திங்கள், 30 டிசம்பர், 2019

ராம ராஜ்ஜியம்

ராம ராஜ்ஜியம்
===============================================ருத்ரா



எதற்கு அவளை
தீக்குளிக்கச்செய்தேன்.
அரச மகுடத்துக்கு
இவர்கள் மெருகு பூசிக்கொள்ளவா
அவளைத்தழுவிக்கொள்ள‌
இந்த தீநாக்குகளை
அனுமதித்தேன்?
தன்னைச்சுற்றி
கற்பு எனும் அக்கினி வளையத்தை
வைத்திருந்தவளுக்கா
இந்த தீ மூட்டம்?
மானுட நீதியையும்
பெண்ணியம் காக்கும்
கண்ணியத்தையும்
கசாப்பு செய்யவா
இந்த பட்டாபிஷேகத்தை இங்கே
நடத்தினார்கள்.
வசிட்டனே புனைந்தான் மௌலி
என்று
கம்பன்
தாரை தப்பட்டை முழக்க‌
எழுதிக்குவித்தானே
அத்தனையும்
என் அன்புச்சீதைக்கு
சிதையாக மாறவேண்டும்
என்றா
சாணக்கியம் சொல்கிறது?
உலகத்து மக்களின்
செவிகளுக்குள் எல்லாம்
பிரம்மம் ஒலிக்கவேண்டும்
என்பது தானே
பிரம்மம்.
அதை மறித்து
பிறப்பு எனும் கற்சுவர் கட்டி
தாழ்ந்த மக்கள்
பிரம்மத்தை ஒலிப்பதா என்று
அவர்கள் செவிகளை
பொசுக்குவதா ராஜ தர்மம்?
என்னை அவதாரம் என்று
கடவுள் ஆக்கிய பின்
அந்தக் கடவுளே
தன் படைப்புகளை
கொச்சைப்படுத்தும்
இந்த "ராம ராஜ்யத்தையா"
இவர்கள்
பெரும் பாறாங்கல்லாய்
என் மக்கள் மீது போட்டு
நசுக்கப்பார்க்கிறார்கள்?
இவர்கள் கட்டும்
கோவிலும் எனக்கு வேன்டாம்.
இவர்கள் செய்யும்
சிலையும் எனக்கு வேண்டாம்.
நானும்
இந்த தீக்குழிக்குள்
இறங்கிக்கொள்கிறேன்.
ராமனின்
இந்தக்குரல் கேட்கிறதா?
மனித நீதிக்கு
மயான காண்டம்  பாடவந்த
மத அரக்கர்களே .

==================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக