சனி, 4 ஜூலை, 2020

மணி அடிக்கும் முன்னே....


மணி அடிக்கும் முன்னே....
========================================ருத்ரா


ஆப்பிரிக்க வறுமையின் 
இருண்ட கண்டத்தில்
ஒரு நாடு.
கண்ணுக்கெட்டிய தூரம் பாழ்வெளி.
கொஞ்சம் காடுகள்.
வற்றிக்கிடக்கும் ஆற்றின் சுவடுகள்.
இந்த பெண் எலும்புக்கூட்டின் இடுப்பில்
ஒரு சிசு எலும்புக்கூடு.
அருகே காலடியில் 
நண்டும் சிண்டுமாய்
இரண்டு மூன்று வயதுகளில் 
எலும்புக்கூடுகள்.
இது ஒன்றும் ஆவிகள் பற்றிய‌
ஹாலிவுட் படம் அல்ல.
மானுடம் ஆவியாய் மாறும் முன்
எலும்பு மிச்சங்களாய் திரியும்
அவலச்சித்திரங்கள்.
இந்த எலும்புக்கூடுகளை
சதைப்பற்றின்றி
அப்படியே "ரா"வாய்
மண்ணில் படைக்கும்
அந்த பிரம்மாவின்
முதுகெலும்பை
அடித்து நொறுக்கினால் என்ன?
உலக மானிடமே!
"தனியொருவனுக்கு உணவில்லையெனில்
இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்"
என்ற‌
அந்த மனிதநேயக்கவிஞனுக்கு
மணிமண்டம் கட்டினாலும்
அந்த கவிதைவரிகளுக்கு
தினம் தினம்
கல்லறை தான் கட்டுகின்றோம்.
எத்தனை நாடுகள் இருந்தென்ன?
இந்தக்காட்சிகள்
நம் இதயத்தை நனைக்காத போது
எல்லாம் இங்கு சுடுகாடுகள் தான்.
சூட்டு கோட்டு டையில் 
ஆரவாரமாய் பேசுகிறார்
டிவியில்.
அந்த பேச்சில் கூட‌
வெறும் புள்ளிவிவரங்கள் எனும்
எலும்புக்கூடுகள் தான்.
அந்த நாடுகளில்
வறுமையை வளமையாய் மாற்ற‌
இயலாத வெறும் வறட்டுச்சொற்கள்.
வெட்டியாய்
ஐ.நா வின் 
வெட்டியான்களாய்
அதோ 
பட்டினி மரணங்களின்
கணக்குகளை
காட்டிக்கொண்டிருக்கிறார்.
இதைப்பற்றி தானே
இந்த "கொரோனாவும்"
ஏதோ ஒரு மொழியில் 
பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது.
பாடம் முடிந்த தென்று
மணி அடிக்கும் முன்னேயாவது
ஓ!மனித உள்ளங்களே
கசிகின்ற‌
உங்கள் இதயக்கதவுகளை 
திறந்து வையுங்கள்.

============================================ 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக