புதன், 14 ஜூன், 2017

உனக்கு ஒரு விண்ணப்பம்  (கவிதை)


உனக்கு ஒரு விண்ணப்பம்  (கவிதை)
===============================================ருத்ரா

கடவுளே
உனக்கு ஒரு விண்ணப்பம்.
வேண்டுதல் வேண்டாமையின்றி
எல்லோருக்கும் நீ
அருள் புரிவாயாமே!
அது போல் எனக்குள்ள
பங்கையும் எனக்கு கொடுத்து விடு.
நான் நாத்திகன் என்பதற்காக‌
என்னக்குள்ளதை
நீ மறுக்க மாட்டாய் என்றும்
எனக்குத்தெரியும்.
அதே போல் ஏதாவது தண்டனை
கொடுப்பதானாலும் கூட‌
எனக்கு ஆத்திகர்களை விட‌
அதிகப்படியாக தண்டனை
கொடுக்கமாட்டாய் என்றும் தெரியும்.
நீ இல்லை என்று
சொல்வதில் தான் முதல் ஞான பாடம்
ஆரம்பிக்கிறது.
தர்க்கங்களை ஸ்லோகங்களாக்கி
மூட்டை மூட்டையாக குவித்தாலும்
நீ இல்லை
என்பது
உனக்கும் எனக்கும் மட்டுமே தெரியும்.
இதை வெளிப்படையாகச் சொன்னால்
நான் ஏதோ சாக்கடையைக்கொண்டு
உன்னை அபிஷேகம் செய்வதாகச் சொல்லி
என்னை
கண்ட துண்டமாக வெட்ட
ஓடி வருகிறார்கள்.
உனக்கு சிரிப்பு வருகிறது.
உனக்குள் நீ சிரித்துக்கொண்டிருப்பது
எனக்கு மட்டுமே கேட்கிறது.
நீ இல்லை என்பதைத்தான்
தத்வம் அஸி என்றாய்.
"உன்னுள்ளே இருக்கிறது அது"
என்று பொருள் சொன்னாய்.
ஒரு கண்ணாடியைப்பார்த்து
இதைச்சொன்னாயோ?
நீ நான் அது போன்ற பிம்பங்கள்
அதில் குழம்பிபோனது.
அஹம் ப்ரஹ்மாஸ்மி என்று
நான் பிரம்மமாய் இருக்கிறேன்
என்று ஒரு கோடு காட்டினாய்.
அப்போது
"நான் கடவுள் இல்லை என்று சொன்னாலும்
நான் தான் கடவுள்!"
நான் கடவுள் என்று சொன்னாலும்
நான் கடவுள் இல்லை."
நான் என்று நீ உன்னைச்சொன்னபோது
உன் முன் நீ என அழைக்கும் நான்
என்னவாக இருப்பேன்?
இந்த இலக்கணங்கள் உடைந்து போவதும்
பெரியார் பிள்ளையார்களை உடைப்பதும்
ஒன்று தான்.

கீதையில் கிருஷ்ணன் எல்லாம்
நானே நானே என்கிறான்.
இதுவே நாத்திகத்தின் உரத்தகுரல்.
கடவுள் நான் இல்லை.
கடவுள் நீ இல்லை.
கடவுள் அவன் அவள் அல்லது அதுவும் இல்லை.
இது தான்
வேதங்கள் பாஷ்யங்கள் கனபாட்டம் எல்லாம்
கசக்கிப்பிழிந்து பார்த்ததன் முடிவு.
இந்த "இன்மை" "வெறுமை"யை
உரித்துப்பார்க்க‌
ஒரு குவாண்டம் கம்பியூட்டிங்க் பார்வை வேண்டும்.
எனவே நாத்திக குவாண்டம் மூலம்
எல்லா படலங்களிலும்
ப்ரேன்ஸ் காஸ்மாலஜி எனும்
சவ்வு ஆற்றல் துடிப்புகளைக்கொண்டு
உள் நுழைந்து பார்க்கலாம்.
"இல்லை""இல்லை".....என்று
உன்னை நீ பிரகடனம் செய்கிறாய்.
அவர்களோ
பொருளற்ற சொற்களை
உன் வெறுமை விளிம்பின் உருவத்தில்
பஞ்சாமிர்தமாக‌
அப்பி அப்பி ஒத்தியெடுத்து
நக்கிப்பார்க்கிறார்கள்.
ஓ..இவர்கள் நாக்கில் இனிக்கிறது.
கல்லில் ஏது? இனிப்பும் கரிப்பும்!

===================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக