சனி, 28 டிசம்பர், 2019

சொல் உரித்து .....

சொல் உரித்து .......
========================================ருத்ரா 

சொல் உரித்து 
பொருள் தேட நினைத்தேன்.
வாழ்க்கையின் முழுமை 
பற்றிய உட்கிடக்கையை 
உட்புகுந்து அறிந்து கொள்ள 
நினைத்தேன்.
கடவுள் என்ற 
சொல் தடுக்கி விழுந்தவன் 
எழுந்திருக்கவே முடியவில்லை.
ஒரு வழியாய் 
ஒரு சிலையைப்பற்றிக்கொண்டேன்.
வாழ்க்கையின் 
அசுர அலைகள் அலைக்கழிக்க 
நான் சக்கையாகிப்போனேன்.
பக்தி மூலம் 
உன் சதைப்பற்றுகளை 
பிய்த்து எறிந்து 
அந்த மரணக்கழுகுகளுக்கு 
தீனி ஊட்டு.
உனக்கு ஒரு விடுதலைத்தீ 
பற்றிக்கொண்டது தெரிந்து விடும்
என்றது அடிக்குரல்.
அதற்காக‌
புராணங்களைக்கேட்ட போதும் 
அதே கழுகுகள் தலைக்கு மேலே 
வட்டமிட்டன 
சென்ற பிறவி 
இந்த பிறவி 
எதிர்காலப்பிறவி 
என்று 
ஆயிரக்கணக்காய் 
நான் தடம் பதித்ததை 
சோழிகளை குலுக்கி 
என் கர்ப்ப வாசனைகளையும்
என் சாம்பல் ருசிகளையும் 
பிரசன்னம் பார்த்தேன்.
இந்த மாய நூலிழையில் 
சிலந்திக்கூடுகளே மிச்சம்.

கௌடபாதன் 
மாண்டூக்யோபநிஷத்துக் காரிகையில் 
எதையும் தொடாமல் 
பார் 
உணர் 
அறி 
சுவை 
என்றான்.
எப்படி இந்த மாயம் நிகழும்?
அந்த "அஸ்பர்ஸ யோகம்"பற்றி 
அவன் சொன்னது இது.
"இருட்டின்படலத்தில் 
கொள்ளிக்கட்டையை க்கொண்டு 
எழுதுவது தான் 
பிரம்மத்தின் மொழி."
எழுதும்போதே மறைந்து போவதே 
பிரம்ம எழுத்துக்கள்.
"எதையும் தொடாமல்.."என்றால் 
பிரம்மத்தைக்கொண்டு கூட 
பிரம்மத்தை தொடாதே.
பிரம்மத்தைப்பற்றி 
வக்கிரமும் வர்ணமும் 
கொண்டது அல்லவா 
உன் ஞானம்.
இது வரை கந்தல் ஆக்கியதெல்லாம் 
போதும் 
உன் மண்டையைப்போட்டு 
கசக்காமல் 
"சும்மா இரு" என்கிறானோ?

அந்த தவளை முனிவன் 
"குபுக்கென்று"
ஒரு துரீயப்பாய்ச்சலில் 
நீருக்குள் 
அந்த நாணற்புல் கற்றைகளோடு 
கற்றைகளாய் 
பதுங்கிக்கொண்டான்.

=============================================









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக