புன்னகை
========================================ருத்ரா
அந்த மாட்டுக்கொட்டிலில்
பனித்துளிகளோடு
பனித்துளியாய்
முகிழ்த்த அந்த குழந்தையின்
புன்னகை
இந்த உலகை
வாரிச்சுருட்டிக்கொண்டது.
அதில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும்
மேலாக
காலமும் சுருண்டுகிடக்கிறது.
துப்பாக்கிகள்
மரணங்களை உமிழும்
யுகம் ஒன்று
குறுக்கே மறித்துக்கிடந்த போதும்
அன்பின் ஒளி
எல்லா இடங்களிலும்
எல்லா பொழுதுகளிலும்
கசிந்து கொண்டு தான் இருக்கிறது.
கடவுளுக்கும் மனிதனுக்கும்
இடையே உள்ள சமன்பாட்டை
அந்த கனத்த சிலுவைமரமா
முறித்து விடப்போகிறது?
ஜனனம்
மரணத்தை ஜனிக்கிறது.
மரணம்
ஜனனத்திற்கு விதை ஊன்றுகிறது
என்கிறான் தத்துவஞானி.
மனிதன் தனக்குக்கிடைத்த
சாக்கலேட் பொட்டலத்தைப்பிரித்து
இனிமையைத்தேடுகிறான்.
அந்த வாழ்க்கையை
அவனை சுவைக்கவிடுங்கள்.
கடவுள் என்னும் தட்டாம்பூச்சியைத்தேடும்
விளையாட்டை
அவன்
அப்புறமாக
வைத்துக்கொள்ளட்டும்.
============================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக