தாழ்வாரம்
=================================================ருத்ரா
எந்த அலைகளின் ஆரவாரமும் இல்லாத
கடலோரம் போல்
பேய்களின் மூச்சுகள் மட்டுமே
திமு திமு என்று ஓடும் ஓசைகளோடு
நீளக் கிடந்த தாழ்வாரம் அது!
வெண்காக்கைகள் அலகு பிளந்து
மீன்கள் விழுங்கும் தருணங்கள் இங்கு இல்லை.
சிப்பிக்கூடுகள் கிளிஞ்சல்கள்
தன் கர்ப்பத்தை திறந்து காட்டும் காட்சிகள் இல்லை.
நுரை ஜரிகையிட்டு
நெஞ்சு எலும்பு துருத்தி
நெய்யும் நெசவாள அலைகளின்
தறி முழக்கங்கள் மவுனத்தின்
குறுக்கு நெடுக்கு "ஓடை"களில்
கரைந்து கரைந்து மங்கல் சித்திரங்களை
கந்தல் திட்டுகளாய் வலித்தீவுகளாய்
வார்த்துக்காட்டுகின்றன.
பகலின் மேய்ச்சல் முடிந்து
இரவு அங்கு முளையடிக்கப்பட்டு விட்டது.
சிமிட்டும் தூரத்து நட்சத்திரங்களுக்கும்
இங்கு தான் நங்கூரமா?
புழுக்கத்துக்கு அஞ்சி தூக்கம் தேடி
இங்கே புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருக்கும்
அப்பாவை தேடுகிறேன்.
நடுஇரவிலும்
வெற்றிலைச்செல்லத்தில்
விரல் நுழைத்து
வெற்றிலையும் புகையிலைவிழுதுகளும் சேர்த்து
வாய்க்குள் திணித்து
ஏதோ ஒரு வசந்த நெளியலுக்கு
துருப்பு தேடும் அவரது
அந்த வேட்டையைக்கண்டு
விதிர் விதிர்த்து நோக்குகிறேன்.
வாய் கொப்புளித்து விட்டு
மீண்டும் படுத்துக்கொள்கிறார் அவர்.
விடியலைத்தேடி கனவு பிசையும் கண் மூட்டங்கள்.
எத்தனையாவது விடியல்?
ப்ரைம் நம்பர்களின் ஃபெர்மேட் தியரம் போல்
எல்லைகள் இன்றி
எல்லைகள் உடைந்து
விளிம்புகள் சிதறி
கரைகள் கரைந்து காணாமல் போன
கடல் அது.
வேதாளம் போல் அகன்று
குச்சிகளில் கிளைகளில்
துளித்துளி ஊசி இலைகளிலும்
கண்கள் கூசி விழியைச்சுருக்கும்
அந்த ராட்சச புளியமரத்தின் பேய்ப்புளிப்பு..
அந்த தாழ்வாரத்தின்
நள்ளிரவிலும் வந்து நக்கிக்கொடுக்கும்..
அப்பா அசைந்து கொடுக்கிறார்.
சட்டென்று மார்பில் அடித்த கையில்
ஒலுங்கு எனும் பெருங்கொசு
நசுங்கி விட்டதை அவர் அறியவில்லை.
தூக்கம்
அவர் ஆன்மாவை இஸ்திரி போட்டுக்கொண்டிருக்கிறது.
...........
காலை வெயில்
தாழ்வாரத்தை கழுவி விட்டுக்கொண்டிருக்கிறது.
அப்பா எங்கே?
சூரியச்சிவப்பு
புளிச்சென்று துப்புகிறது.
வெற்றிலை குதப்பும்
அது வெளிச்சமா? நிழலா?
தாழ்வாரம் காலியாக கிடக்கிறது.
=======================================================
15 பெப்ரவரி 2015ல் எழுதியது.
=================================================ருத்ரா
எந்த அலைகளின் ஆரவாரமும் இல்லாத
கடலோரம் போல்
பேய்களின் மூச்சுகள் மட்டுமே
திமு திமு என்று ஓடும் ஓசைகளோடு
நீளக் கிடந்த தாழ்வாரம் அது!
வெண்காக்கைகள் அலகு பிளந்து
மீன்கள் விழுங்கும் தருணங்கள் இங்கு இல்லை.
சிப்பிக்கூடுகள் கிளிஞ்சல்கள்
தன் கர்ப்பத்தை திறந்து காட்டும் காட்சிகள் இல்லை.
நுரை ஜரிகையிட்டு
நெஞ்சு எலும்பு துருத்தி
நெய்யும் நெசவாள அலைகளின்
தறி முழக்கங்கள் மவுனத்தின்
குறுக்கு நெடுக்கு "ஓடை"களில்
கரைந்து கரைந்து மங்கல் சித்திரங்களை
கந்தல் திட்டுகளாய் வலித்தீவுகளாய்
வார்த்துக்காட்டுகின்றன.
பகலின் மேய்ச்சல் முடிந்து
இரவு அங்கு முளையடிக்கப்பட்டு விட்டது.
சிமிட்டும் தூரத்து நட்சத்திரங்களுக்கும்
இங்கு தான் நங்கூரமா?
புழுக்கத்துக்கு அஞ்சி தூக்கம் தேடி
இங்கே புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருக்கும்
அப்பாவை தேடுகிறேன்.
நடுஇரவிலும்
வெற்றிலைச்செல்லத்தில்
விரல் நுழைத்து
வெற்றிலையும் புகையிலைவிழுதுகளும் சேர்த்து
வாய்க்குள் திணித்து
ஏதோ ஒரு வசந்த நெளியலுக்கு
துருப்பு தேடும் அவரது
அந்த வேட்டையைக்கண்டு
விதிர் விதிர்த்து நோக்குகிறேன்.
வாய் கொப்புளித்து விட்டு
மீண்டும் படுத்துக்கொள்கிறார் அவர்.
விடியலைத்தேடி கனவு பிசையும் கண் மூட்டங்கள்.
எத்தனையாவது விடியல்?
ப்ரைம் நம்பர்களின் ஃபெர்மேட் தியரம் போல்
எல்லைகள் இன்றி
எல்லைகள் உடைந்து
விளிம்புகள் சிதறி
கரைகள் கரைந்து காணாமல் போன
கடல் அது.
வேதாளம் போல் அகன்று
குச்சிகளில் கிளைகளில்
துளித்துளி ஊசி இலைகளிலும்
கண்கள் கூசி விழியைச்சுருக்கும்
அந்த ராட்சச புளியமரத்தின் பேய்ப்புளிப்பு..
அந்த தாழ்வாரத்தின்
நள்ளிரவிலும் வந்து நக்கிக்கொடுக்கும்..
அப்பா அசைந்து கொடுக்கிறார்.
சட்டென்று மார்பில் அடித்த கையில்
ஒலுங்கு எனும் பெருங்கொசு
நசுங்கி விட்டதை அவர் அறியவில்லை.
தூக்கம்
அவர் ஆன்மாவை இஸ்திரி போட்டுக்கொண்டிருக்கிறது.
...........
காலை வெயில்
தாழ்வாரத்தை கழுவி விட்டுக்கொண்டிருக்கிறது.
அப்பா எங்கே?
சூரியச்சிவப்பு
புளிச்சென்று துப்புகிறது.
வெற்றிலை குதப்பும்
அது வெளிச்சமா? நிழலா?
தாழ்வாரம் காலியாக கிடக்கிறது.
=======================================================
15 பெப்ரவரி 2015ல் எழுதியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக