ஞாயிறு, 1 டிசம்பர், 2019

காதல் என்றால் என்ன?

காதல் என்றால் என்ன?
===============================================ருத்ரா

நம்ம பொண்ணு ஒரு பையனை
காதலிக்கிறாள்.
என்ன செய்யலாம்?

இது அப்பா.

என்னங்க இது ஒரு கேள்வியா?
நம்ம கல்யாணமும்
இப்படித்தானே நடந்தது.

இது அம்மா.

அப்போ நான்
ஒரு காதலன் மட்டும் தான்.
இப்போ நான் ஒரு அப்பா.

இதுவும் அதே அப்பா தான்.

அதனால அந்தஸ்து அது இதுன்னு
பாக்கப்போறீங்களா?

இது கோபத்துடன் அம்மா.

ஆமாண்டி ஆமா.
கௌரவம் தான் முக்யம்.
இந்த கண்ணராவியெல்லாம்
சரிப்படாது.

இது ஒரு முடிவோடு பேசும் அப்பா.

.................
..................

சரி
நாளைக்கு நமக்கு பொண்ணு பிறந்து
அது காதலிச்சுட்டு வந்து நின்னா
என்ன பண்றதுன்னு
ஜாலியா ஒரு நாடகம் போட்டுப்பாத்தோம்
போகட்டும்.

அடுத்து நம்ம விஷயத்தை என்னன்னு பார்ப்போம்.
நாளைக்கு
நாம நேரே ரிஜிஸ்தர் ஆபீசுக்குப்போய்
நம்ம அப்பா அம்மாவுக்குத் தெரியாம‌
நண்பர்களின் சாட்சியாக‌
கல்யாணம் செய்து கொள்ள வேண்டியது தான்.

காதலன் திட்டத்தை சொல்லிவிட்டான்.
காதலியும்
சரி நாளை நான் எப்போது வருகிறேன்
என்று
உங்கள் செல்லுக்கு செய்தி அனுப்புகிறேன்.
என்றாள்.

அன்று இரவே
அவனுக்கு குறுஞ்செய்தி வந்தது.

"காதல் இனிது.
காதல் இனிதே இனிது தான்.
ஆனால்
எனக்கு மட்டும் அல்ல‌
நாளை இப்படி ஒரு மகளாக‌
காதலுக்கு
கண்ணை கசக்கி விட்டுக்கொண்டு வந்து நிற்கும்
அந்த பெண்ணுக்கும் தான்
இனிது இனிது
இனிதிலும் இனிது.
ஜாலியாக நாடகம் போடுகிறேன்
என்று
நாளைய ஒரு "கௌரவ"வெறி யுள்ள‌
கணவன்
இன்று என் காதலனாக எனக்கு இருப்பது
காதல் ரோஜாவின்
முள் இருக்கும் பக்கத்தை அல்லவா
காட்டிவிட்டது.
ஆயிரம் தான் இதை ஜோக்குக்காக‌
என்று சொன்னாலும்
என் மகளின் நாளைய காதலே
எனக்கு உயிரானது.
அதை ஒத்துக்கொள்ளும்
உண்மையான காதலின் கௌரவத்தை
ஒத்துக்கொள்ளும்
ஒரு கணவனே எனக்கு மேலானவன்
அவன்  என்னை காதலிக்காமலேயே
என் கணவன் ஆனாலும் சரி.

இத்துடன்
"விவாகம் செய்யாமலேயே
ஒரு விவாக ரத்து "
செய்து கொள்ளுவோம்.
...............
அது குறுஞ்செய்தியா? குறு நாவலா?
குழப்பம் அடைந்தான் காதலன்.
அவனுள் ஒரு கேள்வி எழுந்தது.
காதல் என்றால் என்ன?
இப்படியும் ஒரு காதலா?

=======================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக