ஞாயிறு, 5 ஜூலை, 2020

வெள்ளிப்பனி மலையில்...

வெள்ளிப்பனி மலையில்...
================================================ருத்ரா


அண்டை நாடுகள்

மீசை முறுக்கிவிட்டுக்கொள்கின்றன.
எல்லைக் கோடு எந்தக்கோடு?
கேள்வி முனைத் திரியில்
பீரங்கிகள் உமிழ்கின்றன
எப்போதும் மரணங்களை.
மனிதன்
பீரங்கியைக் கண்டுபிடித்த பின்
அதற்குத் தீனியாக‌
புல்லுக்கட்டுகள் போன்று
இந்த ராணுவ மனிதர்களையும்
உருவாக்கிக்கொண்டான்.
புதிய புதிய ஆயுதங்கள்
புதிய புதிய விலையில்
சந்தைப்படுத்தப்படுகின்றன.
மனிதனின் உயிர் போன்றது
தேசபக்தி என்றான்.
உயிர்களை லட்சக்க‌ணக்கில்
கூழாக்கித்தின்னும்
அழகிய ஆட்சி எந்திரத்துக்கு
லேபிள் ஒட்டினான் போர் என்று.
இந்த "ஆயுத பூஜையை"
எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும்
கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
எங்கேயாவது
ஒரு  புல் பூண்டற்ற பூமியில்
மதம் இனம் மொழியை
அதன் வெறியை 
பச்சை குத்திக் கொள்ளாத‌
அதில் 
பச்சை ரத்தம் பருகத் துடிக்காத‌
மனித உள்ளத்தின் 
கருவறை திறந்திருக்கிறதா?
என்று சொல்லுங்கள்.
அதனுள் 
புகத்துடிக்கிறேன்
ஒரு புதுயுகத்தின் இறக்கைகளோடு
எல்லா உயிர்களிலும் 
ஒட்டிக்கொள்ளும் 
ஒரு நேயப்பிழம்பை ஊற்றிக்கொண்டு
மீண்டும் பிறந்து வர!

==============================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக