திங்கள், 26 ஜூன், 2017

முகம்

முகம்
============================================ருத்ரா

நான் உன் முகத்துக்காக‌
ஏங்குகிறேன்.
அன்று முகம் காட்டினாய்
அனால்
உன் முறுவல் மட்டுமே
மின்னல் இழையில் நெய்த‌
திரையாகி என்னை மறைத்தது.
மீண்டும்
அன்று உன் முகம் பார்த்தேன்.
என் பார்வை உன் முகத்தில்
படருமுன்னேயே
உன் கண்விழிகள் எனும்
கருந்துளை (ப்ளாக் ஹோல்)
விழுங்கிய
பிரபஞ்சம் ஆனேன்.
இன்று தான் உன் முகம் பார்த்தேன்.
என் அன்பின் ஆழங்காணா
ஒரு ஆழம் கண்டேன்.
ஆயிரம் கவிதைகள்
ஒன்று திரண்டு
அமெரிக்காவின் ஒக்லஹாமாவில்
ஏற்படும்
"சுழல் புயல்" (டோர்னடோ) போல்
உன்னை
என்னை
இந்த சூழலின்
பின்னணியில் உள்ள‌
அந்த ராட்சசவீடு
மரங்களின் காடு
எல்லாவற்றையும் பிய்த்துப்போட்டுவிட்டது.
நானும் தான் பிய்ந்து கிடக்கிறேன்.
நீ எங்கோ தொலைதூரத்திலிருந்து
ஓடிவருகிறாய்.
அப்படி யென்றால்
இப்படி பிய்ந்து கிடப்பது
நம் உள்ளங்களா?
அதோ தூரத்தில்
கரும்புள்ளியாய் ஓடி  வருகிறாய்.
வேண்டாம் ....போதும்.
உன் முகத்தை பார்க்க
எப்படி ஆயத்தப்படுத்திக்கொள்வது?
சரி!
முகத்தை முழுதும் பார்க்க வேண்டாம்.
அந்த அழகிய நெற்றியில்
புரளும்  உன் கூந்தல் கீற்றுகளை
பார்த்துவிட்டு
கண்களை மூடிக்கொள்கிறேன்.
அருகில் வந்து விட்டாய்.
நான் இமைகளின் இடுக்கில்
அந்த கூந்தல் கற்றையை
உற்று நோக்குகிறேன் ...
ஐயோ ..ஐயோ
அத்தனையும் கொடிய நாகங்கள் ..
கூரிய  வளைந்த பற்களோடு..
பிளந்த நாக்குகளோடு ....
அந்த கிரேக்க அழகிய ராட்சசி
மெடுஸாவா நீ!!..
மயங்கி விறைத்தேன் !
....................................
..................................

"டேய்..அப்படி என்னடா பாட்டு கேட்டு
இப்படி அசந்து துவங்கிக்கிடக்கிறாய்..
எழுந்திரு..
கல்லூரிக்கு  நேரமாச்சு!"

அம்மா எழுப்பினாள் ..
ஆமாம் அது என்ன பாட்டு...
பட்டன் தட்டினேன்
"அழகான ராட்ஸசியே ..."

==================================================
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக