செவ்வாய், 31 டிசம்பர், 2019

நீந்திக்களிப்பேன்


நீந்திக்களிப்பேன்
===============================================ருத்ரா

உன் பொட்டைத்தான் பார்த்தேன்
அருகில் உன்
பூவிழிகள் இருந்தன‌
தூண்டில் இடாமலேயே
துடித்துக்கொண்டு.

உன் முல்லை முறுவலைப் பார்த்தேன்
அருகில் உன் இதழோரம்
அழகிய மச்சம் பார்த்தேன்.
நீ சிரிக்காத சிரிப்பை எல்லாம்
அதில் அல்லவா
தேக்கி வைத்திருந்தாய்.

உன் இதயக்குரல் கேட்டேன்.
அதன் அருகில்
இன்னொரு குரலும் கேட்டேன்.
ஒரு இதயம் பேசிக்கொண்டே இருந்தது.
இன்னொரு இதயம்
"உச்" கொட்டிக்க்கொண்டே இருந்தது.
இன்னும் முழுதாக சொல் வரவில்லை.

"நான் உன்னை..."
அந்த சொல் இன்னும் உதிரவில்லை.
உதிரும்போது உதிரட்டும்.
உன்னிடம்
எதிர்மறையாய்
ஒரு அசைவு தோன்றி
நீ
முகம் திருப்பிக்க்கொண்டால்
அவ்வளவு தான்.
ஆயிரம் தடவை இறந்து போனவனாய்
அந்த சுனாமிகளிலிருந்து
என் சடலங்கள்
என் மீது மோதும் காட்சிகள்
எனக்கு வேண்டாம்.
அந்த சொல்
நீ சொல்லாமலேயே
சொல்லிவிட்டதாய்
அது வரை நான்
இந்த நுரைக்குமிழிகளோடு
நீந்திக்களிப்பேன்!

==========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக