார்
ஏன் இப்படி உயிர்கள் 
ஏட்டுக்கணக்கில் வராமல்
தொலைந்து கொண்டிருக்கின்றன‌
என்று முழி பிதுங்குகிறார்."

அப்படியா?
சிவனும் பிரம்மனும் 
என்ன சொல்கிறார்கள்?

"அவர்கள் என்ன சொல்வது?
சிவனுக்கு ரொம்பக்கஷ்டம்.
கோவில்களில் பூட்டுகள்
தொங்குகின்றன.
பிரதோஷ பூஜை கூட‌
நடக்க வழியில்லை.
பக்தர்கள் இல்லாமல்
பட்டர்களே 
தீபம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
பிரம்மனுக்குத்தான் கோயில் இல்லையே."

"அதுக்கெல்லாம் குறைச்சல் இல்லை.
வியாசன் தான் பிரம்ம சூத்திரம் என்று
555 சூத்திரங்கள் எழுதியிருக்கிறானே!"

"ஆமாம் பிரபோ!"

விஷ்ணு
திருவிளையாடல் 
சிவன் பாணியில்
"வெட்ட்க்கம்..வெட்ட்க்கம்"
என கர்ஜிக்கிறார்.

"பிரபு! நரர்கள் லட்சக்கணக்கில்
செத்து விழுகிறார்கள்.
சித்ரகுப்தன் ஏட்டில் 
எந்த விவரமும் இல்லை."

"நரகாசுர வதமா? 
அதுக்கு இன்னும் தீபாவளி வரவில்லை.
சிவகாசி வெடிகள் 
உற்பத்தியே தொடங்கவில்லை.
விஷ்ணு சக்கரங்களும் ரெடியாக வில்லை"
விஷ்ணு அங்காலாய்த்துக்கோண்டே போனார்.

மீண்டும் நாரதர் விஷ்ணுவை
உற்றுப்பார்க்கிறார்.
ஏற இறங்க பார்க்கிறார்.

"பிரபோ!
கண்டு பிடித்துவிட்டேன்.
எங்கே உங்கள் 
கையில் உள்ள சக்கரம்?"

"என்ன சொல்கிறீர்?
ஆமாம் காணவில்லை"
விஷ்ணு திடுக்கிடுகிறார்.

"ஆம் பிரபு!
பூலோகத்தில் தான்
அது முள் வடிவில்
சக்கரமாய் சுழலும் 
உயிராய்
கண்ணுக்குப்புலப்படாமல்
"நரகா"க்களையெல்லாம்
பலி வாங்கிக்கொண்டிருக்கிறது.
அதை "கொரோனான்னு"
எல்லோரும் விழுந்து
கும்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்"

"என்ன அக்கிரமம் இது?
நாரதா இதை உடனே தடுத்தாக வேண்டும்"

"பிரபோ..
பூலோகத்தில் இதற்கு
ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள்
தடுப்பூசி வைத்து..."

விஷ்ணு குறுக்கிடுகிறார்.
என்ன சொன்னீர்?
சந்தனம் குங்குமம் போல்
எதையோ பூசி வைத்து
பூஜை செய்கிறார்களா?

இல்லை பிரபோ.
அது ஏதோ ஊசியாம்..
................
....................
"ஊசியா? அய்யோ! வேண்டாம் வேண்டாம்.."
................
...............
"என்னடா ? என்ன ஆச்சு? என்ன கனவு கண்டே?"

மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்த
பேரனிடம் பாட்டி கேட்டுக்கொண்டிருந்தாள்.

"ஆமாம் பாட்டி.அந்தக்காலத்துலெ
அம்மைக்கு ஊசி போட வரான்னு
பயந்து நீ ஒடி ஒளிஞ்சுகிட்ட 
கதை சொன்னியா..
அதான்..
பெருமாளுக்கே ஊசி போட வராப்ல‌
கனவு கண்டேன்."

"நல்ல கனவு கண்டே..போ!"

பேரனை ஆரத்தழுவிக்கொண்டாள்
பாட்டி.

============================================
(நகைச்சுவைக் கற்பனை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக