வியாழன், 19 டிசம்பர், 2019

எங்களுக்கு ........

எங்களுக்கு ........

==========================================ருத்ரா



எங்களுக்கு...

நிவாரண மானியமாக‌

சில ஆயிரங்கள்

வங்கி கணக்கில் ஏறினால் சரி.

காந்திக்கணக்காக‌

சில ஆயிரங்கள்

கைக்குள் விழுந்தாலும் சரி!

அந்த அரைஇருட்டில் முகம் தெரியாதவர்கள்

எப்படித் தந்தாலும் சரி!

ஜனநாயகத்தை நிச்சயமாக‌

பூதாகரமாய் பலூன் ஊதி பெரிதாய்

பறக்க விடுவோம்!

இந்த சமூகமே கந்தலாகிக்கிடக்கிறது.

சமுதாயப் பிரக்ஞை இல்லவே இல்லை.

மானிட வெளிச்சம்

இந்த இருட்டுக்குகையில்

பாயவே இல்லை.

வர்ண வர்ண வெளிச்சங்களை

நம் முகத்தில் அடித்து

கண் கூசச்செய்யும்

தொலைக்காட்சி ஊடகங்களில்

கூட‌

மக்களின் உயிர்ப்பான ஜனநாயகம்

தொலைந்தே போய்விட்டது.

ரோட்டில்

லாரியில் நசுங்கிக்கிடக்கும்

ஒருவனின் ரத்தச்சகதியை

வர்ணமயமாய் காட்டிவிட்டு

அமைதி கொள்வதைப்போல்

இந்த ஜனநாயகம்

ஒவ்வொரு தேர்தலிலும்

கசாப்பு செய்யப்படும்போதும்

அந்த கண்ணுக்குத் தெரியாத‌

வெட்டரிவாளைப்பற்றிய‌

வெலாவரியாய் வர்ணனைகளுடன்

டிவிக்களின்

வியாபாரக்கடமை  முடிந்து விடுகிறது.

இவை

மருத்துவமனையில்

அறுவைக்குமுன் போடப்படும்

மரப்பு ஊசியாய்

இவர்களை "பிண மனிதர்கள்" ஆக்கிவிடுகின்றன.

அந்த பொறியில் பட்டன் தட்டும்

பொறி மனிதர்களாய் இங்கே

வரிசைகள் மொய்க்கின்றன.

"தூக்கத்தில் நடக்கின்றவர்களைப்போல"

 வக்கிரமான

"சோம்னாம்புலிச வோட்டிங்"எனும்

அந்த காட்சிகளின்

லேசர் ஒளிப்புகையைக் காட்டி

ஊடகங்கள்

தன் டி ஆர் பி ரேட்டை உயர்த்திக்கொள்வதோடு

சரி.!

நாளைக்கு எவனாவது ஒரு

இடி அமீன் வந்தால் கூட

அவனை வைத்துக்கொண்டு

பட்டி மன்றம் நடத்தினாலும் நடத்துவார்கள்!



அதோ டாக் ஷோ ஆரம்பித்து விட்டார்கள்.

யாருக்கு என்ன அக்கறை?

அந்த கூச்சல்கள் சப்தம் எழுப்பிக்கொண்டிருக்கட்டும்.

மௌனமாக ஜனநாயகத்தின்

சமாதிக்கு

எங்கோ எப்படியோ

குழியும் தோண்டப்பட்டுக்கொண்டிருக்கிறது.



==================================================
4 ஆகஸ்ட் 2017 ல் எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக