சனி, 4 ஜூலை, 2020

சரித்திரம்.

சரித்திரம்.
==========================================ருத்ரா

அது ஒரு 
பாழடைந்த கோயில்.
கடவுள் சிலை
முகம் மழுங்கிப்போயிருந்தது.
ஆனாலும்
உயிர்ப்போடு ஒரு சிரிப்பு.
சிலையைச்சுற்றி
பெயர் தெரியாத ஏதோ புதர்கள்.
கோவில் சுவர் 
திறந்த வாயின்
பற்கள் விழுந்த இடைவெளியை
நினைவு படுத்தியது.
இன்னும் சிலைகள்
கை இழந்து கால் இழந்து
எலும்பு முறிவு டாக்டர்களால் எல்லாம்
சரி செய்யப்பட முடியாமல் 
நின்றன.
சில தூண்களில்
வரிசையாய் 
நம்மால் படிக்க முடியாத எழுத்துக்கள்..
தொல்லியல் ஆட்கள்
கி மு கி பி என்று
ஆண்டுகள் எனும் லென்ஸ் வைத்து
படித்தார்கள்.
மனிதர்களின் அர்த்தமற்ற‌
ஆவேசம் சினம் 
இவற்றின் எடுத்துக்காட்டுகள் தான் இவை.
மசூதிகளும் இப்படி
தூளாக்கப்பட்டன.
தேவாலயங்கள் எரிக்கப்பட்டன.
கோபமே படாமல்
சிரித்துக்கொண்டே இருக்கும் 
முகங்களுடன்
கடவுள்கள் அங்கே கிடந்தார்கள்.
காலஓட்டத்தின்
மனித முகம் மட்டும்
சிதைந்து சிதைந்து
இப்படி
செதில்களாக சிதறிக்கிடக்கின்றன.
வழிபாட்டுக்குரல்கள்
எத்தனை ஒலித்தும்
அந்த ஆபாசங்கள் இன்னும்
கழுவப்படாமல்
சரித்திரம் எனும்
நொண்டி மாட்டு வண்டி 
அச்சு முறிந்தும் 
அதோ
கடகடத்து ஓடிக்கொண்டிருக்கிறது.

=====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக