வியாழன், 22 ஜூன், 2017

தாகம்

தாகம்
==============================================ருத்ரா

தெரு வெறிச்சிட்டு கிடக்கிறது.
வெயிலின் வெண்மை நாக்கு நக்கி கொடுத்ததில்
தூசு தும்புகள் கூட மினுமினுத்து
கதிர் வீசின..வெப்பம் கக்கின.
வழக்கமான கோடையின் புலம்பல்
சூரியனை நோக்கி காறி உமிழ்ந்தது.
சன்னல் கம்பிகளில்
பாம்பு மூச்சுகள் சுற்றிக்கிடந்தன.
தாகத்தை தர்ப்பூசணிகளில்
அறு கோணமாய் எண் கோணமாய்
ஒரு குங்கும ஜியாமெட்ரியில்
கொலு வைத்திருந்தார்கள்.
அடங்காத தாகம் அருகே இருந்த‌
தூங்குமூஞ்சி மரத்தின்
பஞ்சு மிட்டாய்ப்பூக்களில் கூட‌
உதடு சப்பிக்கொண்டிருந்தது அருவமாய்.
இயற்கையின் நதிகள்
மனிதன் கைகளின் கசாப்புக்கத்திகளில்
சின்னா பின்னம் ஆனதில்
பத்து பன்னிரெண்டு டி.எம்.சி என்றெல்லாம்
புள்ளி விவரம் வந்த போதும்
அத்தனை டி.எம்.சி யும் தண்ணீர் அல்ல‌
இன்னும் அது
நம் கண்ணீர் தான்.
நம் மண்ணின் தாகத்துக்கு
பூட்டுக்கு மேல் பூட்டுகள் போடும்
அணைக்கட்டுகள் எனும் மகிஷாசுரன்களை
கர்ப்பம் தரித்துக்கொண்டிருப்பதே
கர்நாடகம் எனும் துர்நாடகம்.
பேச்சு வார்த்தை மூலம்
இரு மாநிலங்களிலுமே
தேன் ஆறு ஓடலாம்.
பாலாறு ஓடலாம்.
சிந்தனையில் பாழாறு ஓடுகிறதே.
ஓட்டு வங்கி எனும்
புற்று நோய்க்கிடங்கில்
மனித நேயம் செத்துக்கிடக்கிறதே!
சர்வாதிகாரத்தின் கொடூரங்கள் எல்லாம்
கறுப்பு பணத்திலும் லஞ்சத்திலும்
ஜனநாயக முகமூடி போட்டுக்கொண்டதால்
இங்கு
ஜனங்களும் இல்லை.
நியாயங்களின்
நாயகங்களும் இல்லை.
=====================================================
18/04/2015ல் எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக