வெள்ளி, 27 டிசம்பர், 2019

கல்லிடைக்குறிச்சி


    சான் ஓசே  பூங்கா .கலி ஃபோர்னியா .



கல்லிடைக்குறிச்சி
=====================================ருத்ரா

இது
எனது கலிஃபோர்னியா.
அந்த மண்ணை
இப்போது இங்கு
அப்பி யெடுத்து
பதித்துக்கொள்கிறேன்.
அந்த கன்னடியன் வாய்க்காலில்
விரால் மீன் குஞ்சாய்
நீந்திக்களித்ததை
இங்கே இந்த சான் ஓசே நகரில்
கிராஃபிக்ஸில்
ஓட்டி ஓட்டி பார்த்துக்கொள்கிறேன்.
அங்கே
தாமிர வருணியின்
பளிங்கு அலைப்பிஞ்சுகளை
என் இமையோரங்களில்
கற்பனை படுகையாக்கி
திளைக்கின்றேன்.
அந்த வெள்ளித்திவலைகளில்
என் வயதுகளையெல்லாம்
ஜரிகை வேலைப்பாடுகள் ஆக்கி
களித்த தருணங்களை
கைச்சிமிழுக்குள்
வைத்துக்கொண்டிருக்கிறேன்.
அதன் மதிப்பு?
மில்லியன் டாலர் தூசுகளால்
சமன் செய்ய முடியுமா?
எஸ் எஸ் எல் சி
எனும் கல்வியை நான்
அங்கே திலகர் வித்யாலயத்தில்
பச்சை குத்திக்கொண்ட நாட்கள்
முத்தும் பவளமுமாய்
என் கை நிறைய இருக்கின்றன.
கோடை கால விடுமுறையில்
அந்த பள்ளிக்குள் உலா வருவேன்.
அங்கே அந்த வேப்பமரங்களின்
காக்கைகள்
வேப்பபழம் தின்ற‌
தோல் மிச்சங்களும்
காய்ந்த வேப்பிலைக்குச்சிகளும்
சருகுகளும்
நிறைந்து கிடக்கும்.
அந்த அற்புத மௌனத்தில்
மாணவர்களின் மாணிக்கக்குரல்கள்
எதிரொலிக்கும்
அந்த வகுப்பறைக்குள்
மாணவ சமுதாயம்
நாளைய சமுதாயத்தை
கர்ப்பம் தரித்து நிறைந்து நிற்கும்
காட்சிகள்
இன்றும் என் இலக்கியம்.
கலிஃபோர்னியாவின் பாம் ட்ரீஸ் தோறும்
எங்கள் வாய்க்கால் கரை
பனை மரங்களும்
பனங்குட்டிகளும்
மண்ணின் அந்த மலைக்குன்றுகளின்
ஆத்மாக்களோடு
என் நினைவின் விளிம்போரம்
சித்திரம் நீட்டி நிற்கின்றன.
வாய்க்காற் கரையிலேயே நடந்து
அந்து குடமுருட்டி
சங்கரன் கோயில்
ஆற்றின் கூழாங்கற்படுக்கையில்
நடக்கும் போது நீர் இழைகள்
என் கால்விரல்களை கவ்விப்பிடிக்கும்
அந்த சுகம்
என் எழுத்துக்குள் கல்வெட்டுகள்
ஆயினவே.
வைராவி குளம் எனும் ஊரில்
தாமிரபரணியும் மணிமுத்தாறும்
திருமணம் செய்துக்கொள்ளும் காட்சி
ஒரு "வைரமுத்துக்கவிதை" ஆகும்.
கல்லிடைக்குறிச்சியே
இந்த ஓக் மரக்காட்டின்
இலை இடுக்குகளுக்குள்ளும்
கண்ணாமூச்சி ஆடி ஆடி
என்னை
கலங்க விடுகிறாயே.
விரைவில் வருவேன்.
அந்த மானேந்தியப்பர் கோவில் அருகே
உள்ள இலுப்பை மரங்களின்
முத்து அரும்புகள்
என்னை வரவேற்றுச்சிரிக்கும்
அந்த நாளை நான்
சங்கமிக்க வருவேன்.

=================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக