புதன், 7 ஜூன், 2017

கலைஞருக்கு வைரவிழா


கலைஞருக்கு வைரவிழா
==============================================ருத்ரா

கலைஞருக்கு
அவர்கள் நடத்தியது
வைர விழா.
மற்றவர்களும்
அவருக்கு நடத்தினார்கள்
"வைய்யிர" விழா.
வைய வைய வைரக்கல் தான் அவர்!
திராவிடம் என்ற சொல்லே
திராவகம் ஆனது தமிழ் எதிர்ப்பாளருக்கு!
அதில் பொசுங்கிய பண்பின் நாற்றம்
இன்னும் தெரிகிறது.
மதம் என்றால்
யானைக்கு ஒழுகும் வெறி நீர்.
அதுவே மனிதனுக்குச் சுரந்தால்
மனிதனையே தின்றுவிடும் மதம் அது!
வலுத்தவன் எளியவனை
தூக்கிப்போட்டு மிதிக்கும்
"சனாதனமே " தான் அந்த மதம்.
அதைக்காப்பதற்கே தான்
காவிக்கொடி!
கற்கோவில்களில் இருக்கும்
கடவுள் அடையாளங்களால்
உள்கசியும் ஞானவிளக்கை அவிப்பதே
காவி மதம்.
நியாய வைசேசிகம்
கீற்று கீற்றுகளாய்  பிளந்து அலசுகிறது.
ஒன்றுமே இல்லாதவன் தான் இறைவன் என்று .
அடையாளங்கள் ஏதும்
காட்டப்பட இயலாதவன் தான் இறைவன் என்று.
அப்படி இருக்கும் போது
உங்கள் பிள்ளையார் சுழியே
ஏன் ஒரு நாத்திகமாய் இருக்கக்கூடாது?
ஆம்
அறிவு துளிர்க்க
கடவுள் எனும் அறியாமையின் தொடக்கம்
ஒரு தடைக்கல்!
காரணம் இல்லாததற்கு
படைப்பின் காரியம் இல்லை என்று
சொல்பவன் மட்டும் அல்ல நாத்திகன்.
சுழியம் எனும் ஸீரோ
எல்லையின்மை எனும் இன்ஃபினிட்டி
இரண்டையும் கணிதம் ஆக்கி
அறிவுப்பிழம்பை கூறு போடுபவனும்
நாத்திகன் எனும் விஞ்ஞானியே !
படைப்புக்கு
காரணம் இல்லை என்றால்
அதற்கும் முன்னே... அதற்கும் முன்னே...
என்று சிந்திப்பவன்
மனிதன் மட்டுமே.
இப்படி சிந்திக்கவைப்பது  கடவுள்
என்று நம்மை மழுங்கடித்துக்கொள்வதை விட‌
இப்படி சிந்திக்க  வைப்பதும்
நாத்திகத்திற்கு சுரங்கம் தோண்டுவதும்
அறிவு என்பதே தமிழனின் தாகம்.
கலைஞர் அதற்கு ஒரு ராஜ பாட்டை
அமைத்துக்கொடுத்தற்கு தான்
இந்த வைரவிழா.
திராவிடம் நாத்திகம் இல்லை.
ஆனால் திராவிடம்
ஆதிக்கத்தை தகர்க்க வந்த‌
வரலாற்றுச்சிற்றுளி.
அது பிளந்ததில்
மனிதன் மனிதனை விலங்குபூட்டும்
அமைப்பு பொடிப்பொடியானது.
அதனால் தான் அவர்களுக்கு
நாத்திகம் அரிப்பு எடுக்கும் உணர்ச்சி  ஆயிற்று.
ஒன்றுமில்லை என்று சும்மாயிருங்கள்
என்று தியானத்துக்குள்
அமுக்குவது ஆழமான
உளவியல் பாடமாக இருக்கலாம்.
அதற்காக மனிதன் வெறும் கல்லுளி மங்கன்
ஆக வேண்டியதில்லை.
கல் எனும் கல்லுதல் அவனுள் பொறி கிளர்ந்தது.
கல்லில் தீக்கடைந்தான்.
தீயின் உள்  புகுந்து ஆற்றல் கண்டான்.
அதனால் தீவன் ஆகினான்.
இவனே தேவன் ஆகினான்.
ஆகவே மனிதனே  தேவன் !

நாம் சுதந்திரம் கேட்டபோது
எல்லாக்கதவுகளின் பூட்டையும்
உடைக்கச்சொன்னோம்.
பிரம்ம ரகசியம் உடைக்கப் படக் கூடாது
என்றார்கள் காவிக்காரர்கள்.
அது என்ன பிரம்ம ரகசியம்.?
மீண்டும் அதே அதே!
வர்ண  வியாக்கியானங்கள்
புருஷ சூக்தங்கள் பாஷ்யங்கள் எல்லாம்
அந்த பிரம்மரகசியத்தை
பொட்டலம் கட்டி
இந்துத்வா என்று வியாபாரம் செய்கிறது.
வலுத்தவன் எளியவனை வாகனமாக்கிக்கொள்வதே
அவர்களின் சாணக்கிய நீதி.
அதனால் தான்
சாதி மத வெறியாட்டங்களை
சமாதியாக்க வந்த
இந்த சமநீதி
அவர்களுக்கு
இன்னும் பீதி பீதி பீதி!
வாக்கு வங்கிக்குள்ளும்
இங்கு தந்திரங்களின் ஆட்சி தான்.

கலைஞர்
சமுதாய மலர்ச்சிகளைகளைக்கொண்டு
நம் தமிழ் மொழியின்
வரலாற்றுப்பயணத்துக்கு
மைல் கற்களை நட்டு வைத்தார்.
இன்று அவரே ஒரு "வைர "மைல் கல்லாய்
நின்று
பல திருப்புமுனைகளுக்கு
வழி காட்டி நிற்கிறார்.
திராவிடம் இன்னும் நம்
வற்றாத உணர்சசிகளின் ஆறு தான்.
நம் தமிழ் எழுத்துக்களே
நம் எழுச்சிகள்.
கலைஞர் "புன்னகை"
புன்னகை மட்டும் அல்ல.
சாதி சமய பிளவு வாதங்களை
சாய்க்க வந்த புயல்.
தமிழே
கை  முளைத்து கால் முளைத்து
புது யுகம் தழைக்கும்
மூச்சுகளின் நாற்றுகள் கொண்டு
வீச வந்த புயல்
நம் கலைஞர் !
தொடரவேண்டும் அவர் தொண்டு !
வாழ்க !வாழ்க! கலைஞர்!
அவர்..
நீடூழி நீடூழி வாழ்க !

=========================================================
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக