வெள்ளி, 9 ஜூன், 2017

என்ன கூச்சல் இங்கே?


என்ன கூச்சல் இங்கே?
=============================================ருத்ரா


கடவுள் கடவுள் என்று
இன்னும் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் கூப்பிடுவதால்
அவர் "கூப்பிடு தூரத்தில்" எல்லாம் இல்லை.
இவர்கள் ஒலிகளே தான்
அவர்களுக்கு மீண்டும் கேட்கிறது.
கண்ணாடியில் இட வலமாக
குழம்பித்ததோன்றுவது போல்
இந்த ஒலிகளும்
தலை கீழாக வாந்தியெடுக்கின்றன!
வேதங்கள் என்கிறார்கள்
பாஷ்யங்கள் என்கிறார்கள்.
மனித சுவடுகள் அச்சடிக்கப்படுவது தான்
சமுதாயத்தின்
இந்த ஒலி ஒளி விளையாட்டுகள்.
சகமனிதனை சாக்கடைப்புழுக்களாய்
ஆக்கும் வர்ண ஸ்லோகங்கள்
நம் நாட்டை சாதிகளின் சகதிக்காடு ஆக்கி விட்டது.
தாமஸோ மாம் ஜோதிர் கமய
என்று
சில அக்கிரஹாரமே
அகில பிரபஞ்சம் என்று மந்திரம் சொல்வதில்
போலித்தனமும் ஏமாற்று வித்தையும் தவிர
வேறு என்ன இருக்கிறது?
ஒரு மனிதன் சக மனிதனை
சாகடிக்க வெறிகொள்வது என்?
மனத்துள் சாக்கடை தேங்க வைத்துக்கொண்டே
"கங்கா ஜல் "என்று
அதை பரப்ப முயலுவதேன் ?
வானம் ஒலித்தால் அது வேதம்.
மனிதன் அதை மீண்டும் ஒலித்தால்
அது வெறும் இறைச்சி
என்று சொல்லும் பிரம்ம சூத்திரம்
மாட்டு இறைச்சிக்குள்
என்ன தேடுகிறது.?
மாடும் அதை வெட்டும் அரிவாளும் கூட
பிரம்ம சமன்பாட்டில்
அபேத வாதமாய் காணாமல் போகும் என்று
அவர்கள் வார்த்தைக்கூளங்கள்
இரைச்சல்கள் இடுவது தாங்க முடியவில்லை.
அஜாதம் அவர்ணம் அமதம் அவ்யக்தம்
என்றெல்லாம் அது
ஒரு மூளி இருட்டு என
ஓய்ந்து போன "அறிவு" இறந்த
இந்த பிணங்கள்
என்னத்தைக் கூப்பாடு போடுகின்றன?
வெங்காயத்தோல்கள் போல
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
கழன்ற பின்னும்
நம் வெறுமை வெட்டவெளிச்சத்தில்
அவமானப்பட்டு நிற்கிறது.
சாதி மதங்களின் ரத்தம் சொட்டும்
சத்தங்கள் இல்லாத தேசமாக
நம் இந்திய தேசம்
எப்போது தோலுரித்துக்கொள்ளப்போகிறது ?





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக