புதன், 11 டிசம்பர், 2019

மசோதாக்களின் மத்தாப்புக்காடுகள்.

மசோதாக்களின் மத்தாப்புக்காடுகள்.
================================================ருத்ரா



எண்ணிக்கைகளின் காட்டில்
எண்ணங்கள் 
சுடுகாட்டுக்கு ஏகின.
மின்னணு பொறி தந்த‌
மர்ம இருட்டே
வெளிச்சம் என ஆயிற்று.
வாக்குகளின் மிருக பலம் 
கைக்கு  வந்தபோது 
மானிடம் 
மொத்தமாய் 
பலிபீடத்துக்குப் போனது.
கடவுள் என்ற சொல்லில்
சைத்தான்களே கூடு கட்டின.

மனிதமே
சமுதாய ஆன்மிகமாய்
புனிதமான 
சமத்துவ நீதியே
ஒரு இறை தன்மையாய்
பரிணாமம் உற்ற போது
அந்த மத அரக்கம்
அதை தின்று தீர்க்கத் துடிக்கிறது.

புதிதாய் 
அட்டை போடுகிறோம் 
என்று சொல்லி 
அரசியல் அமைப்பு புத்தகத்தின்
பக்கங்களையே கிழித்து
எறிந்தார்கள்.
ரத்த சதையாய் இருந்த‌
ஜனநாயகம்
கசாப்பு செய்யப்பட்டு விட்டது.
அதோ
மேசை தட்டும் அந்த வெற்றொலிகளில்
நியாய செங்கோல்
உடைத்து நொறுக்கப்பட்டது.

வாருங்கள் 
வந்தே மாதரம் என்போம்
அந்த கபாலங்களின்
குவியலில் கட்டிய‌
கோவிலுக்கு.

விடியல்கள் இல்லாத 
சந்நிதானம் 
இங்கே வணங்கப்படுகிறது.
ஏனெனில் இது
மசோதாக்களின் 
மத்தாப்புக்காடுகள்.

================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக