ஞாயிறு, 25 ஜூன், 2017

அம்மாவும் அம்மாவும்

அம்மாவும் அம்மாவும்
====================================ருத்ரா


விலையில்லா
ஆடு தந்தாய்.
விலையில்லா
மிக்ஸி தந்தாய்.
விலையில்லா
ஒரு அம்மாவை
உன்னால் தரமுடியுமா
அம்மா?
நீ ஹெலிகாப்டரில் சென்றால்
உனக்கும் மேலே
இருக்கும் அந்த சந்திரன் கூட‌
பூமியில் கீழே விழுந்து
உன் நிழல்மீது
நெடுஞ்சாண் கிடையாய்
சாய்ந்தால் தான்
சீட்டு தருவாய்.
சர்வாதிகாரம் என்ற அம்மா
ஜனநாயகம் என்ற அம்மாவை
முள்முடி சூட்டி
சிலுவையில் தான்
அறைந்து பார்த்தாள்.
தட்டில் நீ
இட்டிலி எறியலாம்.
அவை மக்கள் இதயங்கள்.
அவர்கள் இதயங்களை
அவர்களுக்கே தின்னக்கொடுக்கும்
உன் சாணக்கியம் கூட‌
மன்னிக்கப்படுகிறது
இந்த ஜனநாயக அம்மாவால்.
அம்மா என்று
மாயமாய் ஒரு
கோரைப்பல் காட்டும்
கோலங்கள் எல்லாம்
நிறுத்தப்பட்டால்
காயம் பட்டு
ரத்தம் வடியும்
இந்த அம்மா கூட‌
அந்த அம்மாவுக்கு
கருணை காட்டலாம்.

உச்சநீதி மன்றத்தின்
சிறைக்கம்பிகளைத் தொடுவதை விட‌
அந்த மரண தேவனின்
மாயச்சிறைக்கம்பிகளை
"ஸ்பரிசிப்பதே" மேல் என்று
அமரத்துவம்
அடைந்து விட்டாய் அம்மா!
அந்த மெரீனா காற்றும்
உன்னைக் கழுவித் துடைத்து விட்டது.
இவர்களோ
கை நிறைய ரோஜா இதழ்களைக்கொண்டு
உன்னை மூடி வைத்துவிட்டு
ஜனநாயகச் சுவடே இல்லாத‌
ஒரு கூவாத்தூர் நிழலில்
கும்மி அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அம்மா அம்மா அம்மா என்று
உன்னைச்சொல்லித்தான்
ஒரு நிழல்கூத்து
நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
ஓட்டுவங்கிகளுக்குள்
டிராக்குலாக்கள் பயமுறுத்தும்
அந்த தேர்தல் விளையாட்டையே
இவர்களும் விளையாடுகிறார்கள்.
புனிதமாகி விட்ட அம்மாவே
புழுதி பறக்கும் லஞ்சம் தோய்ந்த‌
அந்த பாதையை
சிதைத்து அழிக்கும் ஒரு
புதிய அம்மாவாய்
புறப்பட்டு வா அம்மா!
"அம்மனோ சாமியோ"..என்று
ஒருபடத்தில்
தலைவிரி கோலமாய் வந்து
பம்பை அடித்தாயே
அதே போல்
ஆவியாகவாவது
வா அம்மா வா!

=================================================








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக