ஏ விரியன் பாம்புக்குட்டிகளே!
=================================================ருத்ரா
ஏ விரியன் பாம்புக்குட்டிகளே!
இப்படித்தான்
புனித யோவான்
ஒரு நாள் யோர்தான் ஆற்றங்கரையில்
மனிதன் எனும் நிலைக்குள்
வராத அரைகுறை மனிதர்களைப்
பார்த்துக்கூறினான்.
கடவுள் வந்து உங்கள்
இதயங்களுக்குள் எல்லாம்
மெழுகுவர்த்தி ஏற்றப்போகிறார்
என்பதாகக்கூறினான்.
அந்தக்கடவுள் கொண்டுவந்ததில்
கூட
ஒரு இருட்டு தான்
மெழுகுவர்த்தியாக இருந்தது
என்று
அதன் பின் நீண்டுவந்த
காலத்தின் ஒரு முடிச்சில்
சிக்கல் அவிழ்த்துக்கொண்டிருந்த
மனிதர்களுக்கு புரிந்தது.
பக்கத்து பக்கத்து மனிதர்களிடையே
அன்பின் வெளிச்சம் கசிய வேண்டும்
என்பதே
அவர் காட்டிய இருட்டுக்குள்ளும்
ஒரு மின்னல் காட்டியது.
ஆனாலும்
அறிவின் வெளிச்சம் பற்றிய
அறிவு தேவை இல்லை
என்று
அந்தக்கடவுள்
ஏன் முடிவெடுத்து விட்டார்?
தினம் தினம்
நம்மைச்சுட்டெரிக்கும் சூரியன்
சொன்னது
நீங்கள் எல்லாம்
என்னைத்தான் சுற்றி வருகிறீர்கள் என்று.
ஆனால்
கடவுளைக்காட்டியவர்கள்
ஏன்
அந்த அறிவு வாசல் திறப்பதில்
ஏதோ ஒரு சைத்தான் படுத்துக்கிடப்பதாக
பயந்தார்கள்?
ஆம்.
எல்லாவற்றையும் அறிந்து கொள்ளுவதற்கும்
ஒரு அச்சமின்மை வேண்டும்.
ஏனெனில்
அறிவின்மை என்பதும்
கொடிய தீப்பிழம்புகள் மழையாகப்
பெய்வதைப்போன்ற நரகம் தானே!
கடவுள்களுக்கு
இது பொறி தட்டுவதில்லையா?
அல்லது
பொறி தட்டியதில்
தானே தான் பெரிய பிதாமகன்
என்ற நிலை
தன்னிடமிருந்து நழுவி விடுமோ
என்ற ஒரு சிறு அறிவின் கீற்று
அவருள் புகுந்திருக்குமோ!
அப்படி எல்லாம்
மனிதனின் அற்பத்தனமான
ஐம்பொறிகளின் திமிர்வு
அவனிடம் இருக்கும் என்ற
கற்பித நிலை அல்ல கடவுள்.
அறிவின் பிரவாகம் அவன்.
அறிவின் பிழம்பு அவன்.
என்ற பேரறிவு
இந்த சிற்றறிவுக்குள்
சிறைப்பட்டிருக்க இயலுமா?
இல்லை.
இருட்டை
கொஞ்சம் கொஞ்சமாகவேனும்
தின்று செரித்து
ஒளி படைத்த கண்ணினன் ஆக
மலர்வது தானே
மனிதனின் பயணம்.
இதை
வழிமறிக்கும் எந்த
வழியையும் புறந்தள்ளுவதே
உண்மையான
கடவுள் விஞ்ஞானம் ஆகும்.
ஆத்மிகம் எனும் இருட்டை
போர்த்திக்கொண்டு
ஆகாயத்தை சுருட்டிக்கொள்ள
முடியாது.
ஆம்.
விழிமின்! எழுமின்!
அறிமின்!ஆள்மின்!
=============================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக