புதன், 1 ஜூலை, 2020

தேசிய மருத்துவர் தினம்

தேசிய மருத்துவர் தினம்
========================================ருத்ரா

கழுத்தில் 
ஒரு குட்டிப்பாம்பென‌
அந்த ஸ்டெதஸ்கோப் ஆட‌
மெல்ல மெல்ல வருகின்றார்
அவர். 
இந்த மனித உயிர்களின்
மூச்சுகளுக்குள் புகுந்து
அந்த உயிர்க்குஞ்சை வெளியே
சிறகடித்து சென்று விடா வண்ணம்
காத்தருளுகிறார் அவர்.
ஊசி என்றால் நினைவுக்கு வருவது
ஊசியும் வலியும் மட்டும் அல்ல‌
பி சி ராயும் தான்.
டாக்டர் வேலையை வேலையாக பார்க்காமல்
வாழ்க்கையாய் வாழ்ந்து 
மக்களுக்கு அருந்தொண்டு ஆற்றியவர்
அல்லவா அவர்!
மருத்துவர் முதலமைச்சராக இருக்கும்
அதிசயத்தை பதினான்கு ஆண்டுகள்
மேற்குவங்கத்தில் 
நடத்திக்காட்டினார்.
நோய் நாடி நோய் முதல் நாடி
அது தணிக்கும் வாய் நாடி
சேவை செய்யும் வாய்ப்பில் 
செங்கோல் ஏந்தியவர்.
1961ல் பாரத ரத்னா விருது பெற்றார்.
அவரை நினைவு கூர்வது 
காலத்தின் கட்டாயம்.
இன்று அரசியல் ஒரு நோய் தொற்று போல்
மிரட்டுகிறது.
அதனால் ஆட்சிக்கு வருவது
மருந்தா? நோயா? என்று
தெரியாத மனச்சிதைவு மக்களிடம்
புரையோடிக்கிடக்கிறது.

மனித சிந்தனைகளின் 
கடைசி விளிம்பு
கடவுளுக்கு பட்டா போடப்பட்டு விட்டது.
ஏதோ ஒரு கயிறு அறுந்து
ஏதோ ஒரு பாதாளத்துக்குள்
விழப்போகும்
அந்த அச்சத்தின் உச்சி முனையில்
கூட‌
ஒரு நம்பிக்கையை விதைத்து
அறுவடை செய்து தரும்
அற்புத விவசாயி அல்லவா
மருத்துவர்.
அவரும் ஊசியில் மருந்தோடு
ஒரு இறை திரவத்தை
சேர்த்து உடலுக்குள் செலுத்துகிறார்.
நோயாளி பிழைத்து எழுகிறான்.
அவனுக்கு
டாக்டர் கழுத்தில் பாம்புடன் வரும்
சிவனாகத் தெரிகிறார்.
அவரவர் மதத்துக்கடவுள்
அந்த வெள்ளுடை தரித்த டாக்டராக‌
தெரிகிறார்.
உயிரின் ஊசிமுனையில்
நின்று கொண்டு
ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும்
பட்டிமன்றம்
நடத்தினால்
அங்கே ஆத்திகராகவும் நாத்திகராகவும்
தரிசனம் தருவது டாக்டர் தானே.
பிழைத்தால் மருந்து காரணம்.
இறந்தால் கடவுள் காரணம்.
மருந்துக்குள்ளும் ஒரு கடவுள் இருக்கிறார்
என்று வெண்டிலேட்டரையும் நாம்
கோவில் ஆக்கிக்கொண்டதால் தான்
அந்த கோவில்களுக்கு 
பூட்டு போட்டு வைத்திருக்கிறோம்.
கடவுளுக்கு கொரோனா வந்து விடக்கூடாதே
என்ற பக்தியின் உச்சம் என்று
அதை நாம் எடுத்துக்கொள்ளலாம்.
எப்போதுமே கடவுள் காரணம்
என்று 
ஒரு குடையை விரித்துக்கொண்டு
செல்வோம்.
அது சுகமான பாதுகாப்பாக‌
தோன்றுகிறது.
தோற்றம் எல்லாம் மாயை என்கிறது
தத்துவம்
கடவுளையும் சேர்த்துத்தான்.
நமக்கு எப்படியும்
அதோ டக் டக் என்று
மருத்துவ மனை கூடங்களில்
நடந்து வருகிறாரே
அந்த மருத்துவர் தான் எல்லாம்.
உலகத்தின் உருளும் அச்சு அவர்.
அவருக்கு
என்றும் நம் 
போற்றிகள் போற்றிகள் போற்றிகளே

================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக