ஞாயிறு, 11 ஜூன், 2017

ஊசி மழை


ஊசி மழை
==============================================ருத்ரா

கழியும் நாட்களை
கூட்டுகின்றேன்
மீண்டும் என் மன ஸ்லேட்டில்.
கரைந்துகொண்டே வரும்
கனவுகளால் தான் கணக்கு போடுகிறேன்.
துன்பங்களால்
வகுத்த பின் கிடை க்கும்
ஈவுகளும் மிச்சங்களும்
என் வாழ்க்கையின் காலடிச்சுவடுகளில்
எழுதப்படுகின்றன.
நடக்கும் கால்களின் அடியில்
சருகுகளாய் சர சரப்பது
ஆள் அரவமற்ற அடர் வனத்தை
என் தோள்களில் ஏற்றுவது
நன்றாகவே தெரிகிறது.

என் உள்ளத்தின் சல்லாத்துணியை
இந்த மௌனம்
குத்தி குத்தி
என் மீது
ஒரு ஊசிமழையை
பெய்துக்கொண்டிருக்கிறது.

என்னைச்சுற்றிய சூழல் மீது
எப்போதும் காறி உமிழத்தோன்றுகிறது.
மனிதம் எனும் பொருண்மை
ஊழல் எனும் தின் பண்டங்களால்
வெறும் பொரிவிளங்காயாக ஆகி விட்டது.
சாதியும் மதமும்
ஏற்றிய விஷ ஊசிகளில்
மானிடத்துள் இயல்பாய் சுரக்கும்
அன்பு முறிந்து போனது.
ஒரு ஏழை விவசாயி கூட
நெஞ்சு எலும்பு துருத்த துருத்த
மண்ணை நெல்லாக்கி சோறாக்கி
வளர்த்த தன் பெண் பிள்ளை
காதலில் விழுந்து
தன்னை விட தாழ்ந்த சாதியின்
இளைஞனை வரித்து விட்டாள்
என்பதற்காக
தன் பெண்ணையே
கண்ட துண்ட மாக
வெட்டிபோடும்
வெட்டரிவாள் "சனாதனமாக"
அல்லவா
நஞ்சு பாய்ச்சி  வைத்திருக்கிறது.
இந்த சாதியும் மதமும்.

அந்த "நஞ்சுண்ட" சிவனுக்கு
வந்த நஞ்சு கூட
பாற்கடல் கடைந்து வந்ததல்ல !
சாதி மத கசமாலங்களே
நஞ்சாய் திரண்டு
அவன் தொண்டையில் சிக்கி
அவனை நீலகண்டன் ஆக்கியது.
இன்னும் இவர்கள்
செய்யும் கௌரவக்கொலைகள் எல்லாம்
அந்த சிவபெருமான்களைத்தான்.

ஆணுக்கும் பெண்ணுக்கும்
சம பாகம் அளித்த
அந்த சிவனைச்சும்மா விடுவதா?

கடவுளாயிருந்தாலும்
அவன் திராவிடனாயிருந்தால்
வரலாற்றுச்ச்சேற்றுக்குள்
புதைத்து
வெற்று இரைச்சல் வேதங்களால்
மூடிவிடுவதே
இவர்கள் சாஸ்திரங்களின்
குப்பைகளைக்கொண்டு தான்.

நந்தனாய் சிவன் அவதாரம் எடுத்தாலும்
அவனையும் நசுக்கி கூழாக்கி
அழிக்கமுனைந்தவர்கள் தானே
இந்த வேதக் கூப்பாட்டுக்கும்பல்கள்.
ஆம்!
தமிழர்களே!
கோவில்கள் கூட
நம் வரலாற்றுக்கண்ணாடிகள் தான்.
அவற்றில் சாதி மத பூச்சாண்டிகள் காட்டும்
இந்த அற்பர்களை
அப்புறப்படுத்துவதே
நம் தமிழ்ப்பணி.
புறப்படுங்கள்! புறப்படுங்கள்!
அர்ச்சனை டிக்கட்டுகள் வாங்க அல்ல!
கோவில்களின்
இருட்டு மூலைகளுக்குள்
அறிவுக்கதிர் வீச்சுகளை  அலை விரிக்க!

====================================================
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக